இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான நடைமுறைகளின் திருத்தம்
2020 மார்ச் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான நடைமுறைகள், வெளிநாட்டு அமைச்சு, குடிவரவு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றின் இணைந்த தீர்மானத்தின் அடிப்படையில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் உடன்பாட்டின் கீழ் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி பின்வரும் நடைமுறைகள் 2020 டிசம்பர் 26 முதல் நடைமுறைக்கு வரும்:
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள், குறுகிய கால வீசாக்களையுடையவர்கள், அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளுக்காக, அரசாங்க தனிமைப்படுத்தல் வசதிகளுக்கான விஷேடமான மீளழைத்துவரும் விமானங்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து இலங்கை அரசாங்கம் (வெளிநாட்டு அமைச்சு மற்றும் கோவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம்) ஏற்பாடு செய்யும்.
i. எவ்வாறாயினும், கோவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அங்கீகாரம் / ஆலோசனையின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட விமானமொன்றில் பயணிகள் நியமிக்கப்பட்ட ஹோட்டலொன்றில் கட்டணம் செலுத்திய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கான இணக்கப்பாட்டின் அடிப்படையில், இலங்கையர்கள் அல்லது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினர் (இரட்டைக் குடியுரிமையுடையவர்கள்) இலங்கைக்கு எந்தவொரு வணிக / மீளழைத்து வராத விமானங்களிலும் வெளியுறவுச் செயலாளர் (அல்லது) சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.