எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 02 – T .சௌந்தர்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 02 – T .சௌந்தர்
பழமையுடன் இணைந்த இசைப்பெருக்கு

இந்திய சினிமாவில் அதிக செல்வாக்கு செலுத்திய ஹிந்தி திரைப்படப்பாடல்களுக்கு நிகராக,தமிழ் பாடல்களும் வரவேண்டும் என்று ஆரம்பகால இசையமைப்பாளர்கள் ஓரளவு முனைப்புக் காட்டினார்கள்.ஆயினும் அன்றிருந்த மரபிசையின் செல்வாக்கிற்குள் நின்று
தான் அவர்களால் புதுமையைக்காட்ட  முடிந்தது.அதில் அவர்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றிகளையும் கண்டார்கள்.

ஆயினும் அவர்களில் வயதில் இளையவராக இருந்த சி.ஆர்.சுப்பராமன், மரபில் நின்றதுடன் புதுமை விரும்பியாகவும்  தனது படைப்பை தர முயன்றார்.அவரது அகால மரணம், அவரது அடியொற்றி வந்த புதுமை நாட்டம் மிகுந்த  ஒரு புதிய பரம்பரையினரை  அரங்கேற்றியது.  ஏ.எம்.ராஜா , டி.ஜி..லிங்கப்பா , டி.ஆர் .பாப்பா , எம்.எஸ்.விஸ்வநாதன் , டி.கே.ராமமூர்த்தி போன்றவர்கள் புதுமை காண விளைந்தனர். புதுமை சகாப்தம் சி.ஆர்.சுப்பராமனுடன் ஆரம்பித்தது என்பதை யாரும் ஏற்றுக்கொள்வர்.

மெல்லிசை உருவாக்கத்தில் தீவிர ஆர்வம் காட்டிய மெல்லிசைமன்னர்கள், ஹிந்தி திரையிசையை முன்மாதிரியாகக் கொண்ட அதே வேளையில் தங்கள் தனித்துவத்தைக் காண்பிக்கவும் , நாடக மரபில் வந்த மூத்த இசையமைப்பாளர்களைப் போல
மரபையொட்டிய மெல்லிசையையும் ஆதர்சமாகக் கொண்டு பாடல்களைக் கொடுக்க முனைந்தனர்.

1950 களில் வெளிவந்த திரைப்படங்களை அவதானிக்கும் பொழுது  ஜி.ராமநாதன் , ஜி. கோவிந்தராஜுலுனாயுடு , எஸ்,வி.வெங்கட்ராமன் ,ஆர்.சுதர்சனம் , எஸ்.எம். சுப்பையா நாயுடு ,எம்.எஸ்.ஞானமணி , பெண்டலாயா , எஸ்.ராஜேஸ்வரராவ் ,எஸ்.தட்சிணாமூர்த்தி , கண்டசாலா , சி.ஆர் சுப்பராமன் , லக்ஷ்மன் பிரதர்ஸ் ,ஆதி நாராயணராவ் , வி.நாகைய்யா , கே.வீ
மகாதேவன் ,சி.என்.பாண்டுரங்கன் , ஏ. ராமராவ் ,எம்.டி.பார்த்தசாரதி சி.எஸ்.ஜெயராமன் , களிங்கராவ் , எச்.ஆர் .பத்ம நாபசாஸ்திரி என பல இசையாளுமைகள் வெற்றிகரமாகக்   களமாடிக்கொண்டிருந்ததை  அவதானிக்க முடிகிறது.

இவர்களுடன் புதிய சந்ததியினரான  விஸ்வநாதனின் இளவட்ட சகபாடிகளான டி.ஜி.லிங்கப்பா , டி.ஆர்.பாப்பா , ஏ,எம்.ராஜா,டி.சலபதிராவ் ,ஆர்.கோவர்த்தனம் ,வேதா , பி.எஸ். திவாகர் போன்ற  பலரும் தனித்தனியான இசையமைப்பாளர்களாக  அறிமுகமாகிக் கொண்டிருந்தார்கள்.

1940 களில் ஏற்பட்ட வளர்ச்சியின்  அடையாளமாக மரபு வழி வந்த நாடக இசையின் மைந்தர்களான ஜி.ராமநாதன் , எஸ்.வீ.வெங்கட்ராமன் , பாபநாசம் சிவன் , எஸ்.எம் சுப்பையாநாயுடு,  ஆர்.சுதர்சனம் போன்றவர்கள் முன்னணிக்கு வந்துவிட்டார்களெனினும்  நாடக இசையின் வட்டத்தைச் சார்ந்தும், அதிலிருந்து விடுபடவும்  ஓரளவு முனைப்பு காட்டினர்.  1950களில்    தியாகராஜா பாகவதர் , பி.யு.சின்னப்பா காலத்து பாடும் பாணி மாறி புதிய மெல்லிசைப்போக்கின் பயணம் தொடங்கியது.

பாடி நடித்து பெரும்புகழ் பெற்ற தியாகராஜா பாகவதர் , பி.யூ.சின்னப்பா போன்றோருடன் அந்த சகாப்தம் நிறைவுற்றாலும் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை பாடி நடிப்பதை பிடிவாதத்துடன் கடைப்பிடித்தவர்கள் டி.ஆர். மகாலிங்கம் மற்றும் கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரே ! பாடும் ஆற்றல் வாய்ந்த எஸ்.வரலட்சுயும் இறுதிவரை ஆங்காங்கே பாடி நடித்தவர்களில் ஒருவர்.

பாடி நடிக்காத புதிய நடிகர்களான எம்.கே ராதா , ரஞ்சன் போன்றோர் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.நடிகர் ரஞ்சன் ஒரு சில பாடல்களை பாடினாலும் ஒரு பாடகர் என்ற அளவுக்குப் புகழ் பெறவில்லை.

