பருத்தித்துறை பிரதேச சபையில் இன்று குழப்பம்; செயலருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க்கொடி சபை அமர்வு புறக்கணிப்பு.
சபை அமர்வைப் புறக்கணித்து வெளிநடப்பு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரின் வாகனத்துக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட ரயரை வாகனத்தில் பொருத்துவதற்குச் செயலாளர் மறுத்து வந்த நிலையில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புக்கு அமைய அது பொருத்தப்பட்டதால் இன்று கடும் அமளி துமளி ஏற்பட்ட நிலையில் சபை உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இன்று சபை அமர்வு தொடங்கும்போதே ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை என்று ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும், அமர்வு தொடங்கியவுடனேயே ரயர் விவகாரம் சூடுபிடித்தது.
தவிசாளரின் வாகனத்துக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட ரயர் விலை கூடியது என்பதால் பொருத்த முடியாது என்று செயலாளர் இடையூறு வழங்கி வந்தார். இதற்கு எதிராக கடந்த அமர்வில் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், குறித்த விடயம் தவிசாளரினால் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரின் அறுவுறுத்தலுக்கு அமைய தவிசாளரின் வாகனத்துக்குப் ரயர் பொருத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதனை இன்றைய சபை அமர்வில் சுட்டிக்காட்டிய சபை உறுப்பினர்கள், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தங்களின் கருத்துக்குச் செவிசாய்க்காத செயலளார் ஆணையாளரின் கருத்துக்குச் செவிசாய்க்கின்றாரா என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பினர்.
வாக்குவாதம் சூடுபிடித்த நிலையில் அமர்வுகளைப் பதிவு செய்யும் அரச ஊழியர் அங்கிருந்து வெளியேறியதால் குழப்ப நிலை வலுவடைந்தது.
அதன்பின்னர் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பும் செய்தனர். சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையூறு விளைவித்துவரும் செயலாளர் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று வெளிநடப்புச் செய்த ஆளுங்கட்சி மற்றும் எதிரணி உறுப்பினர்கள் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தனர்.