நல்லடக்கம் எங்களின் உரிமை; அதை மறுப்பது சர்வாதிகாரம்!
நல்லடக்கம் எங்களின் உரிமை;
அதை மறுப்பது சர்வாதிகாரம்!
கல்முனையில் கொட்டும் மழைக்கு மத்தியில் முஸ்லிம்கள் போராட்டம்.
ஜனாஸா எரிப்புக்கு எதிராக வெள்ளைத் துணி கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனையில் கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி முன்னாள் அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான வெஸ்டர் ஏ.எம்.றியாஸின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் கிழக்கு தேச விடுதலை இயக்கத்தின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளருமான வஃபா பாருக் உள்ளிட்ட அரசியல், சமூக, பொதுநல, ஊடகச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஜனாஸா எரிப்புக்கு எதிரான வாசகங்கள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டன.
ஜனாஸாவை அடக்க அனுமதி தா, நல்லடக்கம் எங்கள்; அடிப்படை உரிமை அதை மறுப்பது சர்வாதிகாரம், விஞ்ஞானத்தை ஏற்றுக் கொள்; இனவாதத்தைக் கை விடு, இனவாதிகள் அல்ல நிபுணர்கள் சொல்வதை கேட்டு நட, இனவாதமாக இல்லாமல் விஞ்ஞான ரீதியாக செயற்படு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நேர காலத்துடன் போராட்டம் நிறைவுற்றது.