சனி பகவான் யார்? நமக்கு என்னவெல்லாம் செய்வார்? இவர் பெயரை கேட்டாலே அண்ட சராசரமே ஆடிப்போகும்.
சனி பகவான் யார்? நமக்கு என்னவெல்லாம் செய்வார்?
இவர் பெயரை கேட்டாலே அண்ட சராசரமே ஆடிப்போகும். சாதாரண மனிதர் முதல், சகல சம்பத்துகளும் பெற்ற தேவர்கள் வரை நடுங்குவார்கள்.
நீதிமான். நியாயவாதி. அதனால்தான் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசியில் உச்சமாகிறார்.
கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுள் காரகன் என்ற அதி முக்கியமான பதவியில் இருப்பவர். சூரியபகவானின் இரண்டாவது புதல்வர்.
அப்போ முதல் புத்திரர்..
அது யமன். பின்னவர் ஆயுளை வளர்த்தால், முன்னவர் ஆயுளை பறிக்கும் தொழிலை செய்பவர். சகோதரி யமுனை. காக்கையை வாகனமாக கொண்டவர். ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சனியும் ஒருவர்.
புரட்டாசி மாதம், சனிக்கிழமை, ரோகினி நச்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில், தகப்பனார் ஸூரியபகவானுக்கும், தாயார் சாயாதேவிக்கும் பூர்வ புண்ணிய பொங்கு சோபன புத்திரன் சனீஸ்வரன் என்ற சனிபகவான் ஜனனமானார்.
அவர் பிறந்தநாளைதான் புரட்டாசி மாதம் வரும் ஒவ்வொரு சனி கிழமையும் விரதம் இருந்து அனுஷ்டிக்கிறோம்.
எதற்கு?
நீடித்த ஆயுளை பெற, சனிபகவானின் அருளை பெற. இது கோவிந்தனுக்கும் உரிய நாள் என்பது உண்மைதான். எள்தான் இவரது தானியம். அந்த எள் விஷ்ணு பகவானின் வியர்வையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இங்கே குறிப்பிட்டாக வேண்டிய ஒரு விஷயம் இது. மற்ற கிரகங்கள் என்னதான் யோக நிலையில் இருந்தாலும் சனிபகவானின் சம்மதம் இல்லாவிட்டால் யூகத்தை பெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லை.
அதே சமயம் சனி கொடுக்க துணிந்து விட்டால், சும்மா அதிரும்முள்ள என்று சொல்கிற மாதிரிதான் இருக்கும். எதுக்குடா வம்பு என்று மற்ற கிரகங்கள் விலகி கொள்ளும்.
பார்வதியால் சாபம் பெற்ற சனிபகவான்
சனி பகவானின் மனைவியும், சித்திரதன் என்ற கந்தர்வன் மகளுமான பரம்தேஜஸ்விக்கு குழந்தையில்லையே என்கிற கவலை தொடர்ந்து இருந்து கொண்டிருந்தது. சனி பகவான், கிருஷ்ணரை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த பரம்தேஜஸ்வி, தியானத்தில் இருந்த சனி பகவானிடம், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டுமென்று கேட்டாள். தியானத்தில் ஆழ்ந்திருந்ததால் அவளின் கோரிக்கையை சனீஸ்வரன் கவனிக்கவில்லை. அவள் மேலும் சிலமுறை தனக்குக் குழந்தைப்பேறு அளித்திட வேண்டுமென்று கேட்டும், பதில் ஏதும் கிடைக்காததால் வருத்தமடைந்தாள்.
சாபம்
மனைவியான தன்னைக் கவனிக்காமல், தியானத்தில் இருப்பது போல் தனது வேண்டுகோளைப் புறக்கணிப்பதாக அவளுக்குத் தோன்றியது. ஆகையால் பொறுமை இழந்த அவள் கோபத்துடன், ‘மனைவியான என்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றித் தராமல், என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் புறக்கணித்த நீங்கள், இனி யாரையும், எப்போதும் நேர்பார்வையில் பார்க்கக் கூடாது. அப்படி நீங்கள் யாரைப் பார்த்தாலும், அவர்கள் அழிந்து போகட்டும்’ என்று சாபமிட்டாள்.
