மாவட்ட செயலக வளாகத்தினை பசுமைப்படுத்தும் செயற்றிட்டம்.
மாவட்ட செயலக வளாகத்தினை பசுமைப்படுத்தும் செயற்றிட்டம் இயற்கையை நேசிப்போம் அதனுடன் இணைந்து வாழ்வோம்.
முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் பாராமரிக்கப்பட்டு வருகின்ற தோட்டங்களின் வளர்ச்சி நிலையினை மென்மேலும் அதிகரிக்கச் செய்தல் மற்றும் பசுமைப்படுத்தும் செயற்றிட்டத்தினை பரவலாக்கச் செய்யும் நோக்கோடு மாவட்ட செயலக உற்பத்தித் திறன் பிரிவினரால் “இயற்கையை நேசிப்போம் : அதனுடன் இணைந்து வாழ்வோம்” எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டத்தினை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட செயலக பிரதம உள்ளக் கணக்காய்வாளரும், உற்பத்தித் திறன் பிரிவின் பிரதம இணைப்பாளருமான க.லிங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் பங்கேற்புடன் இன்று(15) காலை 09.00மணிக்கு மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட செயலக வளாகத்தில் முன்பகுதி, பின்பகுதி, மேல்மாடி மற்றும் கிளைகள் தமக்குரிய பகுதிகள் என்கின்றவாறு மூலிகை, மரக்கறிகள், பழங்கள், நிழல் தரு மரங்கள் மற்றும் பூந்தோட்டங்கள் என்கின்றவாறு பசுமைப்படுத்தும் செயற்றிட்டத்தை கடந்க நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக குறித்த துறைசார் அதிகாரிகளினுடைய ஆலோசனை மற்றும் வழிப்படுத்தல்களுடன் மாவட்ட விவசாய பணிப்பாளர் தலைமையில் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் தோட்டங்களை பார்வையிடல், ஆய்வு செய்தல், மேலதிக மாற்றங்களிற்காக ஆலோசனைகள் வழங்கல், பின்னூட்டல்களை அவதானித்தல், இறுதியாக குறித்த பிரிவுகளிற்கு புள்ளிகளை வழங்கி தரப்படுத்தல் என்கின்றவாறு இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் இக் கலந்துரையாடலில் குறித்த வேலைத்திட்டத்திற்கான கிளைகளின் பங்களிப்பு, வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள், பயிர்களை தெரிவுசெய்தல், வளங்களின் கையாளுகை, புள்ளியிடல் நுட்பங்கள் தொடர்பாக இக் கலந்துரையாடலில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஒவ்வொரு கிளைகளிலிருந்து தலா இரண்டு உத்தியோகத்தர்கள் வீதம் கலந்து கொண்டனர்.