அரச சார்பற்ற நிறுவனங்களும் மாவட்டத்தின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் பதிவுசெய்யப்பட்ட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியை கருத்திற்கொண்டு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய தேவை வேண்டப்படுவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றபோதே மேற்குறித்தவாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்ட முன்மொழிவுகளை இம்மாத இறுதிக்குள் மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறும் குறித்த திட்ட முன்மொழிவுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து மாவட்ட அபிவிருத்திக்கு எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது தொடர்பில் பயிற்சி பட்டறையொன்று வெகுவிரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை கிராம மட்டத்தில் மேற்கொள்ளும்போது அப்பிரதேச வெளிக்கள உத்தியோகத்தர்களை இணைத்து செயற்பட வேண்டும்.அத்துடன் அரசின் சட்டதிட்டங்களுக்கமைவாக முன்மொழியப்பட்ட திட்டங்களை அடையும் நோக்கில் செயற்படல் இன்றியமையாயதது என்று இதன்போது உதவி மாவட்ட அரசாங்க அதிபர் என். பிரதீபன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எம்.ஏ.அனஸ்,அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.சுகுணதாஸ்,அரச அதிகாரிகள்,அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.