மாகாண சபைகள் முறைமைக்கு எதிராக கோட்டாவின் சகா மீண்டும் போர்க்கொடி!
பொய்ப்பித்துப் போகுமா அரசின் உறுதிமொழி?
மாகாண சபைகள் முறைமைக்கு எதிராக கோட்டாவின் சகா மீண்டும் போர்க்கொடி!
இந்தியா மீதும் கடும் தாக்கு
மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல உறுதியளித்துள்ள நிலையில், மாகாண சபைகள் முறைமைக்கு எதிராக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
மாகாண சபைகள் முறைமையால் நாட்டில் உயிர்த் தியாகம் செய்த, அங்கவீனமடைந்த படையினருக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது எனவும், 9 மாகாணங்களில் 9 விதமான சட்டங்களை உருவாக்க முடியுமாயின், ஒரே நாடு ஒரே கொள்கை பொய்யாகிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை நேற்று சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“இந்திய – இலங்கை ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. ஒரே நாடு ஒரே கொள்கை என்பதே ஜனாதிபதியின் கொள்கை என்பதால், மாகாண சபை முறைமையை எதிர்க்கின்றேன்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி, தமிழீழ விடுதலைப்புலிகளை நிராயுதபாணிகளாக்குவது, மீண்டும் போர் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, வடக்கில் வாழ்ந்த மக்களை மீள்குடியேற்றுவது ஆகிய மூன்று நிபந்தனைகளை இந்தியாவால் நிறைவேற்ற முடியாமல்போயுள்ளது.
இந்த உடன்படிக்கை நடைமுறையில் இல்லாத நிலையில் மாகாண சபை முறைமைக்கு இணங்கி மாகாண சபைகள் மூலமோ அரசமைப்பின் மூலமோ நாட்டை எவருக்கும் வழங்கப்போவதில்லை.
மாகாண சபைகள் முறைமையால் நாட்டில் உயிர்த் தியாகம் செய்த, அங்கவீனமடைந்த படையினர்களுக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது” – என்றார்.