எஸ்.எஸ்.வாசனால் பெரும் செலவில் எடுக்கப்பட்ட அபூர்வ சகோதரர்கள் , மங்கம்மா சபதம் போன்ற படங்களில் முக்கிய பாத்திரமேற்று நடித்தவர்கள் எம்.கே ராதா , ரஞ்சன் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களுடன் நடிகைகளான ருக்மணி [நடிகை லட்சுமியின் தாயார்] , டி.ஆர்.ராஜகுமாரி போன்றோரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

டி.ஆர்.ராஜகுமாரி பாடுவதிலும் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும் ருக்மணியால் வெற்றி பெற முடியவில்லை. ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் ருக்மணி பாடினார் என்றும் பின்னர் இனிமை குறைவு எனக் கருதி   பி.ஏ.பெரியநாயகியைப் பாட வைத்து   டப் செய்தார்கள் என்கிறார் ஆய்வாளர் வாமனன்.

இனிமையாகப்பாடுவதில் புகழடைந்த டி.ஆர்.மகாலிங்கம் அளவுக்கு இல்லை என்றாலும் பாடுவதில் கணிசமான அளவு வெற்றியடைந்தவர் நடிப்பிசைப்புலவர் என்று அழைக்கப்படட கே.ஆர்  ராமசாமி. இவரது வெற்றிக்கு திராவிட இயக்கம் பெருமளவு உதவியது.

சிறைவாசத்துடன் தொடங்கிய தியாகராஜபாகவதரின் வீழ்ச்சியை,  ஏற்கனவே  பாடி நடித்து புகழ் பெற்றுக் கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கம் , கே.ஆர் ராமசாமி போன்ற நடிகர்கள் நிரப்ப முனைந்தனர். ஆயினும் பாடி நடிக்கும் காலம் மெதுவாக மலையேறிக்கொண்டிருந்தது என்பதும் கவனத்திற்குரியது.

சி.ஆர்.சுப்பராமன் விட்டுச் சென்ற இசைப் பணிகளை முடித்துக்கொடுக்கும் வாய்ப்பு  அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன் , ராம்மூர்த்தியினருக்கு கிடைத்தது. ஆயினும் தனது இசையார்வத்தால் சி.ஆர்.சுப்பராமன் உயிருடன் இருந்த காலத்திலேயே தனித்து இசையமைக்க முயன்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

வளரத் துடிக்கும் விஸ்வநாதனை தனது புதிய படத்தில் அறிமுகம் செய்ய விரும்பிய மலையாளபடத் தயாரிப்பாளர் ஈப்பச்சன், எம்.ஜி.ஆரை வைத்து ஜெனோவா என்ற படத்தை எடுத்தார். புதிய இசையமைப்பாளர் விஸ்வநாதன் பற்றி எம்.ஜி ஆர் அறிந்த போது
ஆபீஸ் பையனாக இருந்தவனை இசையமைப்பாளனாகப் போட்டு என் படத்தை கெடுத்துவிடப் போகிறீர்கள் என்று எம்.ஜி.ஆர் மறுக்க ,விஸ்வநாதன் தான் இசையமைப்பாளர் என்பதில் உறுதியாக நின்ற தயாரிப்பாளர் அவர் போடும் பாட்டுக்களைக் கேளுங்கள், இல்லை என்றால் மாற்றிவிடலாம் என்று கூற பாடல்களைக் கேட்ட எம்.ஜி.ஆர் நன்றாக இருக்கிறது,இன்னும் நன்றாக இசையமைக்க வேண்டும்,உனக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என்று பாராட்டினார் என மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்  திரும்பிப்பார்க்கிறேன் என்ற ஜெயா டி.வி நிகழ்ச்சியில் தனது நினைவுகளை பகிர்கிறார்.

ஆனாலும் ஜெனோவா படத்தில் அக்கால இசையமைப்பாளர்களான எம்.எஸ்.ஞானமணி , டி.ஏ.கல்யாணம் போன்றோரும் இசையமைத்ததாக பட டைட்டில் தெரிவிக்கிறது.

காலமாற்றத்தின் விளைவாக திரைத்துறையில் வெவ்வேறு துறைகளிலும் புதியவர்களின் வருகையும் மெல்லிசைமன்னர்கள் அறிமுகமான காலத்தில் ஏற்படத்தொடங்கியது.

நடிப்பில் ,
எம்.ஜி.ஆர், [ராஜ குமாரி 1948 ,மந்திரி குமரி  1950 – மலைக்கள்ளன் 1953]
சிவாஜி, பராசக்தி [1952] ,, பத்மினி ,வையந்திமாலா  போன்றோரும்,

பாடகர்களில்  ,
அபிமன்யூ  [1948 ] படத்தில் திருச்சி லோகநாதன்
பாதாள பைரவி [1950 ] படத்தில் பி.லீலா
மந்திரி குமாரி [1950]  படத்தில்  டி.எம்.சௌந்தரராஜன்
மந்திரி குமாரி [1950]  படத்தில் ஜிக்கி
சம்சாரம் [1951] படத்தில் ஏ.எம்.ராஜா
பெற்ற தாய் [1952] படத்தில் பி.சுசீலா
ஜாதகம் [1953] படத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸ்
பொன் வயல் [1954] படத்தில் சீர்காழி கோவிந்தராஜன்
போன்றோரும் ,இசையமைப்பில் மேற்குறிப்பிடட புதியவர்களும் அறிமுகமாகியிருந்தனர்.

பாடும் பாணியிலும் , இசையமைப்பிலும் புதிய முறை அரும்பிய காலம் என்பதை அக்காலப் பாடல்கள் சில நிரூபணம்  செய்கின்றன. திரைப்படங்களில் சமூகக் கதையமைப்பு மாற்றமும் அதற்குத் தகுந்தற்போல இசையும் மெல்லிசை மாற்றம் பெறத் தொடங்கியது. பெரும்பாலும் அக்கால ஹிந்தி இசையை ஒட்டியே அவை அமைந்திருந்தன.

