மன்னிப்பாரா ட்ரம்ப்? : சுவிசிலிருந்து சண் தவராஜா
மானுட குலத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட பலரும் வரலாற்றில் காணாமற் போவது இயற்கையே. “பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவில” என்ற இயங்கியல் போக்கில், இதனைப் புரிந்து கொள்ளுதல் கடினம் அன்று. ஆனால், நவீன உலகில் ஒருவர் வாழும்போதே அவரை மறந்துவிடும் போக்கு நிலவுகின்றது. அவ்வாறான நிகழ்வுகளை இயல்பாக நடக்கின்றவை என நினைத்து ஒதுக்கிவிட முடியாது. சிலருடைய வரலாறுகள் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. திட்டமிட்ட பரப்புரை காரணமாக ஒருவருடைய அடையாளம் சிதைக்கப்படுகின்றது. எதிர்மறையான கருத்துக்கள் அளவுக்கு அதிகமாகப் பரப்பப்படுகின்றன. ஒரு பலம்மிக்க அரசாங்கம் நினைத்தால் இதுபோன்ற விடயங்களை இலகுவாகச் சாதித்துவிட முடியும். அதிலும், அமெரிக்கா போன்ற அசுர பலம் கொண்ட ஒரு நாடு நினைத்துவிட்டால் ஒருவரின் கதி அதோ கதிதான்.
ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதன் ஊடாக கேட்பவர் மனதில் இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுமாறு செய்வது ஒரு பழைய உத்தியே ஆனாலும் அது வெற்றியளிப்பதைப் பார்க்க முடிகின்றது. திரும்பத் திரும்பச் சொல்வதன் ஊடாக குறித்த தகவலுக்கு ஒரு அழுத்தம் கிடைக்கின்றது. மறுத்துச் சொல்லப்படாத வரை அல்லது மறுத்துச் சொல்ல வாய்ப்பு இல்லாத நிலையில் இன்னும் சொல்லப் போனால் மறுத்துச் சொல்லும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் பொய்யே ‘உண்மை’யாகிப் போவதைப் பல சந்தர்ப்பங்களில் காண்கிறோம். இந்நிலையில், ஒரு நபரைப் பற்றிப் பொய்யான தகவல் பரப்பப்படும் போது பொதுமக்களில் பலர் அவரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைப் பெற்றுக் கொள்ளும் நிலை உருவாகின்றது. இதனால், குறித்த நபரைப் பற்றிய ஒரு சரியான பிம்பத்தைக் கொண்டிருப்பதில் மயக்கம் தோன்றுகின்றது.
யூலியஸ் அசாஞ்ஜே
அத்தகைய பல எடுத்துக் காட்டுகளுள் ஒன்று யூலியஸ் அசாஞ்ஜே பற்றிய விடயம். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரான அவர் உலகளாவிய அடிப்படையில் அறியப்பட்டது விக்கிலீக்ஸ் என்னும் ஊடக நிறுவனத்தின் ஊடாகவே. 2010-11 காலப் பகுதியில் அமெரிக்கா தொடர்பான பல இரகசியத் தகவல்களை இந்த ஊடகம் வெளியிட்டது. அரசல் புரசலாகத் தெரிந்திருந்த பல தகவல்கள் ஆதாரங்களோடு வெளியிடப்பட்ட நிலையில் அமெரிக்காவின் உண்மை முகம் வெளிச்சமாகியது. இதனால் அமெரிக்காவின் முதலாம் இலக்க எதிரியாக அவர் ஆகிப் போனார்.
