யாழ். மருதனார்மடம் கொரோனா கொத்தணி 73 ஆக உயர்வு!
யாழ். மருதனார்மடம் கொரோனா கொத்தணி 73 ஆக உயர்வு!
யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் இன்றும் 5 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட சுன்னாகம் சந்தை வியாபாரிகள் 114 பேருக்கு இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று மாலை வெளியான முடிவுகளின்படி இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் உடுவில் பகுதியையும், மற்றையவர் மானிப்பாய் பகுதியையும் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 418 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இன்றிரவு வெளியான முடிவுகளின்படி 3 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூவரும் இணுவில், மானிப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
அதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியால் கடந்த 7 நாட்களில் 73 பேர் பாதிக்கபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.