ஆயினும் ஹிந்திப்பாடல்களை தழுவாத வகையில் வாத்திய அமைப்பைக் கொண்ட பாடல்களும் ஆங்காங்கே வெளிவரவும்  செய்தன. வலுவான  ஹிந்தி இசையின் தாக்கத்தோடு போராடிய இசையமைப்பாளர்கள் காட்டிய சிறிய தனித்துவ வீச்சுக்கள்தான்
இவை  என கருத வேண்டியுள்ளது.

ஆரம்ப காலத்தில் மெல்லிசைமன்னர்கள் ஒரு சில படங்களுக்கு  இசையமைத்தவர்களாயினும் படைப்புத்திறனில் வீச்சைக் காண்பிக்க  ஆர்வத்துடன் முனைந்து செயற்பட்டனர். அபூர்வமான சில பாடல்களை அப்போதே தந்ததை இன்று அவதானிக்க முடிகிறது அவை இன்றும் ஆர்வத்துடன் கேட்கப்படுகிறது.

எண்ணிக்கையில் குறைந்தளவு படங்களுக்கு இசையமைத்தமையும், அதிக புகழ்பெறாமையும் இவர்களது தனித்துவம் வெளிப்படாத காலமும் இவையாகும்.

1950 களில் ஒருவகை மெல்லிசைப்போக்கு உருவாகியிருந்தது. பொதுவாக “மெல்லிசை ” என இங்கு குறிப்பிடப்படும் இசை என்பது பாடலமைப்பில் , பிரயோகங்களில் எளிமை என்றே கருதப்படுகிறது.அவை வெவ்வேறு காலங்களில் வாத்திய அளவில் கூடியும் , குறைந்தும் பயன்படுத்தப்பட்டிருந்தன.மெல்லிசையில் வாத்திய இசையின் பங்கு அல்லது அடிப்படை என்பதே மெட்டின் இசைப்பண்பை வாத்திய இசையால் மெருகூட்டுவது எனக்கருதப்படுகிறது .

இது காலத்திற்கேற்ப  உயிர்த்துடிப்புமிக்க இசையை தர முனையும்  இசையமைப்பாளர்களது ஆற்றலையும் , தனிப்பாதையையும் காட்டி நிற்கும்.மெல்லிசை என்பது   திரையிலும்
,வானொலியிலும் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாத்திய எண்ணிக்கையின் அளவிற்பார்பட்டதே  என்பதையும்  நாம் நினைவிற்கொள்ளவேண்டும்.

வானொலியில் எண்ணிக்கையில் குறைந்த வாத்திய அளவும்  ,திரையில் அதிகமான அளவிலும் பயன்பட்டிருக்கிறது என்பதும் அவதானத்திற்குரியது.

1953 இல் இசையமைக்க ஆரம்பித்த மெல்லிசைமன்னரின் சில பாடல்கள் சோடை போகவில்லை என்று சொல்லலாம். அவர் அறிமுகமான ஜெனோவா படத்தில் வெளிவந்த சில பாடல்கள் அதற்கு சான்று பகர்கின்றன.

01  கண்ணுக்குள் மின்னல் காட்டிடும் காதல் ஜோதியே – படம்:ஜெனோவா 1952 – பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

02  தேடியே மனம் ஓடுதே அன்பே என் ஆருயிரே – படம்:ஜெனோவா 1952 – பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

03  துன்பம் சூழும் பெண்கள்  வாழ்வில் –  – படம்:ஜெனோவா 1952 – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

04  எண்ணாமலே கண்ணே நெற்று  – படம்:ஜெனோவா 1952 – பாடியவர்கள்:குழுவினர் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

05  புதுமலர் வனம்தனை  – படம்:ஜெனோவா 1952 – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

06   பரலோக மாதா பரிதாபமில்லையா  – படம்:ஜெனோவா 1952 – பாடியவர்கள்: பி.லீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

போன்ற பாடல்கள் இசைத்தட்டில் உள்ளன.  இதில் “கண்ணுக்குள் மின்னல் காட்டும்”  , மற்றும் “பரலோக மாதா பரிதாபமில்லையா”  போன்ற பாடல்கள் இனிமையின் இலக்கை எட்டியிருக்கின்றன என்று சொல்லத் தோன்றுகிறது.

விஸ்வநாதனின் முன்னோடி இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றை இங்கே ஒப்பிட்டு பார்க்கும் போது மெல்லிசையின்  இனிய தெறிப்புக்கள் பலவற்றை  நாம் காண்கிறோம். ஜெனோவா படத்தில் பல பாடல்கள் இருப்பினும் ” கண்ணுக்குள் மின்னல்
காட்டும் ” , ” பரிதாபம்  இல்லையா பரலோக மாதா ” போன்ற பாடல்கள் இயல்பான நீரோடை போன்ற ஓட்டம் கொண்ட பாடல்களாக நம் நினைவில் நிலைத்து நிற்கின்றன.

அக்காலத்தில் வெளிவந்த திரைப்படப்பாடல்களோடு ஒப்பு நோக்கும் போது அதிபிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் காலத்தை ஒட்டிய இனிய பாடல்கள் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகைய பின்னணியில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அறிமுகமான காலத்துக்கு முன்னர் வெளிவந்த  பாடல்களை சற்று நோக்கினால் சிறந்த பல பாடல்கள் வெளிவந்ததை அவதானிக்கலாம்.

01  ஆகா ஆடுவேனே கீதம் பாடுவேனே   – படம்:அபூர்வ சகோதரர்கள்  1949   – பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.பானுமதி  – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ் .

