ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு துறை சார் தொழிற்பயிற்சிகளுக்கான அங்குரார்பண நிகழ்வு.
ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு
துறை சார் தொழிற்பயிற்சிகளுக்கான அங்குரார்பண நிகழ்வு.
“சுபீட்சத்தின் நோக்கு” ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய பல்நோக்கு அபிவிருத்தி செயலணி ஊடக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 54 பயிலுநர்களுக்கான அவர்களுடைய துறைசார் தொழிற்பயிற்சிகளை ஆரம்பித்து வைக்கின்ற அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (07) காலை 10.00மணிக்கு தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்(NAITA) ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
துறை சார் தொழிற் பயிற்சிகளை ஆரம்பித்து வைக்கின்ற ஆரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன், பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் மேஜர் H.P.D.S.K விஜயதுங்க, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் வேலைக்கள பயிற்சி உதவிப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட முகாமையாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஆகிய அதிதிகளாக கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 11பயிலுநர்கள், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 18பயிலுநர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 09பயிலுநர்கள், ஒட்டி சுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 05பயிலுநர்கள், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 05பயிலுநர்கள், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 06 பயிலுநர்களுமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 54 பயிலுநர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வட்டுவாகல் தேசிய இளைஞர் படையணியால் இரண்டு வார தலைமைத்துவ பயிற்சிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந் நிலையில் இவர்களது தொழிற்திறன் விருப்பு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நான்கு தொழிற்துறைகளில் பயிற்சிளித்தல் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சமுதாய உதவியாளர் துறையில் சிங்கள மொழி மூலம் 17பயிலுனர்களும், தமிழ் மொழி மூலம் 16 பயிலுனர்களும் தெரிவு செய்துள்ளனர்.
விவசாய கள உதவியாளர் துறையில் 12 பயிலுனர்கள் தெரிவு செய்துள்ளனர்.
போதை தடுப்பு உதவியாளர் துறையில் 06 பயிலுனர்கள் தெரிவு செய்துள்ளனர்.
கணினி பிரயோக உதவியாளர் துறையில் 03 தெரிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சிகள் துணுக்காய் பிரதேச செயலகம், ஒட்டி சுட்டான் விவசாய பயிற்சி நிலையம், வெலிஓயா சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் வவுனியா NAITA ஆகிய இடங்களில் ஒரு மாத காலப்பகுதியில் கோட்பாடு ரீதியான பயிற்சிகள் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து அவர்களுடைய பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திணைக்களங்களில் நான்கு மாதங்கள் வேலைக்களப் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.