கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது குறித்து ஆராய்வு.
கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது குறித்து ஆராய்வதற்கு பிரதமர் தலைமையில் சந்திப்பு!
கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று 2020.12.10 இடம்பெற்றது.
கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு கௌரவ பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலில் வைரஸ் சுமார் 36 நாட்களுக்கு தொடர்ந்து காணப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது கௌரவ பிரதமரிடம் அறிவித்தனர்.
ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரதமர், சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
அதற்கான ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு அங்கு வருகைத் தந்திருந்த கௌரவ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான அலி சப்ரி, பவித்ரா வன்னிஆராச்சி, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.முணசிங்க உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.