02  மானும் மயிலும் ஆடும் சோலை    – படம்:அபூர்வ சகோதரர்கள்  1949   – பாடியவர்கள்: பி.பானுமதி  – இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்

03 பேரின்பமே வாழ்விலே  – படம்:தேவகி  1952 – பாடியவர்கள்:திருச்சி லோகநாதன் + பி.லீலா – இசை  :ஜி.ராமநாதன்

04  ஆசைக்கிளியை அழைத்து வாராய் தென்றலே  – படம்:சின்னத்துரை 1951 – பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம்  + பி.லீலா – இசை :டி.ஜி.லிங்கப்பா

05  வானுலாவும் தாரை நீ இதயகீதமே  – படம்:இதயகீதம்  1950 – பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம்  + டி.ஆர்.ராஜகுமாரி   – இசை :எஸ்.வி.வெங்கட்ராமன்

06  பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா   – படம்:சின்னத்துரை 1951   – பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம்  – இசை :டி.ஜி.லிங்கப்பா

07  ஒ..ஜெகமத்தில் இன்பம் தான் வருவது எதனாலே   – படம்:சின்னத்துரை 1951   – பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் + வரலட்சுமி – இசை  :டி.ஜி.லிங்கப்பா

08  சம்சாரம் சம்சாரம் சலகதர்ம சாரம்    – படம்:சம்சாரம் 1951   – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா   – இசை  :ஈமானி சங்கர சாஸ்திரி

09  அழியாத காதல் வாழ்வின் – படம்:குமாரி  1950   – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா   – இசை  : கே.வீ.மகாதேவன்

10  பேசும் யாழே பெண் மானே      – படம்:நாம்  1951   – பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா   – இசை :சி.எஸ்.ஜெயராமன்

11  ஆடும் ஊஞ்சலைப் போலே அலை – படம்:என் தங்கை 1952   – பாடியவர்கள்: டி.ஏ.மோதி + பி.லீலா – இசை :சி.என்.பாண்டுரங்கன்

12  காதல் வாழ்விலே கவலை தவிர்ந்தோம்  – படம்:என் தங்கை 1952   – பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.லீலா – இசை  :சி.என்.- இசை :சி.என்.பாண்டுரங்கன்

13  புது ரோஜா போலே புவி மேலே வாழ்வோமே -படம்:  ஆத்ம சாந்தி [1952]- பாடியவர்கள் : டி.ஏ.மோதி + பி.லீலா

தந்தை பெரியாரின் சீர்திருத்தக்கருத்துக்கள் புகழ்பெறத்தொடங்கிய இக்காலத்தில் அதன் ஆதிக்கம் சினிமாவிலும் எதிரொலித்தது. பொருளற்ற புராணப்படங்களைப் பார்த்து சலிப்படைந்த மக்களை பாடல்களால் சோபையூட்டிக் கொண்டிருந்த சினிமாவில்
சமூகக்கதைகளை கொண்ட விழிப்புணர்வு கருத்துக்கள் தலையெடுக்கவும் தொடங்கின. எதற்கெடுத்தாலும் பாடிக்கொண்டிருந்த சினிமாவை உரையாடல் பக்கம் திருப்பியவர்கள் திராவிட கழகத்தினரே!

திராவிட இயக்கக் கருத்தோட்டம் முன்னணிக்கு வந்துகொண்டிருந்த இக்காலத்தில் ,அந்த இயக்கம் சார்ந்த கதாசிரியர்களான அண்ணாத்துரை , கருணாநிதி ,கண்ணதாசன் , நடிகர்களான  என்.எஸ்.கிருஷ்ணன் , கே.ஆர் ராமசாமி , எம்.ஜி.ராமசந்திரன் , சிவாஜி
கணேசன் ,எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்கள் முன்னனிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.
தங்கள் “இமேஜை ” மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், தங்கள் பிரபல்யமாவதற்கும் திராவிட இயக்கக் கருத்தை ஏற்றார்கள்.

அது போலவே வளர்ந்து வரும் நடிகர்களின் புகழைக் காட்டி தமது இயக்கத்தை வளர்த்துவிட முடியும் என்று அரசியல் தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள்.அவர்களுக்குச் சாதகமாக அமைந்த சினிமாத்துறையை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள் இன
உணர்வு ,தமிழுணர்வு போன்றவற்றை பயன்படுத்தி வெற்றிபெறத் துடித்தனர்.

புராண ,இதிகாசப் படங்களுடன் ,கைநழுவிப் போய்க்கொண்டிருந்த  நிலமானியக் கருத்துக்களை மையமாகக் கொண்ட உணர்ச்சிமிக்க கதைகள் கருப்போருளாகின. கதைகளுக்கேற்ற பாத்திர வார்ப்புகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் நடித்துக் கொண்டிருந்தனர்.

தங்கள் அரசியல் கருத்துக்களை அலங்கார வசனங்களைக்  கொண்டு கட்டமைத்ததைப் போல , இசையிலும் கட்டமைக்க முயன்றனர்.திராவிடக் கருத்துக்களுக்கு சார்பான கவிஞர்களுள் பாரதிதாசன் பரம்பரைகவிஞர்கள் உருவானார்கள். அவர்களில்  உடுமலை நாராயணகவி முடியரசன் ,சுரதா , ஐயாமுத்து  ,விந்தன்  போன்றோர் 1950 களின் முன்னோடிக்கவிஞர்களாக விளங்கினர்.

எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன்[1953] படத்தில் மக்களன்பன் எழுதிய ” எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ” பாடல் தி.மு.க வினரின் அரசியல் கொள்கையை பிரதி பலித்தது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வசனகர்த்தாவாக வர  விரும்பிய கண்ணதாசன் அதற்கு சரியான வைப்பு கிடைக்காததால் கன்னியின் காதலி [1949] படத்தில் பாடலாசியர் வாய்ப்பைப் பயன்படுத்தி அறிமுகமானார்.
பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கம்யூனிஸ்ட்கட்சி ஆதரவாளனாக தன்னை வெளிப்படுத்தி கொண்டார்.