“வழக்கம் போன்றே” அவர் மீது சுவீடன் நாட்டில் ஒரு பாலியல் வழக்கு போடப்பட்டது. அப்போது பிரித்தானியாவில் நின்றிருந்த அவரை “வழக்கம் போன்றே” கைது செய்து அமெரிக்காவிற்கு அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் முயற்சி செய்தது. இதிலிருந்து தப்புவதற்காக லண்டனில் உள்ள ஈக்குவடோர் நாட்டுத் தூதரகத்தில் அவர் தஞ்சம் அடைந்தார். அந்த நாட்டுக் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார். 7 வருடங்கள் அவர் அந்தத் தூதரகத்தில் அடைந்து கிடைக்க வேண்டியதாய் இருந்தது. பிரித்தானியாவில் தொடரப் பட்டிருந்த வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாது போன காரணத்தினால் அவரைக் கைது செய்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. அன்று முதல் ஈக்குவடோர் நாட்டுத் தூதரகம் முன்பாக பிரித்தானியக் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அசாஞ்ஜே அவர்களை எப்பாடு பட்டாவது கைது செய்து அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடக் கங்கணம் கட்டிக் கொண்ட பிரித்தானிய அரசாங்கங்கள் சாம, தான, பேத, தண்ட வழிமுறைகள் அனைத்தையும் கையாண்டன. ஒரு கட்டத்தில் தூதரகத்திற்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் உள்ளிட்டவை கூடத் தடைப்படுத்தப்பட்டன.
பழிவாங்கப்படும் அசாஞ்ஜே
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் அதிகாரங்களுக்கு அஞ்சாத ஈக்குவடோர் நாட்டில் “வழக்கம் போன்று” ஒரு ஆட்சி மாற்றம் கொண்டுவரப் பட்டது. அதன் விளைவாக 2019 ஏப்ரல் மாதத்தில் தூதரகத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அசாஞ்ஜே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டு ஐக்கிய இராச்சியத்தின் கொடுஞ்சிறை என வர்ணிக்கப்படும் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 48 வயதான அசாஞ்ஜே பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் அவரது உடல்நலத்தைக் கருதி அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும் அல்லது வேறு சிறைச்சாலைக்காவது மாற்ற வேண்டும் எனக் கோரி 60 மருத்துவர்கள் கையொப்பமிட்டு நீதிமன்றுக்குச் சமர்ப்பித்த கடிதம் நிராகரிக்கப்பட்டது. அமெரிக்க நலன்களுக்கு முன்னால் அனைத்துமே தூசு என்பதைப் போன்று நடந்து கொள்கின்றன பிரித்தானிய அரசாங்கமும் அதன் நீதித் துறையும்.
இத்தனைக்கும் சுவீடனில் அசாஞ்ஜேக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தானாகவே காலாவதியாகிப் போனது. பிரித்தானியாவில் நிலுவையில் உள்ள வழக்கோ நீதிமன்றின் விசாரணைக்குச் சமூகம் தரவில்லை என்ற வழக்குத்தான். தான் கைது செய்யப்பட்டால் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே அசாஞ்ஜே நீதிமன்றில் சமூகம் தரவில்லை. ஆனால், அவரது சட்டத்தரணிகள் சமூகமளித்து விளக்கம் அளித்திருந்தனர். அவை நீதிமன்றின் காதுகளில் கேட்கவில்லை.
மூல வழக்கோ இல்லையென்று ஆகிவிட்டது. நீதிமன்றத்திற்குச் சமூகம் தராத வழக்கிற்கான முகாந்திரமே அதுதான். அதுதான் போனாலும் கைது செய்யப்பட்டு 20 மாதங்கள் ஆகின்றது. இடையில் கொரோனாக் கொள்ளை நோய் வேறு. அவர் ஒரு நோயாளி என்று வேறு சொல்லியாகி விட்டது. இருந்தும் அவருக்குப் பிணை இல்லை.
அமெரிக்க வழக்கு
மறுபுறம், அசாஞ்ஜேக்கு எதிராக அமெரிக்காவின் வேர்ஜீனியா நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்குத் தொடரப்பட்டு விட்டது. 1917 ஆம் ஆண்டின் உளவு பார்த்தல் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் 17 குற்றச் சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 175 ஆண்டுகள் வரை அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 2021 யனவரி 4 ஆம் திகதி தீர்ப்பை எதிர்கொண்டுள்ள இந்த வழக்கின் நீதிபதியான வனேசா பறைற்சர் ஏற்கனவே பிணை கோரிச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்து உள்ளார். இந்தப் பிணை நிராகரிப்பே வழக்கின் தீர்ப்பு என்னவாக அமையப் போகின்றது என்பதற்கான கட்டியமாக உள்ளது.