இதனால் சனிபகவான் யாரையும் நேரடியாகப் பார்க்க முடியாமல், பூமியைப் பார்த்து தலை குனிந்தபடியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் பார்வதிதேவி, குழந்தைப்பேறு வேண்டி கிருஷ்ணரை நோக்கி விரதம் இருந்தாள். இதைத் தொடர்ந்து கிருஷ்ணனே ஒரு குழந்தையாக அவள் படுக்கையில் தோன்றினார். அந்தக் குழந்தையைக் கண்டு மகிழ்ந்த அவள், சிவபெருமானிடம் குழந்தையைக் காண்பித்து குழந்தைக்குப் பெயர் சூட்டி மகிழ்வதற்கான விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்தாள்.
குறிப்பிட்ட நாளில் அந்தக் குழந்தைக்கு ‘கணேசர்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இதற்காக ஏற்பாடு செய்திருந்த விழாவில் தேவர்கள், முனிவர்கள் பலரும் கலந்து கொண்டு குழந்தையைப் பார்த்து வாழ்த்தி வணங்கினர். சனீஸ்வரனும் இந்த விழாவில் கலந்து கொண்டார். ஆனால் அவர் குழந்தையை ஏறெடுத்தும் பார்க்காமல், ஓரமாக தலையை குனிந்தபடி நின்று கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த பார்வதி சனிபகவானிடம், ‘இங்கு வந்த அனைவரும் குழந்தையைப் பார்த்து வாழ்த்தி வணங்கிச் செல்லும் பொழுது, நீ மட்டும் ஏன் ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டாள்.
உடனே சனிபகவான், ‘அன்னையே! என் மீது ஒரு சாபம் இருக்கிறது. என் மனைவியின் வேண்டுகோள் ஒன்றை நான் புறக்கணித்ததாகக் கூறி, என் மனைவி நான் யாரை நேரடியாகப் பார்த்தாலும் அவர்கள் அழிந்திட வேண்டும் என்று சாபமிட்டிருக்கிறாள். இந்தச் சாபத்தால்தான், நான் ஒதுங்கி நிற்கின்றேன். நான் தங்கள் குழந்தையை நேரடியாகப் பார்க்க இயலாது’ என்றார்.
இதைக் கேட்ட பார்வதியும், அங்கு கூடியிருந்த பெண்களும் சிரித்தனர். சனிபகவான் கூறியதை சாதாரணமாக எண்ணிய பார்வதி அவரிடம், ‘நீ பயப்படாமல் வந்து என் குழந்தையை நேரடியாகப் பார்த்து வாழ்த்திச் செல்’ என்றாள். இதன் பிறகு சனிபகவான் குழந்தையை நேரிடையாகப் பார்க்காமல் தன் ஓரக்கண்ணால் குழந்தையைப் பார்த்தார். அவர் பார்வை பட்டவுடன் பார்வதியின் மடியிலிருந்த குழந்தை, தலையின்றி கீழே விழுந்தது. குழந்தையின் தலையில்லாத உருவத்தைக் கண்டு பார்வதி மயக்கமடைந்தாள். அங்கிருந்தவர்கள் அனைவரும் இதைக்கண்டு பயந்து போனார்கள்.
கிருஷ்ணர் குறிப்பிட்ட நேரத்துக்குள் அக்குழந்தைக்குப் பொருந்தும் சரியான தலையை எடுத்து வந்து பொருத்தினால் குழந்தை உயிர் பிழைத்துவிடும் என்று சொன்னார். பின்னர் அவரே குழந்தைக்கான தலையைத் தான் கொண்டு வருவதாகக் கூறி அங்கிருந்து சென்றார். அப்போது ஓர் ஆற்றங்கரையில் வெள்ளையானை (ஐராவதம்) ஒன்று வடக்கு நோக்கித் தலைவைத்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதன் தலையைத் தனது சுதர்சன சக்கரத்தால் அகற்றிக் கொண்டு வந்தார். கயிலாயத்தில் தலையின்றிக் கிடந்த பார்வதியின் குழந்தைக்கு அந்த வெள்ளையானையின் தலையைப் பொருத்தி உயிர் பெறச்செய்தார்.
யானைத் தலையுடன் குழந்தை உயிர்பெற்று எழுந்ததைக் கண்ட தேவர்கள், முனிவர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த அனைவரும் மகிழ்ச்சி கொண்டனர். பார்வதியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். தன் குழந்தை யானைத்தலையுடன் உயிர்பெற்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும், தனது குழந்தை உயிர் பெற்றதே என்று மகிழ்ச்சியடைந்தாள். இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததற்கு சனிபகவானே காரணம் என்று அவள் கோபம் கொண்டாள்.
