யாழில் அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் போது மற்றும் புரேவி தாக்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் வெள்ளத்தின் தாக்கத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கும் மக்களின் நிலை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா, பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சுகாதார துறையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் புரெவி புயல் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அதனுடைய தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கும் அதேபோல் இயல்பு நிலையை மீள கட்டியெழுப்புதல் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இன்றைய ஒரு அவசர கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .
இதற்கு அத்தியாவசிய பங்காளர்களை மாத்திரம் அழைத்து கலந்துரையாடினோம். இக் கலந்துரையாடலில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதிக வெள்ளம் காரணமாக வீடுகளில் தங்க முடியாதவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாடசாலைகளை, தற்காலிக நலம்புரி நிலையங்களை மூடி அல்லது இடம் மாற்றி பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் , பாடசாலைகளை சுத்தப்படுத்தி இயல்பு நிலையை மீள ஆரம்பித்தல்,அதேநேரம் சுகாதார நடவடிக்கைகளை அங்கு உறுதிப்படுத்திக் கொள்ளுதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டது. மேலும் இந்த நடவடிக்கைகளை பிரதேச செயலர்கள் மற்றும் உள்ளுராட்சி சபையினரின் உதவிகளை பெற்று அதனை செயல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.கல்வித் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களத்தினரின் உதவியுடன் இதனை செயற்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்குதல் போன்ற விடயங்களும் பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவைகள் பற்றியும் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போதுள்ள வளங்களைக் கொண்டு எவ்வாறானஉதவிகளை மேற்கொள்ள முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீர் வடிந்து ஓடாத நிலைமை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.இதற்கு உள்ளூராட்சி சபை முயற்சி எடுத்தும் அதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக மக்களின் சமூக அக்கறையற்ற செயற்பாடு காரணமாக இந்நிலைமை ஏற்பட்டிருப்பது இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் உள்ளூர் அதிகார சபையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கழிவுப்பொருட்களை வீசுதல், வடிகால்களை மூடுதல் அல்லது தேவையற்ற பொருட்களை பொது இடங்களில் வீசுதல் போன்ற செயற்பாட்டை மேற்கொள்ளும் காரணத்தினாலும், வடிகால்களை சட்டவிரோதமாக தடுப்பதும் வெள்ள நீர் தேங்கும் அவல நிலை ஏற்படுகின்றது.
இந்த விடயத்தில் யாழ் மாநகர சபை மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் இடர் ஏற்பட்ட பகுதிகளில் அதனை செயற்படுத்தியதை காண கூடியதாக இருந்தது.இயற்கையாக வெள்ளநீர்வழிந்தோட கூடிய வடிகால் களையும் அதேபோல் வீதிகளை அமைக்கும்போதும் விசேட கவனம் எடுத்து அதை பராமரிப்பதற்கும் வெள்ள வாய்க்கால் மூடப்படாது அவற்றைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.யாழ் மாநகர சபை இந்த விடயங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது வெள்ளநிலைமையை சமாளிக்க கூடியதாக இருக்கும்.
மேலும் புயல் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் விவசாயம், மீன்பிடித்துறை துறையில் ஏற்பட்டிருக்கின்ற சேதவிபரங்கள் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்பற்றிய விவரங்கள் கடல் அரிப்பு, ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் ,கல்வித் துறை சுகாதாரத்துறை ,மின்சார சபை போன்ற பல்வேறுபட்ட தரப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து ஒரு துரித மதிப்பீடு அறிக்கை ஒன்று தயாரிக்குமாறு பிரதேச செயலாளர்களுக்குஅறிவித்திருக்கின்றோம்.அதன் அடிப்படையிலே எதிர்காலத்தில் உடனடியாக சீர் செய்ய வேண்டியவற்றை உடனடியாகவும் ஏனையவற்றை அதனை உரியவாறுசெயற்படுத்துவதற்கு உரிய தகவலைப் பெற்று அதனை செயற்படுத்துவதற்கு உள்ளோம் என மேலும் தெரிவித்தார்.