வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது நீதி கோரி யாழ். ஐக்கிய நாடுகள் சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.
காணாமல் ஆக்கப்பட்டோரது விடயத்தில் நீதிகோரி
கவனயீர்ப்பு போராட்டம்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடயத்தில் நீதி கோரி யாழ். ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இன்றைய நாளில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடயத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவியதாக அந்தந்த மாவட்டகளில் கவனயீர்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலவலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் இன்று மு.பகல் 10.00 மணிக்கு கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போர் நிறைவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் போரின் இறுதி நாட்களில் உறவினர்கள் முன்னிலையில் குடும்பத்தவர்களால் இலங்கை இராணுவத்திடம் நேரில் கையளிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள், குடும்பத் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பொறுப்பேற்ற இராணுவமோ, தொடர்புடைய இலங்கை அரசோ இதுவரை பதில்வழங்கவில்லை.
நேரில் கையளிக்கப்பட்டு பின் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நேரடிய பொறுப்புக் கூறவேண்டிய இராணுவத்தினரும் அவர்களுக்கு கட்டளைகளை வழங்கிய உயர் அதிகாரிகளும், அரச தரப்பினரும் இவ்விடயத்தை கடந்து செல்வதற்கு, மனித உரிமைகள் குறித்து உபதேசம் செய்யும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட தரப்பினரது மௌனமே காரணமாகும் என வேதனை தெரிவிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், இவ்விடயத்தை வலியுறுத்தும் வகையிலேயே இன்றைய சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தப்பட்டது.