கோபமடைந்த அவள் சனிக்கு வாதநோய் ஏற்பட்டு முடமாகிப் போகும்படி சாபமிட்டாள். இந்தச் சாபத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சனிபகவான் தன் மீதான சாபத்தால் குழந்தையைப் பார்க்காமல் ஒதுங்கி நின்ற போதும், சனிபகவானை அழைத்து அருகில் வந்து குழந்தையைப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தி விட்டு, அவருக்குச் சாபமும் அளித்தது நியாயமானதல்ல என்று அனைவரும் பார்வதியிடம் தெரிவித்தனர். இதனால் அவளது கோபம் சற்று குறைந்தது. இருப்பினும், சனிபகவான் வாத நோயினால் முழுவதும் முடமாகாமல் சிறிது ஊனம் மட்டும் ஏற்பட்டுப் போனது.
சனிபகவான் வாதநோயால் வந்த தன் ஊனம் மறைந்து முழுமையாகக் குணமடைந்திட சாபவிமோசனம் வேண்டினார். உடனே பார்வதி, ‘சனிபகவானே பூலோகத்தில் இருக்கும் சிவபெருமான் கோவில்கள் ஒவ்வொன்றாகச் சென்று தொடர்ந்து நீ வழிபட்டு வரும்போது ஒரு கோவிலில் சிவபெருமான் உனக்குக் காட்சியளித்து உன் வாத நோயைப் போக்கி, ஊனம் நீக்கி அருள்வார்’ என்றார்.
விமோசனம்
பார்வதி அளித்த சாப விமோசனத்திற்கான வழிமுறையைத் தொடர்ந்து, சனிபகவான் பூலோகம் வந்து சிவபெருமான் கோவில்கள் ஒவ்வொன்றாகச் சென்று அங்கிருக்கும் சிவலிங்கத்துக்கு வழிபாடுகள் செய்து வணங்கிக் கொண்டே வந்தார். இப்படி வணங்கிக் கொண்டே வந்த அவர் ஒரு நாள் வேதபுரி திருமறைநாதர் கோவிலை வந்தடைந்தார்.
வேதபுரி திருமறைநாதர் மற்றும் ஆரணவல்லி ஆகியோரை வணங்கி வழிபாடு செய்த சனி பகவான் தனக்குச் சாப விமோசனம் தந்து தனது வாத நோயைப் போக்கி, ஊனத்தை நீக்கிட வேண்டினார். அப்போது அவர் முன் காட்சியளித்த சிவபெருமான், ‘இதுவரை உன் பார்வையினால் ஏற்பட்ட அழிவுகள் அனைத்தும் மாறி, ஒவ்வொருவரின் நற்செயல்களுக்கேற்ப நற்பலன்களும், கொடுஞ்செயல் செய்தவர்களுக்கு அவர்கள் தவறுகளுக்கேற்றபடி கேடான நிகழ்வுகளும் சனிபகவான் பார்வையினால் அமையும்’ என்று சனி பகவானின் சாபத்தினை மாற்றி அருளினார். அத்துடன் சனிபகவானுடைய வாதநோயைப் போக்கி, ஊனத்தையும் நீக்கி அருளினார். சனிபகவானின் வாதநோயைத் தீர்த்த தலம் என்பதால் இந்தத்தலம் ‘வாதவூர்’ என்று அழைக்கப்பெற்று, தற்போது திருவாதவூர் என்று அழைக்கப்படுகிறது.
மனைவியிடம் தான் பெற்ற சாபத்தால் பிறருக்குத் தீங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்று உண்மையைச் சொல்லி, நேர்மையாக நடந்து கொண்ட அவருக்குப் பார்வதியால் மீண்டும் சாபம் கிடைத்தாலும், சிவபெருமான் மூலம் தன்னுடைய பார்வையினால் அழிவு என்கிற சாபத்திற்கு விமோசனத்துடன் ஒவ்வொருவருக்கும் அவர்கள் செயல்பாட்டிற்கேற்றபடி சமநீதியளிக்கும் நிலையினை சனிபகவான் பெற்றார்.
சனிபகவானின் இந்த சாபமும், விமோசனமும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வதில் தொடக்கத்தில் சிறிது துன்பம் ஏற்பட்டாலும், பின்னர் நமக்கு நல்லதொரு நிலையைத் தரும் என்பதை விளக்குவதாக அமைந்திருக்கின்றன.