மங்கள ஐதேகவின் தலைவராகிறார்
செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
இதன் ஒரு அங்கமாக அவர் மாத்தறையில் விசேட மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்து ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்த்தன நியமிக்கப்பட்ட போதும் அவர் ஒரு அனுபவமற்ற தலைவர் என்பதை அனைவரும் நன்கு அறிவர். ஆனால் மங்கள சமரவீர என்பவர் அரசியலில் முதிர்ச்சி பெற்றவர். அவருக்கு உள்ள ஊடக,, வௌிநாட்டு, அமைப்பு ரீதியான நெருங்கிய தொடர்புகள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய முன்வரிசை தலைவர்களான ரவி கருணாநாயக்க, அக்கில விராஜ், ரங்கே பண்டார, தயா கமகே போன்றவர்களுக்கு இல்லை. அத்துடன் சிறுபான்மை மக்களிடம் மங்கள சமரவீரவிற்கு வரவேற்பு உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் கடந்த பொதுத் தேர்தலில் வேட்பு மனு பெற்ற மங்கள சமரவீர போட்டியில் இருந்து விலகினார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமை பெறவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாத்து கட்சியை முன்னோக்கிய பாதையில் இட்டுச் செல்லும் திறமை மங்கள சமரவீரவிற்கு உள்ளது.
அதனால் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவராக ரணில் விக்ரமசிங்கவும் கட்சியின் தலைவராக மங்கள சமரவீரவும் பிரதித் தலைவராக ரவி கருணாநாயக்கவும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதென அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதன்பின்னர் தேசியப் பட்டியல் ஊடாக மங்கள சமரவீர பாராளுமன்றம் செல்வார் என்ற கருத்தும் நிலவுகிறது.