பாரதி , பாரதிதாசன் போன்ற பெருங்கவிகளின் கவிவீச்சைக் கொண்டிருந்த பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் 1954 இல் சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரின் வளர்ச்சி மெதுவாகவே நகர்ந்தது. 1952 ஆம் ஆண்டிலிருந்து 1959 வரையான காலப்பகுதியில் சுமார் இருபது படங்களுக்கு இசையமைத்தார்கள். அவர்களின் சமகால இசையமைப்பாளர்கள் பல சிறந்த
பாடல்களைத் தந்துகொண்டிருந்த வேளையில் தங்களையும் பேசவைக்குமளவுக்கு ஆங்காங்கே  நல்ல பாடல்களையும் தந்தார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.  அவர்கள் சிருஷ்டித்துத் தந்த பாடல்கள் சில இன்றும் நம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளுபவையாக விளங்குகின்றன.

சொர்க்கவாசல் [1954] படத்தில் சில பாடல்கள் :
01  “கன்னித் தமிழ் சாலையோரம் ” என்று ஆரம்பமாகும் ஒரு பாடல் நாட்டுப்புறப்பாங்கில் அமைந்திருக்கிறது. இந்தப்பாடலில் திராவிட இயக்கக்கருத்துக்கள் முழுமையாக வெளிப்படுகின்றன. தமிழரின் பழம்பெருமையையும்  சேரன் கல்லெடுத்து கண்ணகிக்கு
சிலை வைத்த பெருமையையும்  பறைசாற்றும் இனிமையான இந்தப்பாடலை தேஷ் ராகத்தில் அமைத்து நம்மைக் கனிய வைத்திருக்கிறார்கள்.இப்பாடலைப் பாடியவர் நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி.

02  ” நிலவே நிலவே ஆட வா நீ அன்புடனே ஓடிவா ” என்ற பாடலையும் தேஷ் ராகத்தில் அமைத்து நெஞ்சில் இருக்க வைத்திருப்பார்கள். குழந்தையை நிலவுக்கு ஒப்பிட்டு பாடுவதுடன் நிலவை விட குழந்தை அழகு என்பதாக அமைக்கப்பட்ட  இந்தப்பாடலும் தேஷ் ராகத்திலேயே அமைக்கப்படுள்ளது. இப்பாடலைப் பாடியவர்  கே.ஆர்.ராமசாமி.

03  ” ஆத்மீகம் எது நாத்தீகம் எது அறிந்து சொல்வீரே ” என்று ஆத்மா விசாரம் செய்யும் பாடல்

04  ” மொழி மீது விழி வைத்தே முடிமன்னர் ஆண்ட தமிழ் நாடு ”  என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடலும் தமிழ்  பெருமையும் , திராவிட பெருமையும் பேசுகின்ற பாடல்.

05  ” சந்தோசம் தேட வேணும் வாழ்விலே ” என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடல் ஒரு காதல்பாடல். இனிமைக்கு குறைவில்லாமல் திருச்சி லோகநாதனும் டி.வி.ரத்தினமும் பாடிய பாடல்.

1955 இல் வெளிவந்த நீதிபதி  படத்தில் வெளிவந்த சில பாடல்கள் :
01  ” தாயும் சேயும் பிரிந்தைப் பார் சதியதனாலே ” [ பாடியவர் :சி.எஸ்.ஜெயராமன் ] என்ற உணர்ச்சி ததும்பும் துயர கீதம்.இந்தப்பாடலில் காலத்தை மீறியதாக, புதுமைமிக்க  அமைந்த கோரஸ் பின்னணியில் ஒலிப்பதைக் கேட்கலாம்.

02  ” உருவம் கண்டு என் மனசு உருகுது மனசு உருகுது ” [பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + டி.எம்.சௌந்தரராஜன் ] என்று ஆரம்பிக்கும் நகைச்சுவைப் பாடல்.தங்குதடையற்ற நதியோட்டம் மிக்க பாடல்.கே.ஆர்.ராமசாமி , டி.எம்.சௌந்தரராஜன் இணைந்து பாடிய அபூர்வமான பாடல். மெல்லிசை மன்னர்களின் இசையில் சௌந்தரராஜன்  பாடிய இரண்டாவது பாடல் இது.

03  ” பறக்குது பார் பொறி பறக்குது பார் ” [ பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + ஏ.பி.கோமளா ] இந்தப்பாடலும் திராவிட இயக்கக்  கருத்தை பறை சாற்றும் பாடல்.

04  ” வருவார் வருவார் என்று எதிர் பார்த்தேன் ”  [ பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + ஏ.பி.கோமளா ] என்று தொடங்கும் நகைச்சுவைப்பாடல்.இருபக்க இசையாக ஒலிக்கும் இந்தப்பாடல்  ஒரு இசைநாடகப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.

1955 இல் வெளிவந்த குலேபகாவலி  படத்தில் வெளிவந்த சில பாடல்கள் :

01  “வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே ” [ பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் + பி.லீலா ]  இந்தப்பாடல் பன்மொழியில் அமைந்த ராகமாலிகைப்பாடல்.

02  ஆசையும் என் நேசமும் [ பாடியவர் : கே.ஜமுனாராணி ] லத்தீனமெரிக்க இசையின் வீச்சையும் ,வாத்திய அமைப்பின் புதிய போக்கையும் , கோரஸ் இசையுடன் மிக அருமையாக அமைத்திருப்பார்கள்.

03  “சொக்கா போட்ட நாவாப்பு ” –  [பாடியவர் : ஜிக்கி ]

04  ” கண்ணாலே பேசும் பெண்ணாலே ” [பாடியவர் : ஜிக்கி ] மாயாலோகத்திற்கு அழைத்து செல்லும் உணர்வைத் தரும் கோரஸ் இசையுடன் அரேபிய இசையின் சாயலில் அமைக்கப்பட்டபாடலை ஜிக்கி வசீகர  அதிர்வுடன்  பாடிய பாடல்.

05  ” அநியாயம் இந்த ஆட்சியிலே ” [ பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் ] விஸ்வநாதன் இசையில் இவர் பாடிய முதல் பாடல் இதுவே.

