கந்தர மீன்பிடி துறைமுகத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பம்!
கந்தர மீன்பிடி துறைமுகத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பம்!
கந்தர மீன்பிடி துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (2020.12.06) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
300 மீட்டர் நீளமான பிரதான நங்கூரமிடும் தளத்தை கொண்ட உத்தேச மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 400 பல நாள் மீன்பிடி படகுகள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தலாம்.
உத்தேச மீன்பிடி துறைமுகத்தை அமைப்பதன் ஊடாக பெரும்பாலான மீனவர்களுக்கு அதன் மூலம் வாழ்வாதாரம் ஏற்படுத்தப்படுவதுடன், அதன் மூலம் மீனவ சமூகத்தினரின் மீனவ நடவடிக்கைகளுக்கு நன்மையளிப்பதாக அமையும்.
இதன் கட்டுமான பணிகளை 36 மாதங்களுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 6667 மில்லியன் ரூபாயாகும்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய கௌரவ பிரதமர்,
கந்தர மீன்பிடி துறைமுகக் கட்டுமானப் பணிகளின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க கிடைத்தமை மகிழ்ச்சியான விடயமாகும். நாம் எமது காலம் முழுவதும் மீனவ சமூகத்தினருக்கு ஆற்றிய சேவையில் இன்றைய தினம் புதிய அத்தியாயமொன்று இணைக்கப்படுகிறது.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், நாட்டில் முன்வைத்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் மீனவ சமுதாயத்தினரின் வளர்ச்சி குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நாடு முழுவதிலுமுள்ள மீனவர்களை மேம்படுத்துவதும் அவர்களது குடும்பங்களை வலுப்படுத்துவதும் அதில் உள்ளடங்கும். கந்தர பிரதேசத்திற்கு துறைமுகமொன்;று அமைக்கப்படாமை பாரிய குறைப்பாடாக இருந்தது. இப்பிரதேசத்திற்கு மீன்பிடி துறைமுகமொன்று கிடைப்பதன் மூலம் மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
நாம் எப்போதும் மீனவ சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம். அதனால் ராஜபக்ஷர்களுக்கும் மீனவர்களுக்கும் இடையிலான இணைப்பு எவ்வாறானதென்று வரலாற்;றை அறிந்தவர்கள் அறிந்திருப்பர். இலங்கையில் மீன்பிடி துறைமுகங்கள் அதிகளவு அமைக்கப்பட்டமை 2005 – 2015 வரையான எமது ஆட்சி காலத்திலாகும். அக்காலப்பகுதியிலும்; இன்று போலவே மீனவர்களுக்காக வழங்கக் கூடிய உச்ச நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கை எடுத்தோம். மீனவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுத்தோம். தற்போது அதனவிட முன்னோக்கி அவர்களை கொண்டு செல்வதே அவசியமாக உள்ளது.
2005-2015 காலப்பகுதியில் மீனவர்களை வருமான வரியிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுத்தோம். எனினும், 2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் மீனவர்களுக்கு வருமான வரியை சுமத்தியது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக நாம் மீண்டும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மீனவர்களை வருமான வரியிலிருந்து விடுவித்துள்ளோம்.
அத்துமீறிய இந்திய மீனவர்களின் பிரச்சினை காரணமாக எமது மீனவர்கள் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல தசாப்த காலங்களாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வை பெற முயற்சித்தாலும் மீண்டும் மீண்டும் இப்பிரச்சினை தோற்றம் பெறுகின்றது. அதனால் அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் அவரது கவனத்திற்கு கொண்டு சென்றேன். இந்தியாவுடன் கலந்துரையாடி எமது மீனவர்களுக்கு துரித தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் என்ற ரீதியில் முயற்சித்து வருகிறோம். அமைச்சரவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இது தொடர்பில் எதிர்காலத்தில் நேரடியாக தலையிடுவதாக தெரிவித்துள்ளார்.
இத்துறைமுக கட்டுமான பணிகள் நிறைவடையும் போது 300 – 400 பலநாள் மீன்பிடி படகுகளை இங்கு நிறுத்தி வைக்கலாம். அதுமாத்திரமின்றி பிற சிறு படகுகளுக்கு இங்கு இடம் ஒதுக்கப்படும். மீன்பிடிக்கான அத்தியவசிய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து இதன் மூலம் உயர் தர மீன் உற்பத்தியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் திட்டம்.
அத்துடன் இந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுவதன் ஊடாக இப்பிரதேசம் பொருளாதார மையமாக்கப்படும் என்பது எமது நம்பிக்கையாகும். கடல்வழி பயணிகள் போக்குவரத்து, சுற்றுச்சூழல் சுற்றுலா மீன்பிடி, கடல் பாதுகாப்பு கண்காணிப்பு நவடிக்கை மற்றும் ஆயுள் காப்புறுதி நடவடிக்கைகள், மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் துறைமுக அபிவிருத்திக்கு இணையான இப்பிரதேசத்தின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகின்றன.
எதிர்க்கட்சிகள் அடிப்படையற்ற கதைகளை கூறி முதலை கண்ணீர் வடித்து வருகின்றன. மீனை உட்கொள்ள வேண்டாம் என அரசாங்கம் அறிவித்தவுடன் அவர்கள் போலி பிரசாரங்களை முன்வைக்க ஆரம்பித்துவிட்டனர். மீனவ சமுதாயத்தினர் இவ்வாறான போலி பிரசாரங்களுக்கு சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என்று எமக்கு நம்பிக்கையுள்ளது. எமக்கு வேண்டியது உங்களையும் பாதுகாத்து, உங்களது துறையை பாதுகாத்து, நாட்டையும் பாதுகாப்பதாகும் என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். இன்று ஆரம்பிக்கப்பட்ட மீன்பிடி துறைமுக பணிகளை கூடிய விரைவில் நிறைவுசெய்து உங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிவிப்பதுடன் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, டளஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நிபுன ரணவக்க, கருணாதாச கொடிதுவக்கு, வீரசுமன வீரசிங்க, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஆர்எம்.ஐ.ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த சந்திரசோம உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.