புளாட் வதை முகாமில் நான் – சீலன் (பகுதி 9)

புளாட் வதை முகாமில் நான் – சீலன் (“வெல்வோம்-அதற்காக” – பகுதி 9)
புளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர்…
எத்தனையோ அராஜகங்கள் தவறுகள் புளாட் முகாம்களில் நடந்து கொண்டிருந்தது. நாம் அதை புளாட்டின் வளர்ச்சிக்காக, தவறுகளைக் களைவதற்காக கழக உயர்மட்டத்தினருக்கு எம் அறிக்கை மூலம் முன்வைத்தோம். அதனால் எமது உயிருக்கு ஆபத்து வரும் என்றும் உணர்ந்திருந்தோம். தீப்பொறியினரைப்போல தமது உயிர்களுக்கு பாதுகாப்புத்தேடி, கழகத்தில் இருந்து தப்பிஒடியதைப் போன்று நாம் செய்யவில்லை. மாறாக எமது உயிர்களைப் பணயம் வைத்ததே அப்போராட்டத்தை முன்னெடுத்தோம். எமது அன்றைய அரசியல் வளர்ச்சியின் அடிப்படையில் எது எமக்குச் சரியாகப்பட்டதோ, அதைச் செய்தோம்.
இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடையம், “தீப்பொறியாக” கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், நாம் மகஜர் அனுப்பும் காலத்தில் அமைப்பில் உயர்ந்த பதவிகளில் இருந்தனர். அவர்கள் தமது விசுவாசத்தை, தலைமைக்கு காட்டிய வண்ணம் இருந்தனர். அத்துடன் அவர்கள் எம்முடன் சேர்ந்து போராடாது, எமது போராட்டத்தை ஒடுக்க முன்னெடுக்கப்பட்ட திட்டத்திற்கு துணைபோனர்கள். காரணம் எமக்கு அதரவு தந்தால், தாங்கள் இரகசியமாக வெளியேறத் தீட்டியிருந்த திட்டம் அம்பலப்பட்டு விடுமே என்ற சுயநல சிந்தனையேயாகும்.
எமது மகஜரை எழுதுவதில் முன்னணியாக நின்ற தோழர்கள், ஒரே இடத்தில் படுப்பதில்லை. முன்பு எதிரிகளுக்காக முகாமைச்சுற்றி பாதுகாப்பது பணி செய்வது வழக்கம். ஆனால் இந்த போராட்டம் ஆரம்பமானவுடன், கழகத்தினரால் எமக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் முகாமைச் சுற்றிப் பாதுகாப்பு போட்டோம். “பாதுகாப்பு” என்றவுடன் நாங்கள் ஆயுதங்கள் வைத்திருந்தோம் என நீங்கள் நினைக்கலாம். இல்லை, இல்லவேயில்லை. எம்மிடமிருந்தது, கொட்டான் தடிகள் மட்டுமே. எமது முகாமில் இன்னுமொரு கூடாரம் அமைப்பதற்காக, காடுகளுக்குச் சென்று மரங்கள் வெட்டி வைத்திருந்தோம். அந்த மரங்களைத் தான், நாம் கொட்டான்களாக வெட்டி வைத்திருந்தோம்.
எமது மகஜரை எடுத்துச் சென்ற ஜிம்மி, உதயன் இருவரும் அதைக் கொடுத்து விட்டு திரும்பி வந்தால், மீண்டும் ஓரத்த நாட்டுக்கு போக அவர்களை விடமாட்டோமென அவர்களிடம் கூறினோம். எமது முகாமில் ஒரு முக்கியமான நடைமுறை கையாளப்பட்டது. எந்த விடையமாக இருந்தாலும், அது பொதுச் சபையில் பகிரங்கமாகக் கூறப்பட்டு விவாதித்து முடிவெடுப்பது என்பதுதான் அந்த நடைமுறை . இதனடிப்படையிலேயே, பொதுச் சபையின் முடிவிற்கேற்ப அவர்களிடம் திரும்பிப் போக முடியாது என்ற விடயத்தை கூறியிருந்தோம்.