06  ” நாயகமே நபி நாயகமே ” ;[ பாடியவர்கள்: எஸ்.சி.கிருஷ்ணன்  + குழுவினர் ] இந்து – முஸ்லீம் ஒற்றுமை பற்றிய டைட்டில் பாடல்.எஸ்.சி.கிருஷ்ணன்  உச்சஸ்தாயியில் அனாசாயமாகப் பாடிய பாடல்.

07  “மாயாவலையில் வீழ்ந்து மதியை இழந்து ”  [ பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் ] ஜி.ராமநாதன் பாணியில் அமைந்த இந்தப்பாடல் கரகரப்ரியா ராகத்தில் முதற் பகுதியும்  நாட்டுப்புறப்பாங்கில் பிற்பகுதியும் நிறைவுறும் பாடல் 1956 தெனாலிராமன்

01  உலகெலாம் உனதருளால் மலரும் [ பாடியவர் :பி.லீலா ] டைட்டில்பாடல் , சிந்துபைரவி ராகப்பாடல்

02  சிட்டுப் போல முல்லை மொட்டு [ பாடியவர் :ஏ.பி.கோமளா ]

03  ஆடும் கலை எல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கலையாகுமே பாடியவர் : பி.லீலா ] காம்போதி ராகம்

04  கண்களில் ஆடிடிடும் ,,,,கன்னம் இரண்டும் மின்னிடும் [ பாடியவர்;பி.பானுமதி ] அரேபிய பாணி .

05  பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள் [ பாடியவர் : பி.பானுமதி ] சன்முகப்ப்ரியா நாட்டியப்பாடல்

06  புத்திலெ பாம்பிருக்கும் ,,,கோட்டையிலே ஒரு காலத்திலேயே [ பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரரராஜன் + வி.என்.நாகையா

07  உல்லாசம் தேடும் எல்லோரும் ஒரு நாள் [ பாடியவர் : கண்டசாலா ]
1955 போட்டர் கந்தன்

01 வருந்தாதே மனமே வீணே வருந்தாதே மனமே – [ பாடியவர் : எஸ்.சி.கிருஷ்ணன் ]
1957 குடும்ப கௌரவம் [1957] படத்தில் ” சேரும் காலம் வந்தாச்சு ” [பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் + கே.ஜமுனாராணி ]

1957 இல் வெளிவந்த மகாதேவி படம் மெல்லிசைமன்னர்களுக்கு மிக முக்கிய படமாக அமைந்தது.

மரபு ராகங்களில் அலங்காரம் செய்வதை அழகு  பார்த்த அக்காலத்தில் ,அதன் வடிவத்திற்குள் உணர்ச்சிபாவம் கொப்பளிக்கும் அற்புதமான பாடல்களையும்   தந்தார்கள்.

01  சிங்கார புன்னகை கண்ணாராக் கண்டாலே சங்கீத வீணையும் ஏத்துக்கம்மா- பாடியவர்கள்: எஸ்.ராஜேஸ்வரி + ஆர்.பாலசரஸ்வதி தேவி + குழுவினர் ” பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால் பேசாத சிற்பங்கள் ஏதுக்கமா” என்ற அருமையான கவி வரிகளை தாலாட்டில்  அளித்த இந்தப்பாடல் தாலாட்டு மரபில் முன்பு வெளிவந்த  பாடல்களை உடைத்து புதுமரபை ஏற்படுத்தியது.மென்மையும் , இனிமையும், தாய்மையும்  ஒன்று குழைந்து வரும் இனிய குரல்களுடன் , மகிழ்வின் ஆரவாரத்தை வெளிக்காட்டிட கைதட்டல் போன்றவற்றை மிக
லாவகமாகப் பயன்படுத்திய பாடல்..

கேட்கும் தருணங்களிலெல்லாம்   மெய்சிலிர்ப்பும் , நெகிழ்வும் தருகின்ற பாடல்.இப்பாடலின் வெற்றியால் பின் வந்த காலங்களில் தாலாட்டு என்றால் ஆபேரி ராகத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணம் அமைத்துக் கொடுத்த பாடல் எனலாம். இந்த பாடலின் வெற்றி  “மலர்ந்தும்  மலராத பாதி மலர் போல ” பாடல் உருவானதின் பின்னணியில் இருந்தது என்று கூறலாம்.

“ஏரு  பூட்டுவோம் நாளை சோறு ஓட்டுவோம் -” பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி + குழுவினர் விவசாயிகள் பாடுவதாக அமைக்கப்பட்ட கொண்டாட்டமும் , களிப்பும் பொங்கும் பாடல்.பாடலில் கோரஸ், கைதட்டல்  மிக அருமையாகப் பயன் படுத்தப்பட்டுள்ளது. பாடலின் நடுவே காதலர்களின் உணர்வை வெளிப்படுத்தும் பாங்கில் ” மனசும் மனசும் ஒன்றா சேர்ந்தா மறக்க முடியுமா ” என்ற வரிகளில் கனிவும் , இனிமையும் பொங்கி வர செய்யும் இசை மனதை பறித்துச் செல்லும்!

காதல் பாடல்களிலும் மென்மையைக் காண்பிக்கும்  “கண்மூடு வேளையிலும் காலை என்ன கலையே” , “சேவை செய்வதே ஆனந்தம்” போன்ற அழகான பாடல்களையும் , பட்டுக்கோட்டை க்கல்யாணசுந்தரம் எழுதிய கருத்துக் செறிந்த தத்துவப்பாடல்களான ” குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் “, ” தாயத்து தாயத்து ” போன்ற பாடல்களையும் அதனதன் இயல்புகளை  ளிப்படுத்தும் வகையில் அற்புதமாக இசையமைத்துள்ளார்கள்.

