ஊமைக் கனவுகள்- சிறுகதை – கோதை
அவள் காத்திருந்தாள். காலம் முழுவதும் காத்திருக்கலாம் போன்ற உணர்வுடன் காத்திருந்தாள். இனியும் காத்திருப்பின் காத்திருந்த அர்த்தம் எல்லாம் பொய்த்து விடுமோ என்ற அச்சமேயில்லாமல் காத்திருந்தாள். நெஞ்சம் நிறைய ஆதங்கத்துடன் இருந்தவளுக்கு, வயிற்றில் இவன் ஊருக்குப் போகிறான் என்ற செய்தி பால் வார்த்தது போல அரசல் புரசலாகக் காதில் விழுந்து தொலைத்தது. அவளின் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் உண்டானது போல அவளது மனம் குதூகலித்தது.
“அண்ணை, ஊருக்குப் பயணமாம் எண்டு கேள்விப்பட்டனான், மெய் தானே?” அவளுக்கேயுரிய மெல்லிய குரலில் அவள் கேட்டபோது அவனும் ஒளிவு மறைவில்லாமல் பதில் சொல்ல நேர்ந்தது.
“ஏன் பவானி என்ன விசயம்? ஏதும் தேவையோ ஊரிலையிருந்து ?”
மௌனமாய்ப் போனவளின் விழிகளில் இருந்து மெல்லியதாய் ஈரமும் முகமெல்லாம் சற்றே நாணமுமாய் அவள் முகம் அவனுக்கு விடயம் என்னவென்று உணர்த்தினாலும் அவன் பொறுமையாய்க் காத்திருந்தான். அவனுக்கும் எல்லாம் அரசல் புரசலாய்க் காதில் விழுந்தது தான்.
“செல்வத்தைப் போய்ப் பார்க்க முடியுமோ? எனக்காக…ஒரேயொரு முறை பார்த்து கதைக்க முடியுமோ?” அவள் கால்கள் நிலத்தில் கோடுகளும் கோலங்களுமாய் அங்கும் இங்கும் அலைந்தன.
“எனக்கொண்டும் பிரச்சினையில்லை பவானி. ஏதோ நான் போற வழியில பார்த்துக் கதைக்கிறதுக்கு எனக்கொரு செலவும் இல்லை ஆனால் இவ்வளவு நாளும் உனக்கு சொல்லாத பதிலையே எனக்கு சொல்லப் போறான்?”
அவனுடைய ஆதங்கம் பவானிக்கும் தெரியாமலில்லை. எத்தனை தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், அக்கம் பக்கத்துக்கு வீட்டாரின் தொலைபேசியூடாக அனுப்பிய செய்திகள் என்று எல்லாமே பொசுக்கென கரியானதின் சரியான காரணம் கூட அவளுக்கு செல்வமோ அல்லது அவனை நன்கு தெரிந்தவர்களோ அல்லது அவளுக்குத் தெரிந்தவர்களோ கூட சொல்லவில்லை என்பது தான் அவளுக்கு வலித்தது.
அவளுக்கு ஊரில் சொந்தமெண்டிருந்த ஒரேயொரு அம்மம்மாக் கிழவியும் மூண்டு வருசத்துக்கு முதல் போய்ச்சேர்ந்த பின் அவள் வெளிநாட்டில் இருந்தாலும் அனாதையாகவே உணர்ந்து கொண்டாள். அவனும் அவளைத் தன் தங்கைகளில் ஒருத்தியாகவே கருதி அவளை அரவணைத்தாலும் அவளுக்குள் இருந்த தனிமையையும் விரக்தியையும் முழுமையாகப் போக்காட்ட முடியாமல் தோற்றுப் போய்விட்டான். ஊரில் தமது வீட்டில் காலம் காலமாக தொட்டாட்டு வேலையெல்லாம் இழுத்துப் போட்டுகொண்டு செய்த தெய்வானை ஆச்சிக்கு பேத்தி என மிஞ்சியது இவள் ஒருத்தி தான் என்பதை அவன் நினைத்துப் பார்த்துக்கொண்டான். கிழவி தான் போக முதல் ஒருத்தனிடம் அவளை ஒப்படைக்க வேண்டும் எனப் பிரயத்தனப்பட்டது வீணாய்ப் போனது. இருந்தாலும் கிழவி இறுதி வரையில் மனம் சளைக்கவில்லை.
“ஐயா எனக்கு உங்களை விட்டால் யாருமில்லை எண்டு உங்களுக்கும் தெரியும். நான் இல்லாது போனால் இந்தப் பவானிப் பெட்டையை நீங்கள் தான் கரை சேர்க்க வேணும்!”
கையெடுத்துக் கும்பிட்ட கிழவியை இவனது தகப்பன் என்ன சொல்வது என ஒரு வினாடி கூட யோசிக்காமல் பதில் கொடுத்தார்.
“அது நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் நாங்கள் பார்த்துக் கீத்து ஏதோ கரை சேர்ப்பம் தானே! ஏதோ பிறத்தியாரைக் கேட்குமாப் போல எல்லோ கேக்கிறாய் ஆச்சி?”
சொன்னது மட்டுமல்ல, அவளுக்கு ஒரு சரியான நேரத்தில் ஒரு நல்ல பொடியனை தேடி எடுக்க அவர் முயற்சியும் செய்தார். ஆனால் அந்த வேளையில்த் தான் நாட்டில் போர்க்கால சூழல் இறுகிப் போனது. தனக்கு ஊரில் இருந்த செல்வாக்கையும் பண பலத்தையும் தன் தங்கமான குணத்தையும் சரியான முறையில்ப் பாவித்து பவானியையும் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் சேர்த்தே வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்தார் மகராசன்.
பவானி மாத்திரம் தன் மனதை ஊரிலேயே செல்வத்திடம் விட்டு விட்டு வந்திருந்தாள். அவனுடன் நேரடியாகக் கதைக்கும் சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்காது விட்டாலும் அவனுடைய பார்வையும் புன்முறுவலும் அவளுக்கு அவன் விருப்பத்தையும் தெரிய வைத்தது மாத்திரமில்லை அவளுடைய தொலைபேசி எண்ணையும் அவன் வாங்கியிருந்தான். அவள் ஊரிலிருந்து புறப்பட முன்னர் அவனைத் தவிர வேறொருவனைத் தன்னால் மனதால் கூட நினைக்க முடியாது என்பதை இவளும் அவனுக்கு அறுதியிட்டுக் கூறிஇருந்தாள்.
செல்வத்துக்கும் அவளுக்கும் சிறு பிராயத்து வாழ்வு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாய்த் தான் இருந்தது. அவளுக்குப் பெற்றோர் இல்லாதது போலவே அவனுக்கும் சிறுவயதிலேயே அவன் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்களைப் பார்த்து அவளது ஊரிலிருந்த வைதேகி அக்கா குடும்பம் அவனைத் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கியிருந்தது. ஊரில் இதெப்படி சாத்தியமானது என எல்லோரும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். அதற்கும் காரணம் இருந்தது. வைதேகி அக்கா குடும்பம் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த போது செல்வத்தின் குடும்பம் வெளியே நின்று தான் கும்பிட்டுப் போனது. ஆனால் இண்டைக்கு வைதேகி அக்கா பத்தே வயதான செல்வத்தை தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கியிருந்தாள். அவன் குடிகாரக் கணவனும் சண்டியனுமான ரத்தினத்திடம் ஊர்ச்சனங்கள் ஏன் வாயைக் கொடுத்து அடி வாங்குவான் என ஒதுங்கிப் போய் விட்டார்கள்.
வைதேகி அக்காவுக்கும் ரத்தினத்தாருக்கும் அடிக்கடி வாய்ச்சண்டையும் அடிதடியும் ஏற்படத் தொடங்கியது. அவர்களுக்கு குழந்தைகளும் இல்லாததால் செல்வம் ஒருத்தனே அவர்களுக்கு என்றானான். ரத்தினத்தாரின் குடியும் குறைந்த பாடில்லாமல், அவரை ஊரில் உள்ள எல்லாத் திண்ணைகளிலும் சனங்கள் தூக்கிக் கிடத்தி விடத் தொடங்கியிருந்தார்கள்.
