பிரித்தானியாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ்
பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா ஏற்படுத்திய இழப்புகளில் இருந்து தங்கள் மக்கள் இன்னும் மீளாத நிலையில் மற்றொரு வைரசும் மிரட்டுவது அரசுகளுக்கு மிகுந்த பீதியை கொடுத்து இருக்கிறது.
பிரித்தானியாவில் புதிய வைரஸ் வேகமாக பரவுவதால் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாட்டின் மிகக் கடுமையான ஊரடங்கை அறிவித்தார். “வைரஸ் அதன் தாக்குதல் முறையை மாற்றும்போது, நாம் நமது பாதுகாப்பு முறையை மாற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு இது பாதியாக இருந்தது. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 67,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
கொரோனா வைரஸ், சூழ்நிலைக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் அடைந்திருப்பததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பழைய கொரோனா வைரசை காட்டிலும் வேகமாக பரவும் தன்மை உடையதாகவும், வீரியமாக இருப்பதாவும் தெரியவந்து உள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் இத்தாலி, இந்தியா, சவூதி, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.