சாதிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் தேசிய மருந்து விசத் தன்மை கொண்டது : இலங்கை அரச ஆயுர்வேத வைத்திய சங்கம்
நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி பரவலாகப் பேசப்படும் கொரோனா ஒழிப்பிற்கான தேசிய தயாரிப்பு மருந்து குறித்து தேசிய சுகாதார அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து ஆராய்ந்து கணிப்பு செய்ய வேண்டும் என இலங்கை அரச ஆயுர்வேத வைத்திய சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
புதிய மருந்து என்றால் அதனை இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி, விலங்குகளுக்கு வழங்கி பரிசோதனை செய்த பின் தேக ஆரோக்கியமுடைய வயதுடையவருக்கு வழங்கி பரிசோதனை செய்த பின்னரே இறுதி முடிவுக்கு வர வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் பிரசாத் ஹெந்தவித்தாரன கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
சாதிக்காய் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகள் விலங்குகளுக்கு வழங்கி பரிசோதனை செய்யப்பட்ட போது விச தன்மை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முறையற்ற வகையில் வீட்டில் தயாரிக்கப்படும் இவ்வாறான மருந்துகளை அருந்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை அருந்தும் நபர்களே பொறுப்பெடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இவ்வாறான மருந்துகளுக்கு அநாவசிய விளம்பரம் வழங்கும் நபர்களும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் என வைத்தியர் பிரசாத் ஹெந்தாவித்தாரன குறிப்பிட்டுள்ளார்.