அசாஞ்ஜே செய்த குற்றம்
அசாஞ்ஜே செய்த குற்றம் என்ன? உலகளாவிய அடிப்படையில் “மனித உரிமைகள்” பற்றிப் பேசும் அரசாங்கங்கள் திரைமறைவில் மனித உரிமைகளுக்கு எதிராகச் செயற்படுகின்றன என்பதை வெளிப்படுத்தியதே அவரின் செயற்பாடு. நவீன தொழில் நுட்பத்தின் துணை கொண்டு பூமிப் பந்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் கண்காணிக்கப் படுகின்றான். இச் செயலானது ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தனி மனிதனின் கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்பவற்றுக்கு எதிரானதே. ஆனாலும், தேச நலன் என்ற போர்வையில் அது உலகளாவிய அடிப்படையில் செயற்பாட்டில் இருக்கின்றது. அதிலும் உலகின் காவல் காரன் எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் அமெரிக்கா இத்தகைய செயற்பாட்டில் அளவுக்கு அதிகமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. தனது நாடு, தனது எதிரி நாடு என்றில்லாமல் தனது நட்பு நாடுகளில் கூட உளவு பார்க்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது என்ற செய்தியை விக்கிலீக்ஸ் அம்பலமாக்கியது.
அவ்வாறானால் அசாஞ்ஜேயின் எதிர்காலம் அமெரிக்கச் சிறையிலேயே முடிய வேண்டியதுதானா என்ற கேள்வி வாசகர்களிடம் எழலாம். தற்போதுள்ள நிலையில் தென்படுகின்ற ஒரே விடயம் அதுவே. ஆனால், இன்னும் ஒரு மாதத்தில் பதவியைத் துறக்கவுள்ள அமெரிக்க அரசுத் தலைவரான டொனால்ட் ட்ரம்பின் கையில் அசாஞ்ஜேயின் விடுதலைக்கான துருப்புச் சீட்டு உள்ளது. அவர் நினைத்தால் அசாஞ்ஜேயை மன்னிக்கலாம்.
ஏற்கனவே அதற்கான குரல்கள் உலகம் எங்கும் இருந்து பல்வேறு தரப்புகளிடம் இருந்து எழும்பத் தொடங்கியுள்ளன.
விடுதலைக்கான குரல்கள்
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாராளவாத தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினரான ஜோர்ஜ் கிறிஸ்ரென்சன் அமெரிக்க அரசுத் தலைவரிடம் யூலியஸ் அசாஞ்ஜேயை விடுவிக்குமாறு பகிரங்கமாகக் கோரிக்கை வைத்துள்ளார். ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய செவ்வியில், “அசாஞ்ஜே அவர்கள் அமெரிக்க ஜனநாயகக் கட்சி இலக்கு வைத்துள்ள ஒருவர். பராக் ஒபாமா காலத்திலேயே அசாஞ்ஜேயைக் கைது செய்து அமெரிக்காவிற்குக் கொண்டு வருவதற்கான செயற்பாடு தொடங்கியது. அப்போது துணை அரசுத் தலைவராக இருந்த ஜோ பைடன் தற்போது அரசுத் தலைவராகப் பதவியேற்க இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அசாஞ்ஜே ஒரு குற்றவாளி, தொழில் நுட்பப் பயங்கரவாதி. தவிர, அப்போதைய வெளியுறவுச் செயலராக இருந்த ஹிலாரி கிளின்ரனின் முகத்திரையைக் கிழித்து உண்மை முகத்தை வெளியுலகிற்குக் காட்டியவர் அசாஞ்ஜே. எனவே, ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அசாஞ்ஜே அவர்கள் மிக மோசமான பழிவாங்கல்களுக்கு ஆனாக நேரிடும் வாய்ப்பு உள்ளது. எனவே, கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்கான இறுதியான வாய்ப்பாகக் கருதி அவரை நீங்கள் மன்னிக்க வேண்டும்” என ட்ரம்பிடம் கோரிக்கை வைத்துள்ளார் கிறிஸ்ரென்சன்.
