யாழ். மாவட்டத்தில் கொரோனா நிலை: சுகாதார அமைச்சின் தகவலே உண்மை.
யாழ். மாவட்டத்தில் கொரோனா நிலை: சுகாதார அமைச்சின் தகவலே உண்மை
தொற்றைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்கும் தமிழ் மக்களுக்கு அரசு நன்றி தெரிவிப்பு
“தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாவின் முதலாவது அலை தாக்கம் ஆரம்பம் முதல் இதுவரை அனைத்துத் தகவல்களும் சுகாதார அமைச்சாலேயே வெளியிடப்படுகின்றது. சுகாதார அமைச்சின் தகவல்களையே நாம் வெளியிடுகின்றோம். இதுதான் நடைமுறை. சுகாதார அமைச்சின் தகவல்கள் அனைத்தும் உண்மை.”
இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சுகாதார நடைமுறைகளை வடபகுதி மக்கள் ஒழுக்கமாகவும் நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கின்றார்கள். அதன் காரணமாக முப்படையினர் மற்றும் பொலிஸார் சுகாதாரப் பகுதியினரால் வடபகுதியில் இலகுவாகக் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கூடியாததாகவுள்ளது.
அத்தோடு தமிழ் மக்களுக்கு இந்தக் கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியதற்காக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பில் நான் தமிழ் மக்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்” – என்றார்.