“புலி” என குற்றம் சாட்டிய என் முன்னாலேயே, புலிகளை அழித்தவரை இழுத்து போனார்கள்” : மனோ
இன்றைய பாராளுமன்றத்தில் மனோ பேசியது என்ன? அதை இங்கே காணலாம் :-
நானும், எம்பி சரத் பொன்சேகாவும் ஒரே கூட்டணியில் இருக்கிறோம். ஆகவே மேலே பார்த்து எச்சில் துப்ப நான் விரும்பவில்லை. மேலும், சபையில் தரக்குறைவான சொற்பிரயோகம் செய்யவும் விரும்பவில்லை.
இங்கே முன் வரிசையில் உள்ள ஒரு அமைச்சர், சில நாட்களுக்கு முன், என்னை பார்த்து தரக்குறைவாக பேசினார். நான் இந்த சபையில் தரக்குறைவாக பேசவில்லை. சபைக்கு வெளியிலேயே பதில் கூறினேன். அப்படி பேசிய அவர் இன்று சமூகத்துக்குள்ளே குப்பை ஆகிவிட்டார்.
சரத் பொன்சேகா எம்பி என் பெயர் குறிப்பிட்டு பேசியுள்ள காரணத்தால் நான் இங்கே பதில் கூற வேண்டியுள்ளது.
இத்தருணத்தில் சரத் பொன்சேகா எம்பி சபைக்குள்ளே பிரவேசித்திருப்பது நல்லது.
உலகிலேயே தலை சிறந்த இராணுவ தளபதி என்று சொன்ன வாயாலேயே உம்மை கைது செய்து இழுத்து வர சொன்னார்கள். அக்காலத்தில் “புலி” என குற்றம் சாட்டப்பட்ட என் கண் முன்னாலேயே, புலிகளை கொன்ற உம்மை, ஒரு மிருகத்தை போன்று இழுத்து போனார்கள். மறந்து விட்டதா?
நான் அரசியலில் பொடியன் இல்லை. நீண்ட வரலாறு எனக்கு உள்ளது. மறந்து விட்டதா?
2010ம் வருடத்தில் உமக்காக தேர்தலில் நான் பணியாற்றியது மறந்து விட்டதா? தமிழ் எம்பிக்கள் பணியாற்றியது மறந்து விட்டதா? அப்போது மாவீரர் தினம் வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்படவில்லையா?
சூறாவளி தமிழ் பிரதேசத்தில் வீசியிருக்க வேண்டும் என்று கூறும் உம்மீது தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் இப்போது கோபமாக இருக்கிறார்கள். தெரியுமா?
என்னை பொறுத்த வரையில் இந்நாட்டில் சூறாவளி, சுனாமி, இனவாதம், அடிப்படைவாதம், மதவாதம் எதுவும் கூடாது என நினைக்கிறேன்.
நான் தமிழன், இந்து என்பவற்றால் பெருமையடைகிறேன். ஆனால் அவற்றைவிட இலங்கையன் என்பதிலேயே அதிக பெருமையடைகிறேன். நாம் எல்லோரும் அப்படியே சிந்திக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன்.
புலிகள் இயக்கம் மீது தடை உண்டு. ஆகவே அவர்களின் பெயரை கூறாமல் இருக்கலாம். ஆனால், போரில் இறந்த சாதாரண மக்களையும், ஆயுத போராளிகளையும், நினைவுக்கூர உரிமை உண்டு.
அவர்களது குடும்பத்தோருக்கு உரிமை உண்டு. இறந்து போன பிள்ளைகளையும், சகோதரர்களையும், கணவர்களையும் நினைவுகூர உரிமை உண்டு.
அதேபோல் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க சொல்லி நீதிமன்றத்துக்கு சென்று வழக்காடவும் உரிமை உண்டு.
இது தொடர்பில் சில நாள் முன்பு கஜேந்திரகுமார் எம்பியிடம் சொன்னேன். சுமந்திரன் எம்பியிடமும் சொல்கிறேன். விக்னேஸ்வரன் எம்பியிடமும் சொல்கிறேன். சட்டத்தரணிகளான அவர்கள் செயற்படலாம்.
மனோ கணேசன் சிங்களத்தில் பேசிய வீடியோ: