மத்திய அதிகேவக நெடுஞ்சாலை தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும்.
மத்திய அதிகேவக நெடுஞ்சாலை தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிச்சயமாக தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2020.12.19) தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய நாடு முழுவதும் பத்து இலட்சம் ரண்பிம காணி உறுதிபத்திரங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் வடமேல் மாகாணத்திற்கான காணி உறுதிபத்திரங்கள் வழங்கும் நிகழ்வு குருநாகல் ரண்சர மண்டபத்தில் இடம்பெற்ற போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்படும் இந்த உறுதிபத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வினூடாக உரிமம் அற்ற காணிகளுக்கு பிரதமரினால் சட்டரீதியாக 400 உறுதிபத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அரசாங்கம் தவறு செய்தால் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். எனினும் அரசாங்கம் நல்ல செயலொன்றை செய்தால் அதனை பாராட்டுவதற்கு எதிர்த்தரப்பினருக்கு முடியாதுள்ளமை கவலையான விடயமாகும் என கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் வேலைத்திட்டங்களை செயற்படுத்துவோம். வேலைத்திட்டங்களை செயற்படுத்திவரும் போது மக்கள் மற்றைய அரசாங்கத்திற்கு, ஐ.தே.க. அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்குகின்றனர்.
அதிகாரம் வழங்கப்பட்ட பின்னர் நாம் செய்த வேலைத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவர். அவற்றை வேறு விதமாக நிறைவேற்ற முயற்சிப்பர். அதனை தொடர்ந்து நாம் அதனை நாம் ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டியேற்படும். இன்றேல் தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலை ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி பிரதமரின் முழுமையான உரை வருமாறு,
இந்த நிகழ்வில் பங்கேற்க கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். விசேடமாக குருநாகல் பிரதேச மக்களுக்கு இதனை வழங்கக் கிடைத்தமை குறித்து பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த காணி சீர்த்திருத்த ஆணைக்குழு அமைக்கப்பட்ட காலத்தில், அன்று எமது அரசாங்கம், 1970களில் எமது அரசாங்கத்தில் இந்த மறுசீரமைக்கப்பட்ட காணிகளை பெற்றுக் கொள்ளும் போது அந்த சட்டத்திற்கு வாக்கை பயன்படுத்திய உறுப்பினர்கள் என்ற வகையில் இன்று பாராளுமன்றத்தில் இருப்பது நானும் வாசுதேவ நாணயக்கார அவர்களும் மாத்திரமே.
அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படும் காணிகளை, பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு நாம் அன்று எதிர்பார்த்திருந்தோம். இன்று ஆணைக்குழுவினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை, காணி அற்ற மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அக்காணிகளில் குடியிருப்பவர்களுக்கே காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன. காணியற்ற மக்களை தெரிவுசெய்து இந்த காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம். பல காணிகளுக்கு உறுதிகள் இல்லை. அவற்றிற்கு அரசாங்கத்திடம் உறுதியை பெற்றுக் கொள்வதற்கு முடியாமை காரணமாக ஒரு கடனை பெறுவதற்கு முயற்சிக்கும் போதே பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.
இன்றுள்ள நிலைமைக்கு அமைய மக்களுக்கு இந்த காணிகளை வழங்கி நிலையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க எமது ஆணைக்குழுவிற்கு சாத்தியமாகும் என நம்புகின்றேன். நாடு முழுவதும் இப்பிரச்சினை காணப்படுகிறது. அதனால் நாடு முழுவதும் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது முக்கியமாகும்.
இன்று குருநாகலுக்கு விஜயம் செய்து கண்டிக்கு செல்லும் அதிவேக நெடுஞ்சாலையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். அந்த அதிவேக நெடுஞ்சாலையை தம்புள்ளை வரை நீட்டிப்பதற்கு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன அவர்கள் கோரிக்கை விடுத்தார். அப்போது அது கிடைக்கும் என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார். அதனை நாம் நிச்சயமாக பெற்றுத் தருவோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த வேண்டும்.
எம்மால் செய்யக்கூடிய அனைத்து வேலைத்திட்டங்களையும் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாட் முன்னெடுப்போம். ஜனாதிபதி அனைத்து பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்து கிராமங்கள் தோறும் சென்று கிராமங்களிலுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு செயற்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். அதனால் நமக்கும், மக்கள் அனைவருக்கும் இலகுவாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
இதன்போது குருநாகல் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைய குருநாகல் நகரபிதா துஷார சஞ்ஜீவ அவர்களது பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து 54 இலட்சம் மதிப்பிலான பீ.சீ.ஆர். கருவி கௌரவ பிரதமரினால் குருநாகல் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான எஸ்.எம்.சந்திரசேன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெர்னான்டோ, லொஹான் ரத்வத்தே, டீ.பீ.ஹேரத், பிரியங்கர ஜயரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, மஞ்சுளா திசாநாயக்க, சுமித் உடுகும்புர, சரித ஹேரத், குணபால ரத்னசேகர, ஜயரத்ன ஹேரத், சாந்த பண்டார, காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.