வவுனியாவில் குளத்தை பார்வையிட சென்ற மாணவன் மாயம்: தேடுதல் பணி தீவிரம்.
வவுனியாவில் நீர்த்தேக்கத்தை பார்வையிட சென்ற மாணவன் மாயம்: தேடுதல் பணி தீவிரம்.
வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவனொருவர், நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல்போயுள்ளார்.
அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக, வவுனியா பேராறு நீர்தேக்கம் நிரம்பியதுடன், மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி வருகின்றது.
இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமுள்ளனர்.
இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக தி.தனுசன் எனும் பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளைஞர், தனது நண்பர்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் அங்கு சென்றுள்ளார். இதன்போது நீர் வழிந்தோடும் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த அவரது நண்பர்கள், நீரினுள் இறங்கிய இளைஞரை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸாருடன் இணைந்து கிராம மக்களும் இளைஞரை தேடும் பணியை இரவிரவாக முன்னெடுத்தனர்.
ஆனாலும், தேடுதல் பணி தோல்வியுற்றிருந்த நிலையில் காணாமல் போன இளைஞனை இன்றும் எட்டு மணி தாெடக்கம் கடற்படையினர், பொலிஸார், இராணுவம் மற்றும் கிராமத்து இளைஞர்கள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போதும்இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே தொடர்ந்தும் தீவிரமாக தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.