அரசியல் அதிகாரத்தை அளவுக்கதிகமாக தக்கவைக்க முயற்சிப்பது அறிவீனமாகும் : மைத்ரி
அரசியல் அதிகாரத்தை அளவுக்கதிகமாக
தக்கவைக்க முயற்சிப்பது அறிவீனமாகும்.
சர்வதேச மாநாட்டில் கோட்டா அரசை
மறைமுகமாகத் தாக்கினார் மைத்திரி
“அரசியல் அதிகாரத்தை அளவுக்கு அதிகமாகத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பது அறிவீனமாகும்.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
‘ஆசியாவில் எமக்கு ஜனநாயகத்தின் முக்கியத்துவம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இணையவழியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாநாட்டில் கலந்துகொண்டார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-
“நான் 2015ஆம் ஆண்டு தான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டபோது அரசமைப்பு சீர்திருத்தம் ஒன்றின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க நடவடிக்கை எடுத்தேன்.
ஜனநாயக அம்சங்களான சமாதானம், சமத்துவம், ஊடகச் சுதந்திரம், நீதி போன்ற விடயங்களுக்கு நான் பதவியில் இருந்தபோது முக்கியத்துவம் வழங்கினேன்.
அத்தோடு, நீதிமன்றங்கள், பொலிஸ், தேர்தல் போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களின்போது, அரசியல் செல்வாக்கு இருக்கவில்லை” – என்றார்.