குறிப்பாக “குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் ” என்ற பாடலில்  பட்டுக்கோட்டையாரின் அற்புதவரிகளை எழுச்சியுடனும் நெகிழ்சசியுடனும் இசைத்து உணர்ச்சியின் உச்சத்தை  தொடுகிறார்கள். இந்தப்பாடலுக்கு அவர்கள்   தெரிந்தெடுத்த ராகம் அவர்களின் நுண்ணுணர்வைக் காட்டும்.

“காமுகர் நெஞ்சில் நீதியில்லை ” என்று தொடங்கும் ஜமுனாராணி பாடிய நெஞ்சை உருக்கும் பாடல். படத்தின் நாயகி  துயரத்தின் எல்லையில் நின்று பாடும் சோகத்தால் மனதை துருவித் துளைக்கும் பாடல்.

உணர்ச்சிமிக்க பாடல்களுடன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக ஜெ.பி.சந்திரபாபு பாடிய ” தந்தானா பட்டு பாடணும் ” , “உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு ” போன்ற பாடல்களையும் நாம் கேட்கலாம் ஆரம்ப காலங்களில் மெல்லிசைமன்னர்கள் ஒருசில படங்களுக்கு இசையமைத்தாலும் படைப்புத் திறனில் வீச்சைக் காண்பிக்க  முனைந்து செயல்பட்டனர் என்பதை உணரக்கூடியதாகவே உள்ளது.

மெல்ல மெல்ல தங்கள் தனித்துவத்தை காட்ட தலைப்பட்டதை இக்காலங்களில் காண்கிறோம்.
1959 இலிருந்து அவர்களது இசைப்பயணம் மெல்லிசையின் புது வண்ணத் தேடல்களை நோக்கிப் பயணித்தது.புதிய வாத்தியங்களும் , அவற்றில் எழும் நுண்ணிய ஒலியலைகளை கலையழகுடன் துணிகரமாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.

மேலைத்தேய  இசையின் தலையீடு ஏற்படத் தொடங்கியவுடன் சினிமா இசையிலும் புதிய புதிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.மேலைத்தேய இசையின் தாக்கம் உள்ளடக்கத்திலும் ம்மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆயினும் அவர்களது இசை மரபிசையின் பண்புகளுடனேயே இசைந்து வெளிப்பட்டது.

“பக்கமேளம்”  என்று ஜி.ராமநாதனால் வர்ணிக்கப்பட்ட வாத்திய இசைச் சேர்ப்பு இவர்கள் காலத்திலேயே புதிய நிலையை எட்டியது.புதிய , புதிய வாத்தியக்கருவிகளின் தனித்துவக் கூறுகள் அக்கால வழக்கில் இருந்த ஒலியமைப்பிலிருந்து வேறுபடுத்திக்காட்டியது.

காலாவதியாகிப் போன மந்திர , மாயாஜாலக் கதைகளும் , புராணக்கதைகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தமிழ்சினிமாவில் 1950 களில் சமூகக்கதைகள் அரும்பத் தொடங்கின.அவை துரிதகதியில் முன்னேறி 1950 களின் நடுப்பகுதியில் தீவிரம் பெற்று வளந்தது  இக்கால திரையிசையை அவதானிப்பவர்கள் செவ்வியலிசையின்  பாரிய தாக்கத்தையும் தயங்கி நின்ற மெல்லிசையையும் அவதானிப்பர்.


ஆயினும் ஐம்பதுகளில் அரும்பிய மெல்லிசை ஐம்பதுகளின் இறுதியில் பெருகி அறுபதுகளில் பெரும் பாய்ச்சலைக்காட்டுகிறது.இந்தப்போக்கின், புதிய வாரிசுகளாக மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினை நாம் கருதவேண்டியுள்ளது. மெல்லிசை இயக்கத்தை செயலில் காட்ட உத்வேகத்துடன் செயல்பட்டனர்.

இசை என்பது கலை என்ற அம்சத்தில் திரை இசையின் கலைப்பெறுமானம் முக்கியமானதாக நோக்கற்படவேண்டும் என்பதும் புதிய வாத்தியக்கருவிகள் கலையம்சத்துடன் பயன்படுத்த வேண்டும் என்கிற சீரியபார்வையும்  இவர்களிடமிருந்தது என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.

ஹிந்தி திரையிசையின் நவீனமும் , இனிமையுமிக்க இசை இந்தியாவெங்கும் மக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் , அது பற்றிப்பிடித்த வாத்திய இசைக்கோர்வைக்கு  நிகராக தாங்களும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தததையும்  ல்லிசைமன்னர்களிடம் காண்கிறோம்.

இவர்களது முன்னோடி இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன், சுப்பைய்யாநாயுடு, எஸ் .வி. வெங்கட்ராமன் மற்றும் அக்காலத்திலிருந்த , பல இசை  ஜாம்பவான்கள் தந்த  இனிய பாடல்களுக்கு மத்தியில்  இவர்களது மெல்லிசை முயற்ச்சிகள் அரும்பின.

தமிழ் திரைப்படத்தின் பொற்காலப் பாடல்கள் என்று அக்காலத்திய பாடல்களைச் சிலர் சொல்லுமளவுக்கு தமிழ் செவ்விசை சார்ந்த மெல்லிசைப்பாடல்கள் வெளிவந்து கொண்டிருந்த காலமது. அவர்களின் ஆதிக்கத்தை எங்கனம் மீறினார்கள் என்பதும்  சிந்திக்க
வைக்கும் ஒன்றாகும்.

அக்காலத்தில் வெளிவந்த சில பாடல்களை நாம் உற்று நோக்கும் போது அப்பாடல்களின் வலிமையை  நாம் உணரும் அதே நேரம் இவர்கள் எதிர் கொண்ட நெருக்கடியையும் விளங்கிக்கொள்ளலாம்.


