உருவாகிறது திருகோணமலை கொத்தணி; கொரோனாத் தொற்றாளர் திடீர் அதிகரிப்பு.
உருவாகிறது திருகோணமலை கொத்தணி; கொரோனாத் தொற்றாளர் திடீர் அதிகரிப்பு.
திருகோணமலை நகர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களது எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திருகோணமலை கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனத் தொற்றின் மூன்றாவது அலை பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டு திருகோணமலையில் கணிசமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும் அதன் பின்னர் நீண்ட நாட்களாக புதிய தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருகோணமலை கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன என்று கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று மரக்கறிச் சந்தை கொத்தணி உருவாகி அம்பாறை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் கணப்பட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திலும் மருதனார்மடம் பொதுச்சந்தைக் கொத்தணி உருவாகி இதுவரை 90 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலும் ஒரே நாளில் 21 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை திருகோணமலை கொத்தணியின் தோற்றுவாயாக மாறும் அபாய நிலையின் அறிகுறியாகவே நோக்கப்படுகின்றது.
ஆகவே, பொதுமக்கள் அனைவரும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமே இந்த அபாய நிலையைக் கடந்து செல்ல முடியும் எனச் சுகாதாரத் துறையினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது