மனைப்பொருளாதார அலகினை பலப்படுத்தும் வேலைத்திட்டம்.
மனைப்பொருளாதார அலகினை பலப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல்
சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்துடன் இணைந்ததாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் செயற்படுத்தப்படும் மனைப்பொருளாதார அலகினை பலப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இன்று(10) காலை 10.00மணிக்கு இடம்பெற்றுள்ளது.
வறுமை ஒழிப்பு தினத்துடன் இணைந்ததாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் பொருளாதார வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரிவின் மூலம் மனைப்பொருளாதார அலகுகளை பலப்படுத்தச் செய்யும் வேலைத்திட்டம் ஒன்றினை செயற்படுத்தும் முகமாக குறித்த வேலைத்திட்டத்தை பரீட்சித்துப்பார்க்கும் முன்னோடிக் கருத்திட்டம் ஒன்றினை சகல மாவட்டங்களிலும் செயற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அதனடிப்படையில் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கிற்கமைய நாடு பூராகவும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களை சுயபலத்துடன் கூடிய வருமானம் பெறுபவர்களாக ஆக்கும் முகமாக சமுர்த்தி நிவாரணம் பெறுவோரை இனங்கண்டு அக் குடும்பங்களை ஆய்வு செய்வது இவ் வேலைத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
இவ் வேலைத்திட்டத்திற்காக மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலிருந்து ஒரு கிராம சேவகர் பிரிவு தெரிவுசெய்யப்பட்டு கிராம மட்டகுழுவின் ஆய்வினூடாக அவர்களை சுயபலத்துடன் கூடிய வருமானம் பெறுபவர்களாக ஆக்கும் வகையில் குடும்ப அபிவிருத்திக்குப் பொருத்தமான திட்டங்கள் முன்வைக்கப்படும்.
அந்தவகையில் வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிலிருந்து தண்ணிமுறிப்பு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிலிருந்து புதுக்குடியிருப்பு மேற்கு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலிருந்து கற்சிலைமடு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிலிருந்து தென்னியன்குளம், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து விநாயகபுரம், வெலிஓயா கிராம சேவகர் பிரிவிலிருந்து நிக்கவெல இடது ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த வேலைத்திட்டத்தினை மாவட்ட மட்டத்தில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் திருமதி.J.கணேசமூர்த்தி அவர்களால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், கருத்திட்ட முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட கிராமங்களின் பொருளாதார, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள் என பல்வேறுதரப்பட்டோர் கலந்துகொண்டனர்.