ஆனால் நடந்ததோ வேறு, மகஜரைக் கொண்டு போனவர்கள் வந்தால் தானே! இரவு வழமையாக திரும்பி வருபவர்கள், அன்று வரவில்லை. இதனால் எமக்குள் சந்தேகம் எழுந்தது. இரவு நேர ஒன்று கூடலில் இதைப்பற்றி விவாதித்தோம். மறுநாள் காலையில் கூட எந்த எதிர்ப்போ அல்லது தகவலோ தலைமையிடமிருந்து வரவில்லை.
இதனால் ஒரு சில தோழர்கள் நாம் கொடுத்த மகஜரை இவர்கள் ஏற்றுக்கொண்டு, விவாதித்து நல்ல பதிலை தரப்போகின்றார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இன்னும் சிலர் இல்லை, அவர்கள் எதுவும் தரமாட்டார்கள் என்றனர். அத்துடன் அவர்கள் எமது முகாமை மூடிவிடுவார்கள் என்றனர். இப்படி கூடலின்போது இதை விவாதித்ததுடன், முகாமை மூடினால் என்ன செய்வது என்ற கோள்வியையும் முன்வைத்தனர் சிலர். தலைமை சரியான பதில் தராத பட்சத்தில், நாம் முகாமை விட்டு புறப்பட்டு ஊர்வலமாக ஓரத்த நாட்டுக்கு செல்வதென்றனர் ஒரு சிலர். மற்றவர்கள் நாம் தமிழ்நாடு காவல் துறையில் இது தொடர்பாக முறையிடுவது என்ற கருத்தை முன்வைத்தனர்.
இதில் நான் ஊர்வலமாகப் போவது தான் நல்லது என்று விவாதித்தேன். விவாதம் நீண்டதால் வழமைக்கு மாறாக நீண்டநேரம் எல்லோரும் விழித்திருந்தோம். தொடர்ச்சியாக நடந்த விவாதத்தில், தலைமையிடமிருந்து இருந்து ஒரு கிழமைக்குள் பதில் வராத பட்சத்தில் மட்டுமே ஊர்வலம் போவது என்று முடிவிற்கு வந்தோம். நாம் வழமையான இடங்களில் படுப்பதை தவிர்த்ததால், நான் முகாமின் ஒரு மூலையில் சென்று உறங்கினேன்.
யாரோ ஒருவர் காலால் எனது காலை மிதித்து எழும்பு என்றார். நான் எழுந்ததும், நீதானே காந்தன் என்றார். நானும் ஆம் என்றேன். அவரின் கையில் ஏ.கே-47 துப்பாக்கி இருந்தது. சரி பெனியனைப் போட்டுக் கொண்டு வா என்று கூறினார். அவரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பார்த்ததும் எம்முகாமை தலைமையின் அடியாட்கள் கைப்பற்றிவிட்டார்கள் என உணர்ந்தேன். எனது பெனியனைக் தேடத் தொடங்க, மறுபடியும் அந்த நபர் கத்தினான். அருகில் இருந்த தோழர் டிஸ்கோவின் பெனியனை எடுத்து போட்டுக்கொண்டு அவருடன் பின் தொடர்ந்தேன். அந்த நபர் என்னை ஒரு வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றபோது சில தோழர்கள் தரையில் குப்புறப்படுக்க வைக்கப்பட்டிருந்தனர். என்னையும் அவர்களுடன் அதில் போய்ப்படு என்றதுடன், ஒருவருடனும் கதைக்கப்படாது, எனவும் மிரட்டினான் கையில் ஏ.கே-47 துப்பாக்கி வைத்திருந்தவன்.
அப்போது யார் யாரெல்லாம் எனக்கு அருகில் வரிசையாகப் படுத்திருந்தனர் என மட்டுக்கட்ட முடியவில்லை. கொஞ்சம் தலை அசைத்தாலும், பெரிய சத்தத்துடன் தலையை அசைக்க வேண்டாம் என்றனர் அங்கு எம்மை துப்பாக்கி முனையில் குப்புறப்படுக்க கட்டளையிட்டோர் . இன்னும் ஒருசிலரையும் எமக்கு அருகில் குப்புறப்படுக்குமாறு கட்டளையிட்டார்கள். சில மணித்தியாலங்களின் பின்னர் எம்மை அங்கே நின்ற வண்டியில் ஒவ்வொருவராக ஏற்றினர். முதலில் குப்புறப்படு எனக் கூறியவர்கள், இப்போது வாகனத்தில் இடப்பற்றாக் குறையால் எழுந்து அமர்ந்திப்பதுடன் தலையைக் குனிந்தபடி இருக்க வேண்டும் என பணித்தார்கள்.
வண்டி புறப்படத் தொடங்கியது. எம்மைச் சுற்றி நால்வர் ஆயுதங்களுடன் காவலுக்கு நின்றனர். அவர்கள் அனைவரும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றில் பயிற்சி முடித்துவிட்டு வந்திருந்தவர்கள். நான் ஒருவாறு என்னுடன் யார் யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள முயன்றேன் .எனக்கு அருகாமையில் விஜி என்ற தோழர் இருந்தார். அவர் தேனி முகாமில் பயிற்சி எடுத்தவர். வண்டி குறிப்பிட்ட நேரம் ஓடியபின் ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டது. எங்களை ஒவ்வொருவராக ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றனர்.
அப்போதுதான் யார் யார் என்னுடன் வந்தார்களென முழுமையாக அறியமுடிந்தது. அதாவது மகஜர் எழுதுவதற்கு முன்னின்றவர்களும், அது பற்றிய விவாதத்தில் அதிகமாக கதைத்தவர்களும் தான் கைது செய்யப்பட்டிருந்தனர். எம்முடன் தோழர் தங்கராஜாவும் இணைக்கப்பட்டிருந்தார்.
அங்கே எம்மை மீரான் மாஸ்டர் விசாரித்தார். மீரான் மாஸ்டர் என்ற பிரபலமான கொம்மியுனிஸ்ட் தலைவரின் மகன் அன்றைய காலத்தில் புளொட்டின் வெளி உளவுப்படைக்கு பொறுப்பாக இருந்தார். என்னிடம் அவர் கேட்ட கேள்வி, உனக்கும் புலிக்கும் தொடர்பு இருக்கிறதா?
நான் பயந்தவாறு இல்லை என்றேன். அப்படியானால் யாருடைய தூண்டுதலில் இதைச் செய்தாய் என்றார். இது வெளியார் ஒருவருடைய சதியும் அல்ல. இது எமது முகாமில் நாம் கூட்டாக எடுத்த முடிவு என்றேன்.
நீ எமது இயக்கத்தை ஒழிக்க வந்திருக்கின்றயா? இல்லை என்றேன்.
உனக்கும் சந்ததியாருக்கும் என்ன தொடர்பு? நான் ஒன்றும் இல்லை என்றேன்.
என்னைப் பக்கத்துக்கு அறைக்குப் போகும்படி மீரான் மாஸ்டர் கட்டளையிட்டார். எமது முகாமில் கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர். நான், விஜி, அன்ரனி, கே.ஆர். விஜயன், சோசலிசம் சிறி, ஆனந்தன், சண், சலா, ஜெகன் ஆகியோர் ஓர் அறைக்குள் தள்ளப்பட்டோம். ஏனையோர் அந்த அறைக்குள் வரவில்லை. சிறிது நேரத்தில் எம்மை ஏற்றி வந்த வண்டி ஓட்டுனர், அந்த அறைக்குள் பொருட்கள் எடுப்பதற்காக வந்தார். அவரை வெள்ளை அண்ணை என்று அழைப்போம். அவரை எனக்கு நன்கு தெரியும். அவர் என்னைக் கண்டதும், ஒரு பரிதாபமாக என்னைப் பார்த்தார். “ஏன் உனக்கு உந்தத் தேவையில்லாத வேலை” எனக் கூறியபடி, தனக்கு தேவையான பொருட்களை எடுத்துச் சென்றார்.
தொடரும்
– சீலன்
பழைய பதிவுகளை காண அழுத்துங்கள்