இறந்துவிட்ட ஐ.நா. தீர்மானத்தை உயிர்ப்பிக்கவே முடியாது! வெளிவிவகார அமைச்சர்.
இறந்துவிட்ட ஐ.நா. தீர்மானத்தை உயிர்ப்பிக்கவே முடியாது! – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் திட்டவட்டம்
“கடந்த நல்லாட்சி அரசின் இணை அனுசரணையுடன் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானங்கள் இரண்டும் செத்துப்போய்விட்டன. அதனைப் புதிய பிரேரணை மூலம் புதுப்பிக்க முடியாது.”
– இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஜெனிவா விவகாரம் தொடர்பில் கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு, இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து இவ்வருடம் விலகிவிட்டது. அந்தத் தீர்மானங்களின் காலவரையறையும் நிறைவடைந்துவிட்டது. அந்தத் தீர்மானங்கள் இரண்டும் மரணித்துப்போனமைக்குச் சமமாகும்.
இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. உறுப்புரிமை நாடுகளுடன் பேச்சு நடத்தி எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை கொண்டு வருவதன் மூலம் செத்துப்போன அந்தத் தீர்மானங்களைப் புதுப்பிக்க முடியாது. அதேவேளை, புதிய பிரேரணையை நிறைவேற்றினாலும் அதற்கு இலங்கை இணை அனுசரணை வழங்காது. அந்தப் பிரேரணையும் வலுவிழந்துதான் போகும்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஜெனிவா விவகாரத்தைக் கையாளும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை விடுத்துள்ள அறிவிப்பு நகைப்புக்கிடமானது. இந்தக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஜெனிவாவில் இலங்கை அரசை மிரட்ட முடியாது.
இலங்கை மீது புதிய பிரேரணை வந்தாலும் அதை எமது நட்பு நாடுகள் எதிர்த்தே தீரும். நாமும் அந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்காமல் அதையும் வலுவிழக்கச் செய்வோம்.
தமிழர் பிரச்சினைகளுக்கு உள்நாட்டில்தான் தீர்வு கிடைக்கும். ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகம் தமிழருக்கு ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தராது. இதை இன்னமும் தமிழ்த் தேசியக் கட்சிகள் நம்பாமல் இருப்பது சிறுபிள்ளைத்தனமாது” – என்றார்.