கேகாலை கொரோனா பாணி மருந்து குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அக்கறை
கோவிட் -19 யை தடுக்க உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் விஞ்ஞான சரிபார்ப்பை விரைவுபடுத்துமாறு தேசிய ஆராய்ச்சி கவுன்சிலுக்கு கெளரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, டாக்டர் ஹர்ஷா சுபசிங்க மற்றும் டாக்டர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ள அறிவியல் சிகிச்சை முறைகள் மற்றும் கேகாலை தம்மிக பண்டார உருவாக்கியுள்ள கொரோனா நோய் தடுப்புக்கான பாணி மருந்து ஆகியவை குறித்து மேலும் உறுதிப்படுத்துமாறு பிரதமர் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
கேகாலையைச் சேர்ந்த வைத்தியர் தம்மிக பண்டாரவின் நோயெதிர்ப்பு அமிர்தம் குறித்த விபரங்கள் ரஜரட்டா பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் நாட்டின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உடலியல் நிபுணத்துவம் வாய்ந்த ஐந்து மூத்த பேராசிரியர்கள் மற்றும் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் ஆகியோரின் பங்களிப்புடன் மருத்துவ பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹல அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோவிட் -19 தடுப்புக்காக உலகில் காணப்படும் தடுப்பூசிகளைப் பற்றி ஆய்வு செய்து அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னர் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அறிவித்திருந்தார்.
பிரதமரது பணிப்பின் அடிப்படையில், தேசிய ஆராய்ச்சி கவுன்சில் (என்.ஆர்.சி) கோவிட் -19 க்கு இதுவரை கண்டெடுக்கப்பட்ட மூன்று சிறந்த தடுப்பூசிகள் குறித்த சி.டி.ஏ அறிக்கையை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியிடம் ஒப்படைத்துள்ளது.
ரொஹான் வெலிவிட்ட
பிரதமரின் ஊடக செயலாளர்