அசாஞ்ஜே அவர்களை அறிந்தவர்கள் எட்வேர்ட் ஸ்னோடன் என்ற பெயரையும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அமெரிக்க தேசிய உளவு நிறுவனத்தில் பணியாற்றி, அதிலிருந்து வெளியேறி, பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி, அதனால் தேடப்படும் நபராக மாறி, இறுதியில் ரஸ்யாவில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள ஸ்னோடன் டொனால்ட் ட்ரம்புக்கு விடுத்துள்ள செய்தியில் அசாஞ்ஜே அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.
ஸ்னோடன் அவர்களும் ஒபாமா காலத்தில் வேட்டையாடப்பட்ட ஒருவரே. அமெரிக்காவில் இருந்து வெளியேறிய ஸ்னோடனுக்கு எந்தவொரு நாடும் அடைக்கலம் தரக் கூடாது. அவ்வாறு அடைக்கலம் தரும் நாடுகள் கடுமையாகத் தண்டிக்கப்படும் என்ற செய்தியை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொண்ட பெருமைக்குரியவர்(?) ஜோ பைடன். இந்நிலையில் உருவாகப் போகும் அவரின் ஆட்சியில் அசாஞ்ஜே போன்றவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை அவரையன்றி வேறு யார் நன்கறிவார்?
அசாஞ்ஜே அவர்களை விடுவிக்கக் கோரிய மற்றொரு பிரபலம் பமேலா அண்டர்சன். பே வாச் என்ற தொலைக் காட்சித் தொடர் மூலம் பிரபலமான கவர்ச்சி நடிகையான அவர் அண்மைக் காலமாக ஒரு சமூகச் செயற்பாட்டாளராக மாறிச் செயற்பட்டு வருபவர். அசாஞ்ஜே லண்டனில் ஈக்குவடோர் தூதரகத்தில் அடைபட்ட நாள் முதல் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்ட நாள் வரை அவரை அடிக்கடி சந்திக்கும் ஒரு நபராக விளங்குபவர் பமேலா. சொல்லப் போனால், அசாஞ்ஜேயின் சட்டத்தரணிகளைத் தவிர்த்து பெல்மார்ஷ் சிறைக்குச் சென்ற முதலாவது பொதுமகனாகவும் அவரே விளங்குகின்றார். தனது கவர்ச்சிப் படத்துடன் அவர் ட்ர்ம்புக்கு வைத்த கோரிக்கையைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அவர்களை விடவும் அசாஞ்ஜே மீதும், கருத்துச் சுதந்திரத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட பலரும் அசாஞ்ஜே அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ட்ரம்ப் அவர்களிடம் முன்வைத்து வருகின்றனர். அசாஞ்ஜே மீதோ, கருத்துச் சுதந்திரத்தின் மீதோ ட்ரம்ப் அவர்களுக்கு அக்கறை இருக்கும் என நம்புவது மடமை. ஆனால், தன்னைத் தோற்கடித்த ஒரு எதிரியைப் பழிவாங்குவதற்கு இதனை ஒரு கருவியாக ட்ரம்ப் கருதினால் அசாஞ்ஜே அவர்கள் இன்னும் ஒரு மாத கால இடைவெளியுள் பொது மன்னிப்புப் பெற வாய்ப்பு உள்ளது. காரணம் எதுவாயினும், அசாஞ்ஜே அவர்கள் பொது மன்னிப்புப் பெற்றால் மகிழ்ச்சியே.