“அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து ‘சங்கி’, ‘பி டீம்’ என்பதா?”: கமல்ஹாசன் பதிலடி

அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து ‘சங்கி’, ‘பி’ டீம்’ என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவதுதான் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக திங்கட்கிழமை காலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து ‘சங்கி’, ‘பி’ டீம்’ என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?” என்று கூறியிருக்கிறார்.
மேலும், “தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை கமல் வெளியிட்டார். சூரப்பா மீது எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறிய நிலையில், தமிழக அரசு அது தொடர்பாக விசாரிக்க ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்தப் பின்னணியில்தான் அவருக்கு ஆதரவாக கமல் வீடியோவை வெளியிட்டார்.
இந்த வீடியோ தொடர்பாக, சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே தற்போது கமல் ‘ட்வீட்’ செய்திருக்கிறார்.