பாகிஸ்தான் அணியுடனான டி20 போட்டியில்,வென்ற நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது.
பாகிஸ்தான் அணியுடனான 2வது டி20 போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. செடான் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன் குவித்தது. அதிரடியாக விளையாடிய முகமது ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 99 ரன் (57 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். ரிஸ்வான் 22, குஷ்தில் 14, இமத் வாசிம் 10* ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் சவுத்தீ 4, நீஷம், சோதி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 19.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து வென்றது. கப்தில் 11 பந்தில் 21 ரன் விளாசி பாஹீம் அஷ்ரப் பந்துவீச்சில் ஹரிஸ் ராவுப் வசம் பிடிபட்டார். டிம் செய்பெர்ட் 84 ரன் (63 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் வில்லியம்சன் 57 ரன்னுடன் (42 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 ஓவரில் 21 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்திய சவுத்தீ ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் நாளை நடக்கிறது