பவானியும் ஊரை விட்டு வந்து ஐந்து வருடங்கள் ஓடி மறைந்து விட்டன. செல்வத்துக்கும் அவளுக்கும் இருபத்தியேழு வயதாகி விட்டது. அவனது தொலைபேசி அழைப்புகள் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கின. கேட்கும் போதெல்லாம் அவனுக்கு ஏதோ ஒரு காரணம் புதிது புதிதாய்க் கிடைக்கத் தொடங்கியிருந்தது போல் அவளுக்கு மனதில் ஒரு துயரம் படியத் தொடங்கியது.
*****************************************************************************
எந்தவித ஆரவாரமுமின்றி, தன்னோடு எடுத்து வந்திருந்த ஒரேயொரு உடுப்புப் பெட்டியை நண்பன் வீட்டில் வைத்து விட்டு, தான் ஓடியாடி விளையாடி வளர்ந்த ஊரைக் கால்நடையாகக் கடக்க எண்ணியவனை அவன் ஊரும் மண்ணும் அமைதியாகவே வரவேற்றன.
ஊர் நிறையவே மாறியிருந்தது. அடர்ந்து வளர்ந்திருந்த தெருவோரத்துப் பச்சை மரங்களில் அநேகமானவை காணாமல்ப் போயிருந்தன. அன்றொரு பொழுதில் ஊருக்கு அழகு தந்த தென்னை மரங்கள் செழிப்பை இழந்து சோடை பற்றி, நீண்டு உயர்ந்து தமது ஆயுள் முடியப் போகும் நாட்களை எண்ணி மாய்ந்து கொண்டிருந்தன. அவன் ஊரில் கட்டாக்காலியாக மேய்ந்து திரிந்த காலப்பகுதியில், வீடுகளுக்கிடையே கட்டடங்கள் ஏதுமன்றி வளர்ந்திருந்த புல், பற்றைகள். கிளிசரியா, கிளுவை மரங்களும், மலை வேம்பு நிழல்களும், முருங்கை மரங்களுமாக இருந்த காணிகளும், அவற்றில் ஏகாந்தமாய் மேய்ந்து கொண்டிருந்த ஆடு, மாடுகளும் காணாமல்ப் போயிருந்தன.
அவன் தொடர்ந்து நடந்த போது வீதியெங்கும் அடைத்த படி ஏராளமான புதிய வீடுகளும், சிறிய கடைகளுமாய் அவனுக்குத் தெரிந்திருந்த ஊர் நிறையவே மாற்றங்களை உள்வாங்கியிருந்தது. கலகலப்பாக தமக்கென ஒரு அடையாளத்தை வைத்திருந்த உடையார், முதலியார், விதானையார் வீடுகள் கூட பழைய தோற்றங்கள், அடையாளங்களும் ஏதுமின்றி நவீனத்துவமடைந்திருந்தன. தபாற்கந்தோருக்குப் பக்கத்திலிருந்த திண்ணை வீடு கூட கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. சந்தைக்கு போகத் தொடங்கியிருந்தவர்களின் துவிச்சக்கர வண்டியிலும், மோட்டார் வண்டியிலும் மரக்கறிகளும் தேங்காய்களும் மீன்களுமாய் வீதி களை கட்டத் தொடங்கியிருந்தது. எவரும் அவனை வித்தியாசமாய், புதிய ஒரு சீவனாகப் பார்க்காதது அவனுக்கு சிறிதே வியப்பாக இருந்தாலும், அதுவும் நல்லதுக்குத் தான் என எண்ணிக் கொண்டான். அதே நேரத்தில் ஊர் மக்கள் வசதியில் உயர்ந்திருந்தது மனதுக்கு ஒரு பக்கத்தில் மகிழ்வாக இருந்தாலும், மற்றைய பக்கத்தில் எதையோ இழந்த ஒரு வித ஏக்கம் அவன் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது.
“எட எங்கட சின்னையா விதானையாரிண்ட மூத்தவனே? என்ன மோனை சொல்லமால்க் கொள்ளாமல் வந்திறங்கியிருக்கிறாய்?” திடீரெனக் கேட்ட குரலில் சற்றே ஆச்சர்யத்துடன் நடப்பதை நிறுத்தினான்.
அவன் தான் என உறுதிப்படுத்துவதற்காக வயோதிபத்தையும் பொருட்படுத்தாமல் தடியை ஊன்றிக் கொண்டே கண்களை இடுக்கிக் கூர்ந்து அவனைப் பார்த்தவரை அவனும் அடையாளம் கண்டு கொண்டான்.
“என்ன மணியண்ணை எப்பிடி இருக்கிறியள்? வீட்டில எல்லாரும் சுகம் தானே?”
அவனது தந்தைக்குத் தான் அவர் மணியண்ணை, ஆனாலும் சிறு வயதிலிருந்தே அவரை அப்படியே கூப்பிட்டுப் பழகி விட்டான். அவரும் அவனைத் திருத்த முடியாமல் விட்டுவிட்டார்.
“ஏதோ வாழ்க்கை போகுதடா மோனை, உனக்கும் அப்பா சொல்லாமல் கொள்ளாமல்ப் போய்ச் சேர்ந்திட்டார். உன்ர சகோதரங்களும் இங்க இப்ப இல்லை. உன்னை அடிக்கடி நினைச்சுக் கொள்ளிறது தான். அது சரி இப்ப யாரைப் பார்க்க இவ்வளவு அவசரமாய்ப் போறாய்?” ஆதரவாய் விசாரித்தவரிடமிருந்த அதே பழைய அன்பு அவனை ஒரு நிமிடம் அசர வைத்தது.
“இவள் தங்கச்சி பவானிக்கு ஒரு சம்பந்தம் சரி வருமாப் போல் இருக்குது மணியண்ணை. அது விசயமாய்த் தான் நான் எங்கட ஊர்ப்பக்கம் வந்தனான். என்னோட படிச்ச பொடியன் ஒருத்தன் கொஞ்சம் சுகமில்லாமல் இருக்கிறான், சரியாய்க் கஸ்ட்டப்படுறான் எண்டு கேள்வி. அவனைப் பார்க்க வெளிக்கிட்ட இடத்தில தான் பவானியின்ர அலுவலையும் பார்த்துக் கொண்டு போவம் எண்டு நினைச்சனான்…”
அவன் இழுக்க மணியண்ணையின் முகமெல்லாம் பிரகாசமாகியது.
“அப்ப ஒரு நல்ல விஷயத்துக்குத் தான் வந்தனீ எண்டு சொல்லன்! அதுவும் எங்கட ஊரை மறக்காமல் எங்கட ஊரில தான் சம்பந்தம் எண்டால் எனக்குக் கற்கண்டு சாப்பிட்ட மாதிரி எல்லோ இருக்கு!
யார் அந்த ராசியான பொடி? அதுவும் பவானியின்ர குணத்துக்கும் வடிவுக்கும் யாரோ குடுத்து வைச்சிருக்கிறான்!” நடுங்கிய குரலில் சந்தோசம் தள்ளாடச் சொல்லிவிட்டு அவனை ஆர்வத்துடன் பார்த்தார்.
“எல்லாம் உங்களுக்கும் தெரிஞ்ச பொடி தான்… எங்கட வைதேகி அக்காவின்ர மகன் செல்வத்தைத் தான் கேப்பம் எண்டு போய்க் கொண்டிருக்கிறன்…” அவன் மெதுவாக விஷயத்தைப் போட்டு உடைத்தான்.
“என்ன மோனை சொல்லுறாய்?” அவர் குரலில் அப்பட்டமாகத் தெரிந்த கலக்கம் அவருடைய வயதினால் ஏற்பட்ட நடுக்கம் போல இல்லாது வித்தியாசமானதாய் இருந்ததை உணர்ந்தான்.
“வேறை ஒருத்தரும் அம்பிடாமல் போயும் போயும் இப்பிடியே அவள் பிள்ளையை விழுத்தப் போறாய்!” மணியண்ணையின் குரலில் இருந்த கொஞ்ச நஞ்ச ஆர்வமும் இல்லாமல் போய்க் குழி விழுந்த கண்களில் சற்றே கண்ணீர் தெரிய அவன் குழம்பித்தான் போனான்.
“ஏன் மணியண்ணை அவனுக்கு என்ன குறை? ரத்தினத்தார் மாதிரி ஏதும் குடி, சிகரெட் எண்டு தொடங்கீட்டானோ?” குடியும் சிகரெட்டும் ஊரில இப்பவும் ஒரு பெரிய விசயமாய்தான் இருக்கும் போல என எண்ணி மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.
