போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே : John Durai Asir Chelliah
எஸ்பிபி மறைந்து
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்
ஆகப் போகிறது.
முன்னர் நான் எழுதிய எஸ்பிபி பற்றிய பதிவு ஒன்றை,
இன்று காலை ஃபேஸ்புக், என் கண்முன்னால் கொண்டு வந்து காட்டியது.
Memories…
“அது என்ன பதிவு ஜான் ?”
இதோ, அந்தப் பதிவு !
“அடியுங்கள் அவன் மூஞ்சியில்!
குத்துங்கள் அவன் முகத்தில் !!”
இப்படிச் சொன்னது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் அப்பா !
அவர் அடிக்கச் சொன்னது
வேறு யாரையும் அல்ல,
தன் மகன் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தைத்தான் !
ஏன் இப்படிச் சொன்னார் ?
சுமார் 40 ஆண்டுகளுக்கு முந்தைய ஃபிளாஷ்பேக் இது.
ஒரு நாள் இயக்குனர்
கே. விஸ்வநாத்தும் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் எஸ்.பி.பி.யின் வீட்டுக்குப் போனார்களாம்.
எஸ்.பி.பியை பார்ப்பதற்கு முன், அங்கிருந்த அவரது அப்பாவைப் பார்த்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்களாம்.
‘சங்கராபரணம்’ கதையை அவரிடம் சொல்லி இருக்கிறார்கள்.
அப்புறம் ?
அதை எஸ்.பி.பி.யே சொல்கிறார் :
“கதையைக் கேட்டு விட்டு இம்ப்ரஸ்ஸாகிவிட்ட எனது தந்தை, ‘முதல்ல உங்க படத்துக்கான பாடல்களை பாடிவிட்டு, பிறகு இவனை வேறு பாடல் பதிவுக்கு போகச் சொல்லுங்கள்’ என்றார்.
‘இந்தப் படத்துல இவன் ஒழுங்கா பாடலைன்னு சொன்னா, இவன் கன்னத்தில் அறைந்து பாட வையுங்கள். கேட்கவில்லை என்றால் மூஞ்சியில் குத்தி பாட வையுங்கள். இப்படி ஒரு வாய்ப்பு இவனுக்கு கிடைக்குமா ?’ என்றார் என் அப்பா.”
அப்பா இப்படிச் சொல்லி விட்டாரே என்று வருத்தப்பட்டார் எஸ்.பி.பி.
ஆனால் முகத்தில் அடித்தாலும் சரி, மூஞ்சியில் குத்தினாலும் சரி !
சங்கராபரணத்தில் நான் பாட மாட்டேன் என்று உறுதியாக சொல்லி விட்டாராம்.
ஒரு நாளைக்கு நான்கு ஐந்து ரிக்கார்டிங்குகள் என்று பிஸியாக பிரபலமாக இருந்த எஸ்.பி.பி.
சங்கராபரணத்தை மறுக்க காரணம் :
“எனக்கு சாஸ்திரிய சங்கீதம் தெரியாது. அந்தப் பயிற்சி எடுக்காதவன் நான். எனவே என்னால் பாட முடியாது. தயவு செய்து என்னை விட்ருங்க.”
விடவில்லை இயக்குனரும் இசையமைப்பாளரும் !
திரும்ப திரும்ப வற்புறுத்தி ‘சங்கராபரணம்’ பாடல்களை எஸ்.பி.பியை பாட வைத்து விட்டார்கள்.
அப்புறம் என்ன?
1979 இல் வெளிவந்த ‘சங்கராபரணம்’ சரித்திர வெற்றி படைக்க,
எங்கெங்கும் ஒலித்தது எஸ் பி பாலசுப்பிரமண்யம் குரல்.
“ஓங்கார நாதானு…”
“தொரகு நா இதுவன்ட்டி சேவா…”
“மானசசஞ்சரரே…”
“ராகம் தானம் பல்லவி…”
இப்படி எல்லா திசைகளிலும் எஸ்.பி.பி. குரல்தான் ஒலித்தது !
ஒரே நாளில் உலக அளவில் பிரபலமாகிப் போனார் எஸ்.பி.பி.
“அடியுங்கள் அவன் மூஞ்சியில்” என்று அன்று சொன்ன எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் அப்பா, இப்போது தன் மகனை கட்டி அணைத்து முத்தமிட கண்டிப்பாக ஆசைப்பட்டிருப்பார்.
ஆனால் எஸ்.பி.பி.மட்டும் அல்ல !
எந்த மகனும் அறிய மாட்டார்கள்
தந்தையின் ஆழ்மன அன்பையும்
அவர் தன் மீது வைத்திருக்கும் பாசத்தையும் !
இதைப் படிக்கும்போது நண்பர் ஒருவரின் பதிவு நினைவுக்கு வந்தது :
“உறங்கும் குழந்தை அறியாது
கண்டிப்பான அப்பா கொடுக்கும்
ரகசிய முத்தம்!”
“உண்மைதான் ஜான்.
அது என்னவோ,
எஸ்பிபி என்றாலே
தானாகவே நினைவுக்கு வந்து
தாலாட்டாக நெஞ்சில் ஒலிக்கிறது இந்தப் பாடல் !”
“போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே… ஹோ…”
எஸ்.பி.பி பற்றிய Memories…
அது என்றென்றும் நிலைத்திருக்கும் !