மாகாண சபை முறைமையால் நாடு ஒருபோதும் பிளவுபடாது.
மாகாண சபை முறைமையால் நாடு ஒருபோதும் பிளவுபடாது.
தேர்தல் அவசியம் என மஹிந்தவின் சகாவான முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் வலியுறுத்து.
“மாகாண சபை முறைமை மூலம் நாடு ஒருபோதும் பிளவுபடாது. எனவே, உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.”
– இவ்வாறு வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் வலியுறுத்தினார்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“நல்லாட்சி அரசின்போதுதான் சூழ்ச்சி மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தல் பிற்போடப்பட்டது. மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டது. இதற்கான முழுப் பொறுப்பையும் கடந்த ஆட்சியாளர்கள்தான் ஏற்க வேண்டும்.
அதேபோல் மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவதற்காக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிலைப்பாடாகும். தேர்தல் நடத்தப்படும் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், எமது கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்சவும் அறிவித்துள்ளனர்.
மாகாண சபைத் தேர்தல் பற்றிக் கதைக்கும்போது பதவி ஆசையால்தான் அறிவிப்புகள் விடுக்கப்படுகின்றன என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மை அதுவல்ல. மாகாண சபைகள் மூலம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கலாம். கொள்கை அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கலாம். பலம் பொருந்திய சக்திகளைக் கட்டியெழுப்பலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலமைச்சர் பதவியைத் தியாகம் செய்து விட்டே நான் அன்று மஹிந்த ராஜபக்ச பக்கம் நின்றேன்.
தனவந்தர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் மாகாண சபைகள் தேவைப்பாடாது. ஆனால், சாதாரண மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கும், நிவாரணத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் மாகாண சபைகள் முறைமை அவசியம். 80 வீத நிர்வாகம் மாகாண சபைகளின் கீழ்தான் நடக்கின்றன. மாகாண சபைகளின் கீழ் எத்தனை பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளன என்பது தெரியுமா? மாகாண சபையில் காலடி வைக்காதவர்கள்தான் இன்று அது பற்றி விமர்சிக்கின்றனர்.
இனவாத கோணத்திலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. மாகாண சபை முறையால் நாடு பிளவுபடவில்லை. இனிப் பிளவும்படாது. அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மறுசீரமைக்கப்பட்டால் மாற்று வழி என்னவென்பது பற்றி எவரும் அறிவிக்கவில்லை.
மாகாண சபை முறைமையை மக்கள் அனுமதித்துள்ளனர். எனவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்க மாகாண சபை கட்டமைப்பு அவசியம்” – என்றார்.