யாழ். மாநகர சபை பட்ஜட்டை ஆதரிக்குமாறு குறுஞ்செய்தி அனுப்பினர் கூட்டமைப்பினர்!போட்டுடைத்தார் டக்ளஸ்.
யாழ். மாநகர சபை பட்ஜட்டை ஆதரிக்குமாறு குறுஞ்செய்தி அனுப்பினர் கூட்டமைப்பினர்!
போட்டுடைத்தார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்.
“இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை ஆதரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆரம்பம் முதல் இறுதி வரை எனக்குக் குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தனர். எனினும், எழுத்துமூலம் அந்தக் கோரிக்கை வராத காரணத்தால் அதை நிராகரித்திருந்தேன்.”
– இவ்வாறு போட்டுடைத்தார் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ். மாநகர சபை வரவு – செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எனக்குக் குறுஞ்செய்தி மூலம் யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிக்குமாறு கோரி இருந்தனர்.
எனினும், அவர்கள் நேரடியாகச் சந்திக்க விரும்பவில்லை. எனினும், நான் அதற்கு எழுத்து மூலம் குறித்த விடயத்தைத் தெரியப்படுத்தினால் அதனைப் பரிசீலிக்க முடியும் எனத் தெரிவித்திருந்தேன்.
ஏனெனில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றோர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்கள்.
ஆனால், ஊடகங்கள் வாயிலாக அதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள். அதன் காரணமாகவே நான் எந்த விடயம் என்றாலும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுமாறு கோரியிருந்தேன். எனினும், அவர்கள் அதனைச் செய்யவில்லை.
இந்தநிலையில், வரவு – செலவுத்திட்டம் தினத்தன்று காலையில் யாழ். மாநகர மேயர் ஆனோல்ட் தமக்கு ஆதரவு வழங்குமாறு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். எனினும், அது தொடர்பில் நான் காலதாமதமாகி விட்டது எனத் தெரிவித்திருந்தேன்” – என்றார்.
இன்று கடல்வள முயற்சியாளர்கள் அமைச்சினூடாக கடன் பெறக் கோரிக்கை வைத்தவர்கள் ஏழு பேருக்கு காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டன.