தமிழ் பேசும் மக்களின் ஆதரவின்றி ராஜபக்சவினர் வெற்றி நடை! – மார்தட்டுகின்றார் அமைச்சர் சி.பி.

 

“சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவின்றி ராஜபக்சவினர் அனைத்து விடயங்களிலும் வெற்றிநடை போடுகின்றனர்.”

– இவ்வாறு வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்கா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எம்.சி.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடாததால் நாட்டுக்கு நட்டம் எனவும், கடன்களைப் பெற முடியாது எனவும் விமர்சிக்கப்படுகின்றது.

நாம் கடன் வாங்கியது போதும். தேசிய பொருளாதாரத்தை மையப்படுத்தியே இம்முறை வரவு – செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

துறைமுகத்தை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்க நாம் தயாரில்லை. எமது நாட்டுத் தேவைக்காகவே துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது.

ஆனால், கடந்த அரசுதான் 99 வருட கால குத்தகைக்கு துறைமுகமொன்றை வழங்கியது. கடந்த ஆட்சியின்போதே பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இதனால்தான் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.

ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெறமாட்டார் எனவும், தமிழ், முஸ்லிம் மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் கூறப்பட்டது. இந்தநிலைமையும் மாற்றியமைக்கப்பட்டது.

ராஜபக்சக்களுக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என அன்று குறிப்பிட்டனர். ஆனால், ராஜபக்சக்கள் அதனைச் செய்து முடித்தனர்.

நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டினர். எனினும், அபிவிருத்தியையும் செய்து காட்டினர்.

ஒட்டுமொத்தத்தில் சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவின்றி ராஜபக்சவினர் அனைத்து விடயங்களிலும் வெற்றிநடை போடுகின்றனர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.