இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி பாவனைக்கு வரலாம் : அமைச்சர் ஹர்சவர்தன்
இந்தியாவில் ஜனவரி மாதம் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசி பாவனைக்கு வரலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிகள் முன்களப்பணியாளர்கள், முதியோர்கள் உட்பட 30 கோடி பேருக்கு முதலில் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசியை செலுத்த 260 மாவட்டங்களில் 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள தடுப்பூசி மருந்துகளை, மருந்து கட்டுப்பாட்டு சபை பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தயங்கும் நபர்களுக்கு மருந்தின் பாதுகாப்புத் தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே, 31 ஆயிரம் பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், 95.50 சதவீதம் பேர் குணமடைந்த நிலையில், 3.05 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு இலட்சத்து, 45 ஆயிரத்து, 477 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 95 இலட்சத்து, 80 ஆயிரத்து, 402 பேர் குணமடைந்துள்ளனர்;
தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 11,983 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், 7 இலட்சத்து 85,315 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
9,593 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் அங்கு மொத்தமாக 8 இலட்சத்து 6,891 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.