மருதனார்மடம் கொரோனா கொத்தணி 39 ஆக அதிகரிப்பு! – இன்று மாத்திரம் 6 பேருக்குத் தொற்று
யாழ். மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மேலும் 6 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
ஏழாலையைச் சேர்ந்த 3 பேரும், இணுவிலைச் சேர்ந்த 2 பேரும், உடுவிலைச் சேர்ந்த ஒருவரும் கொரோனாத் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை இன்று மாலை 6.15 மணிக்கு வெளியானது. அங்கு இன்று 98 பேரின் மாதிரிகள் மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் ஏழாலையைச் சேர்ந்த 3 பேருக்கும், இணுவிலைச் சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, முதலாவது தொற்றாளர் வசிக்கும் உடுவில் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 150 பேரின் மாதிரிகள் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதன் அறிக்கை இன்றிரவு 8.45 மணிக்கு வெளியாகியது. அதில் உடுவிலைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவரின் மச்சான் உறவு முறை நபர், மருதனார்மடம் பொதுச்சந்தையில் முதலாவது தொற்றாளருடன் வியாபாரத்தில் ஈடுபடுபவராவார்.
அத்துடன், இன்று அடையாளம் காணப்பட்டவரின் மச்சான் உறவுமுறை வியாபாரியின் மாதிரி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன. எனினும், அதன் முடிவு கிடைக்கவில்லை என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இதையடுத்து மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.