டிசம்பர் 26ஆம் திகதி விமான நிலையம் திறப்பு! சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன அறிவிப்பு.
டிசம்பர் 26ஆம் திகதி விமான நிலையம் திறப்பு! சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன அறிவிப்பு.
“சுற்றுலாப் பயணிகளுக்காக இம்மாதம் 26 ஆம் திகதி முதல் விமான நிலையம் திறக்கப்படும். முன்னோடி திட்டமாகவே இந்த நடவடிக்கை அமையும். அதன்பின்னர் சாதாரண சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான திட்டம் குறித்து ஜனவரி நடுப்பகுதியில் அறிவிக்கப்படும்.”
இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மாத்தறை நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“நாட்டு மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு, சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றோம்.
சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதன் தாக்கம் அனைவருக்கும் புரிந்தது. எனவேதான் வெகுவிரைவில் அத்துறையைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அதன்மூலம் மக்களுக்கான நிவாரணத் திட்டங்களையும் முன்னெடுக்கலாம்.
விமான நிலையத்தை திறக்குமாறு ஆரம்பத்தில் வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், இன்று திறக்க வேண்டாம் எனவும், அவ்வாறு திறந்தால் சுற்றுலா கொத்தணி உருவாகி விடும் எனவும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அத்துடன் அவ்வாறு திறந்தால்கூட பயணிகள் வரமாட்டார்கள் எனவும் வாதிடுகின்றனர்.
நாட்டை மூடிவைத்திருந்தவேளையிலும் நாட்டில் ஆங்காங்கே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். எனவே, கொரோனா சவாலை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும். எனவே, சுகாதார துறையினரின் ஆலோசனையின் பிரகாரம் சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பமாகும். அதன்மூலம் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும்.
இதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி சுற்றுலாப்பயணிகளுக்காக விமான நிலையம் முன்னோடி திட்டமாக திறக்கப்படும். அதன்பின்னர் சாதாரண சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான திட்டம் குறித்து ஜனவரி நடுப்பகுதியில் அறிவிக்கப்படும்” – என்றார்.