அரசுக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!
அரசுக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ராஜபக்ச அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்குக் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிடும் வகையில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று தீப்பந்தம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘அடக்குமுறையை நிறுத்து’ என்ற தொனியின் கீழ் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இதில் பங்கேற்றனர்.
நாட்டில் அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது எனவும், இதன் வெளிப்படாகவே சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டார்.
மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன எனவும், சிறைச்சாலை சம்பவத்துக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இதன்போது அவர் கோரிக்கை விடுத்தார்.
அரசின் அடக்குமுறை செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.