பஸ் மோதி வயோதிபர் சாவு! – பளை வைத்தியசாலையில் குழப்பம்

கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் வீதியில் மஞ்சள் கடவை ஊடாக சைக்கிளில் வீதியைக் கடந்த வயோதிபரை அரச பஸ் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து பளை வைத்தியசாலையில் இன்றிரவு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இத்தாவில் பகுதியைச் சேர்ந்த பொன்னையா சிவராசா (வயது – 68) என்பவர் இன்றிரவு 7.30 மணியளவில் இத்தாவில் வீதியில் மஞ்சள் கடவை ஊடாக சைக்கிளில் வீதியைக் கடந்துள்ளார். அவ்வேளை திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த அரச பஸ் அவரை மோதித் தள்ளியிருக்கின்றது.
சம்பவத்தை அடுத்து அங்கு நின்றவர்கள் அவரை உடனடியாக வாகனம் ஒன்றில் பளை ஆதார வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றிருக்கின்றனர்.
அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்திருக்கின்றார். இருந்தபோதிலும் அங்கு கூடிய சிலர் மருத்துவர்கள் உரிய முறையில் மருத்துவம் பார்க்காமலேயே அவர் உயிரிழந்தார் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இன்றிரவு அங்கு குழப்ப நிலை நிலவியது.
உயிரிழந்தவரின் சடலம் பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்