ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கவேகூடாது: விக்கி தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
கால அவகாசம் வழங்கவேகூடாது!
இன்று ஒன்றுகூடி முடிவெடுத்தது என்கிறார் சிவாஜிலிங்கம்
“நேரடியாகவோ மறைமுகமாகவோ ஜெனிவாவில் இலங்கை அரசுக்குக் கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது என்று சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது.”- இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நான்கு கட்சிகள் அடங்கிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எம்.கே. சிவாஜிலிங்கம்,
“இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பது தொடர்பாகவும் மற்றும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது ஜெனிவா விடயம் தொடர்பாகவே முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக ஜெனிவாக் கூட்டத் தொடர் தொடர்பில் மூன்று பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து ஒரு யோசனையை முன்வைத்தால் அதே யோசனையை ஏனைய சிவில் அமைப்புக்கள், மதப் பெரியார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் புலம்பெயர் அமைப்புகளும் ஏற்றுக்கொண்டால் அது ஒரு சிறந்த நிலைப்பாடாக இருக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளோம்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்குத் தெரியப்படுத்தவுள்ளோம். அவர்களும் இணைந்து ஒரு முடிவு எடுக்கக்கூடிய வகையிலேயே இந்த யோசனைத் திட்டம் அமைந்துள்ளது.
அந்தவகையில், குறித்த கட்சிகளினால் மாற்று யோசனைகள் முன்வைக்கப்படுமாயின் அதற்கு ஏற்றவாறு முடிவுகள் மாற்றப்படும். குறிப்பாக இலங்கை அரசுக்குக் கால நீடிப்பு வழங்கப்பட கூடாது என்ற அடிப்படையில் குறித்த யோசனைத் திட்டம் அமைய வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருக்கின்றது” – என்றார்.