எஹலியகொடவில் கொரோனா விழிப்புனர்வு பிரசாரம்
கொரோனா தொற்றில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு எல்லா மக்களுக்கும் இருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் மனித அபிவிருத்தி தாபனம் அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் விழிப்புணர்வு வேலைத் திட்டம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டான வேலைத் திட்டமாக திகழுகின்றது என்று நீர்பாசனத்துறை அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மனித அபிவிருத்தி தாபனத்தின் இரத்தினபுரி மாவட்ட கொவிட் விழிப்புணர்வு பிரச்சார வேலைத் திட்டம் எஹலியகொட பிரதேச செயலகத்தின் முன்பாக நடைபெற்றது. மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி. பி.பி.சிவப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இன்று 22.12.2020 நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட நீர்பாசனத்துறை அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
தற்போது மனித அபிவிருத்தி தாபனத்தினுடைய கொவிட் விழிப்புணர்வு சம்பந்தமான இவ்வேலைத்திட்டத்திட்டமானது ஒரு சிறந்த வேலைத் திட்டமாகும். இதன் மூலம் பல்லாயிரக்காணக்கான மக்கள் பயன்பெறவுள்ளனர். மக்களுக்கு அவசியமானது என்னவென்பதை இனங்கண்டு செயற்படுவது காலத்தின் தேவையாகும். இதனை உணர்ந்து மனித அபிவிருத்தி தாபனம் இவ்வாறான அறிவூட்டல்கள், விழிப்புணர்வூட்டல்கள் செய்வதையிட்டு மகிழ்ச்சியடைவதோடு அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை செய்வதற்கு அரசாங்க நிறுவனங்களின் உதவிகளை வழங்குமாறு தான் நிறுவனங்களை கேட்டு கொள்ளவுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எஹலியகொட நகரத்திலும், அதனை அண்மித்த பிரதேசங்களிலும் கொரோனா தொற்று ஒழிப்புக்கான விழிப்புணர்வு சுவரொட்டிகள், கையேடுகள் மற்றும் தமிழ் சிங்கள மொழிகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்;;ட ஆடியோக்கள் மூலமான பிரச்சார வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவ்விழிப்புணர்வு பிரச்சார வேலைத்திட்டத்தில் ஏறக்குறைய 50 பட்டதாரி பயிலுனர்கள், பொதுமக்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், வாகன ஓட்டுனர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள், உணவகங்களின் உரிமையாளர்கள்ஃ தொழிலாளர்கள் போன்ற பலருக்கும் விழிப்புணர்வூட்டப்பட்டது.
எஹலியகொட பிரதேச செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், எஹலியகொட பொலிஸ் அதிகாரிகள், பிரதேச சபை தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதார அதிகாரி காரியாலய உத்தியோகஸ்தர்கள் போன்றோர் பங்குபற்றினர்.
– இக்பால் அலி