இலங்கைக்குக் கொரோனா தடுப்பூசி மஹிந்தவிடம் ஐ.நா. பிரதிநிதி உறுதி
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போது இலங்கைகக்குக் கொரோனாத் தடுப்பூசிகளும் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவும் பெற்றுத் தரப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் உறுதி வழங்கியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் ராஷியா பெண்டிசே மற்றும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி டிம் சுடன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பல நாடுகள் கொரோனாத் தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கைக்கு இந்தத் தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் உறுதியளிக்க முடியும் எனப் பிரதமருடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டனர்.
“இந்தச் சவால் மிகுந்த காலப்பகுதியில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதற்கு மிகுந்த கடப்பாட்டுடன் இருக்கின்றோம்” என்று இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் இதன்போது குறிப்பிட்டார்.
பெருந்தொகையான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும்போது அவற்றை கிடைத்தவுடன் பயன்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கு இலங்கையின் அணுகுமுறை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் அரச பிரதிநிதிகள் இடையே இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.
இந்தச் சந்திப்பில் பிரதமருடன் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.எம்.முனசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.