யாழ்ப்பாணம் மாநகர சபை ‘பட்ஜட்’ மீண்டும் தோற்கடிப்பு மேயர் பதவியை இழக்கின்றார் ஆர்னோல்ட்.
யாழ்ப்பாணம் மாநகர சபை
‘பட்ஜட்’ மீண்டும் தோற்கடிப்பு
மேயர் பதவியை இழக்கின்றார் ஆர்னோல்ட் .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம், மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டால் கடந்த 2 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அந்தச் சமர்ப்பணத்தின்போது, அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டு முதலாவது வாசிப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு இடம்பெற்றது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு எதிராக வாக்களித்தனர்.
அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்தமையால் மேயர் பதவியை இழக்க வேண்டிய நிலைமை ஆனோல்ட்டுக்கு ஏற்பட்டுள்ளது.