அவர் எதுவும் சொல்லாமல் இடத்தை விட்டு நகர, அவனும் வேறு வழியில்லாமல் அவருக்கு விடை கொடுத்தான். சில வேளை அவருக்கு செல்வத்தைப் பிடிக்காமல் போனதுக்கு வேறு ஏதும் காரணம் இருக்கலாம் என அவன் எண்ணிக்கொண்டான்.
செல்வத்தின் தொலைபேசித் தொடர்பு கிடைக்கவில்லை. பவானி சொன்னது போலவே விடி காலையிலேயே பல தடவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவனுக்குப் பயனில்லாமல்ப் போய்விட்டது. வீடு தெரிந்திருந்த படியாலும் நேரத்தை வீணாக்க விரும்பாமலும் தான் அவன் இப்படித் திடீரெனப் புறப்பட்டு வரவேண்டியதாயிற்று.
மருதங்கேணிப் பிள்ளையார் கோவில் கல்லு ஒழுங்கை மாத்திரம் எந்த மாற்றமுமின்றி அவனைச் செல்வத்தின் வீட்டுக்கு அழைத்துச் சென்றது. ஊரில் பிரதான வீதியில் அமைந்திருந்த ஏனைய வீடுகள் எல்லாம் நவீனத்துவமடைந்திருக்க, வைதேகி அக்கா வீடு மட்டும் பாழடைந்த தோற்றத்தில் கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் வரும் பேய் வீடுகளை ஞாபகம் ஊட்டியபடி ஒரு வித அமைதியில் ஆழ்ந்திருந்தது. இவனைக் கண்டதும் முற்றத்தில் படுத்திருந்த நாய் ஒன்று தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு மீண்டும் சுருண்டு தூங்கியது. அவன் படலையைத் தட்டினான். ஒருவரும் வருமாப்போல் இல்லாததால் சிறிது நேரம் தயங்கி நின்று விட்டு உள்ளே போகலாமா விடலாமா என எண்ணிய வேளை, பவானியின் ஏக்கமான முகம் கண்ணில்த் தோன்றி மறைந்தது. சுற்று வட்டாரத்தில் மனித நடமாட்டமேயில்லாமல் இருந்ததில் யாரையும் அவர்களைப் பற்றிக் கேட்கவும் முடியவில்லை.
படலையத் திறந்து பார்த்ததில் படலைக்கும் அந்த நாற்சார் வீட்டுக்கும் இடையில் முன்பு சிறிதாக இருந்த மாமரங்கள் எல்லாம் வளர்ந்து வீட்டின் ஓட்டைத் தவிர வேறெதுவும் தெரியாதபடி வீட்டை முற்றாக மறைத்து விட்டிருந்தன.
அவன் மெதுவே நடந்து முன் முற்றத்திற்கு வந்த பின் தான் ஏதோ ஒரு ஆள் அரவத்தை அவதானித்தான். அந்தக் கயிற்றுக் கட்டிலில் எதுவோ அசைவு. வைதேகி அக்காவுக்கு வயது ஒன்றும் பெரிதாகப் போகவில்லை என்பது அவளது உடல் வாகுவில்த் தெரிந்தது.
அவனுக்கு வாயெல்லாம் உலர்ந்து மூச்சுக்காற்று வெப்பமாய் வெளியேறியது. இந்த வினாடி இப்படியே யாரும் தன்னைப் பார்க்க முன்னர் முற்றத்து மண்ணில் மூழ்கி விட்டால் என்ன என்ற ஒரு வினோத எண்ணக்கலவை ஒன்று தோன்றி மறைந்தது.
அவன் கால்கள், அவனை மிக மெதுவாக அந்த முற்றத்தில் இருந்து வந்த வழியே, வெளியே அழைத்து வந்தன. அவன் படலைக்கு வெளியே வந்த போது, தென்னோலைகளை இழுத்துக்கொண்டு அவனைக் கடந்து சென்ற ஒரு நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி ஒரு நமுட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்துச் சென்றாள்.
*****************************************************************************
ஊருக்குப் போயிருந்த அண்ணனிடமிருந்து பவானிக்கு குறுஞ்செய்தி வந்திருந்தது.
“செல்வத்தை மறந்து விடு. அவன் திருமணமாகி எங்கோ போய்விட்டான்! அவனைத் தேடித் திரிந்து களைத்து விட்டேன்!”