சிறைச்சாலைக் கொலைகளை தடுத்து நிறுத்துவது அவசியம் : முன்னாள் எம்.பி. சரவணபவன் வலியுறுத்து
“அரசின் சிறைச்சாலையில் – சிறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கைதிகள் சிறை அதிகாரிகளாலும், விசேட அதிரடிப் படையினராலும் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள்.”
– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“அண்மையில் மஹர சிறைச்சாலையில் நடந்த அசம்பாவிதங்களில் 11 கைதிகள் கொல்லப்பட்டும், 115 கைதிகளும், 2 சிறை அதிகாரிகளும் காயப்படுத்தப்பட்டுமுள்ளனர். அவர்களில் 28 கைதிகள் ஆபத்தான நிலைமையில் உள்ளனர். இந்தச் சம்பவம் எம்மைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சிறைச்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வெண்டும் என்று கைதிகள் கோரினர் என்றும், அது மறுக்கப்பட்டதாலேயே அவர்கள் சிறையை விட்டு வெளியேற முயன்றனர் என்றும் கூறப்படுகின்றது.
அப்போது நடந்த குறைந்தபட்ச பலப் பிரயோகத்தில் கொலைகள் நடந்துள்ளன என்று சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் கூறியிருக்கும்போது, அமைச்சர் விமல் வீரவன்ச, கைதிகள் குழப்பம் விளைவித்தமைக்கு கொரோனா தொற்றுக் காரணம் அல்ல, மனநோய்க்குப் பாவிக்கும் மாத்திரையை உட்கொண்டு வெறிப்பிடித்து வன்முறைகளில் ஈடுபட்டன என்று கூறியுள்ளார். அத்தகைய மாத்திரைகள் யாரால்? ஏன் கொண்டுவரப்பட்டன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால், கொல்லப்பட்ட கைதிகளில் பலருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. காயமடைந்தவர்களில் பலருக்கும் தொற்று இருக்கின்றது. கைதிகள் கொரோனா உயிர் அச்சம் காரணமாகவே வன்முறைகளில் இறங்கினர் என்ற கூற்றை இலகுவில் மறுக்க முடியாது.
1983 இல் வெலிக்கடைச் சிறையில் அரசியல் கைதிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டமை, 2012 இல் அங்கு இடம்பெற்ற கலவரத்தில் 25 கைதிகள் கொல்லப்பட்டமை போன்ற முறை மீறல்களுக்கு இன்று வரை நீதி கிட்டதா நிலையில், மற்றுமொரு சம்பவம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த அசம்பாவிதங்களுக்கான மூல காரணங்களையும், அவற்றுக் காரணமானவர்களையும் இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். அதன்மூலமே எதிர்காலத்தில் இவ்வாறான சிறைச் சாலைப் படுகொலைகள் நடப்பதைத் தடுக்க முடியும்” – என்றுள்ளது.