உதாரணத்திற்கு 1956 ம் ஆண்டு வெளிவந்த சில பாடல்கள் :
01 பூவா மரமும் பூத்ததே    -படம்:  நான்  பெற்ற செல்வம்  [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்  + ஜிக்கி   – இசை :ஜி.ராமாநாதன்

02 இனிதாய் நாமே இணைந்திருப்போமே   -படம்:  காலம்  மாறிபோச்சு   [1956]- பாடியவர்கள் : திருச்சி லோகநாதன்  + ஜிக்கி    – இசை :மாஸ்டர் வேணு

03 அழகோடையில் நீந்தும் இள அன்னம்    -படம்:  கோகிலவாணி   [1956]- பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் + ஜிக்கி    – இசை :ஜி.ராமநாதன்

04 திரை போட்டு நாமே மறைத்தாலும்  -படம்:  ராஜா ராணி   [1956]- பாடியவர்கள் : ஏ .எம்.ராஜா + ஜிக்கி    – இசை :டி.ஆர் பாப்பா

05 ஆகா நம் ஆசை நிறைவேறுமா  -படம்:  தாய்க்குப் பின் தாரம்  [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்  + பி.பானுமதி   – இசை :கே.வி மகாதேவன்

06 நாடகம் எல்லாம் கண்டேன்  -படம்:  மதுரைவீரன்  [1956]- பாடியவர்கள் :  .எம்.சௌந்தரராஜன்  + ஜிக்கி   – இசை :ஜி.ராமாநாதன்

1956 ம் ஆண்டு வெளிவந்த, மெல்லிசைமன்னர்களின்  சில பாடல்கள் :

1956 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் பாசவலை , தென்னாலிராமன்  ஆகிய இரண்டு படங்களுக்கு மேல்லிசைமன்னர்கள் இசையமைத்தார்கள்.  பாசவலையில் ” உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் “, ” அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை “. போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடன் இணைந்த முதல் படம் பாசவலை ஆகும்.

தென்னாலி ராமன் படத்தில் இடம் பெற்ற ” ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர் ”  என்ற செவ்வியலிசைப்பாடலும், ” உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம்  ”  என்ற பாடலும் , ” அலை பாயும் கண்கள்  அங்கும் இங்கும்  ” என்று பானுமதி பாடும் அரேபிய பாணியிலமைந்த பாடலும் , ” சிட்டு போலே முல்லை மொட்டுப்போலே ” என்று ஏ.பி.கோமளா பாடிய பாடலும் குறிப்பிடத்தக்கன.

1957 ம் ஆண்டு வெளிவந்த சில பாடல்கள்


*** வாடா மலரே தமிழ் தேனே -படம்:  அம்பிகாபதி   [1957]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்  + பி.பானுமதி   – இசை :ஜி.ராமாநாதன்

*** ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா   -படம்:  மக்களைப் பெற்ற மகராசி     [1957]- பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ்   + சரோஜினி    – இசை :கே.வி. மகாதேவன்

*** கம கமவென நறுமலர் மணம் வீசுதே  -படம்:  சமய சஞ்சீவி   [1957]- பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ்  + ஜிக்கி    – இசை :ஜி.ராமாநாதன்

*** தேசுலாவுதே தென் மலராலே  -படம்:  மணாளனே மங்கையின் பாக்கியம்    [1957]- பாடியவர்கள் : கண்டசாலா   + பி.சுசீலா    – இசை :ஆதி நாராயணராவ்

1957 ம் வருடம் வெளிவந்த இன்னும் சில பாடல்களை உற்று நோக்குவது பொருத்தமாக இருக்கும்


** பூவா மரமும் பூத்ததே பொன்னும் மணியும் விளைந்ததே – படம் :நான் பெற்ற செல்வம் [1957] -இசை :ஜி.ராமாநாதன்

** இன்பம் வந்து சேருமா  – படம் :நான் பெற்ற செல்வம் [1957] – இசை :ஜி.ராமாநாதன்
** இக லோகமே இனிதாகுமே  – படம் :தங்கமலை ரகசியம் [1957] -டி.ஜி.லிங்கப்பா
** அமுதைப்பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ   – படம் :தங்கமலை ரகசியம் [1957]
** இதய வானிலே உதயமானது  – படம் :கற்புக்கரசி  [1957] – இசை :ஜி.ராமாநாதன்
** கனியோ பாகோ கற்கண்டோ   – படம் :கற்புக்கரசி  [1957] – இசை :ஜி.ராமாநாதன்
** நிலவோடு வான் முகில் விளையாடதே   – படம் :ராஜா ராணி   [1957] – இசை :கே.வி. மகாதேவன்
** வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே  – படம் :மல்லிகா  [1957] -டி.ஆர்.பாபபா
** வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே   – படம் :கோமதியின் காதலன்   [1957] – இசை :ஜி.ராமாநாதன்
** மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி – படம் :கோமதியின் காதலன்  [1957] – இசை :ஜி.ராமாநாதன்

மரபுணர்வு மேலோங்கிய இசையமைப்பாளர்களை ஒட்டியே மெல்லிசை மன்னர்களும் பாடல்களைத்  தரமுனைந்ததை 1950 களின் இறுதிவரையில் காண்கிறோம். கதையின் போக்கு மற்றும் பாத்திரங்களின் தன்மைகளுக்கு ஏற்ப வகைமாதிரியான பாடல்களைக்  கொடுத்தமுன்னையவர்கள் காட்டிய  வழி தடத்திலேயே தங்கள் இசைப்பயணத்தை மேற்கொண்டு வாய்ப்புகளைத் தம் வசமாக்கினர்.

புதியவர்களுக்குரிய உத்வேகத்தையும்  கற்பனை வீச்சையும் அக்காலப்பாடல்களில் நாம் காணவும்  செய்கிறோம்.மரபு வழியில் நின்று கொண்டே தமது புதுமைக்கண்ணோடடத்தையும் மெதுவாக நகர்த்திய வண்ணமுமிருந்தனர்.
[ தொடரும் ]

– T .சௌந்தர்

Leave A Reply

Your email address will not be published.