சென்னை திரும்புகிறாரா ரஜினிகாந்த்? : ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனோ

சென்னை : அண்ணாத்த படப்பிடிப்பில் சிலருக்கு ஏற்பட்ட கொரோனா பிரச்னையால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. ரஜினி சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. அதேசமயம் அவர் அங்கிருந்து தனிமைப்படுத்தி கொள்வார் என தெரிகிறது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பத்து நாட்களாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அப்படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் தனி விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்திலேயே படத்தின் நாயகிகளில் ஒருவரான நயன்தாராவும் பயணம் செய்தார்.
தனி பாதுகாப்பு வளையத்தில் ரஜினிகாந்த், கடுமையான கொரானோ பாதுகாப்பு முறைகள் என பின்பற்றினாலும் படக்குழுவினர் 9 பேர் வரை கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ரஜினிகாந்திற்கும் கொரானோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நெகட்டிவ் என வந்தாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டார் எனவும் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்புவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன. மேலும், அவருக்கு பரிசோதனையை இன்று தான் செய்தார்கள், இன்னும் முடிவுகள் வரவில்லை என்றும் வேறு ஒரு தகவல் தெரிவிக்கிறது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இது குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
தமிழ்நாட்டில் கொரானோ தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் மீண்டும் வேறு ஒரு வைரஸுடன் பரவி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் ரஜினிகாந்த் தொடர்ந்து படப்பிடிப்பில் இருப்பாரா அல்லது ரத்து செய்துவிட்டு சென்னை திரும்புவாரா என்பது விரைவில் தெரிய வரும்.