விவசாய மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் மக்களிடம் கையளிப்பு.

மாதிவெல மேற்கு நகர விவசாய மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் பிரதமரினால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!
மாதிவெல மேற்கு நகர விவசாய மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் (2020.12.15) பிற்பகல் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
1.5 கிலோ மீற்றர் கொண்ட நடைபாதை, 1.5 கிலோமீற்றர் நீளமான இரண்டு சைக்கிள் பாதைகள், சிறுவர் பூங்கா, 8 அம்சங்களுடனான வெளிப்புற உடற்பயிற்சி கூடம், 40 வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகன நிறுத்துமிடம், பிரதான வீதிக்கு இணையான வாகன நிறுத்துமிடம், சிறு மற்றும் பெரும் போகத்தின் போது சாகுபடி செய்வதற்கு நீரை பெற்றுக் கொடுக்க கூடிய இரு குளங்கள் என்பன இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக 23 ஏக்கர் நிலப்பரப்பில் பரவி காணப்படும் இந்த அபிவிருத்தி திட்டத்தின் பணிகள் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
கொவிட்-19 முதலாவது அலையின் போது பல்வேறு தடைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் எட்டு மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
கொவிட்-19 சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சின் அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலேசனைக்கமைய இந்த திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைய இந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்களின் வரலாற்றில் பெற்ற பாரிய வெற்றியாகும். திட்டம் தொடர்பான கட்டுமானப் பணிகள் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டது. அதற்கான மொத்த செலவு 390 மில்லியன் ரூபாயாகும்.
இதற்கு முன்னர் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட இத்திட்டத்தின் ஆரம்ப கட்டம் இதுவரை வெற்றிகரமாக செயற்படுகிறது. அதன் கீழ் சேதனப் பசளையை உபயோகித்து உள்ளூர் நெல் வகைகளை மாத்திரம் சாகுபடி செய்யும் வயல் பிரதேசம் மற்றும் முதல் முறையாக பல் பயிர் சாகுபடியை கொழும்பு புறநகர் பகுதிகளில் பிரபலப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பல் பயிர் சாகுபடி 44 துண்டு நிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி நாலக கொடஹேவா, கஞ்சன விஜேசேகர, லொஹான் ரத்வத்தே, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் குமார, மதுர விதானகே, பிரமித பண்டார தென்னகோன், பிரேமநாத் சீ. தொலவத்த, டயனா கமகே, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டத்தாபனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டப்ளிவ். டி சொய்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.