யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 9 பேருக்கு இன்று கொரோனா! – மருதனார்மடம் கொத்தணி 103ஆக உயர்வு
யாழ். மருதனார்மடம் கொத்தணியில் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர் ஐவர் உள்ளிட்ட 9 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 120 பேருக்குபி பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. குறித்த தொற்றாளர் ஏற்கனவே மருதனார்மடம் கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவராவார்.
இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 481 பேருக்குப் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 9 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மல்லாகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர் ஐவருக்கும், காங்கேசன்துறையைச் சேர்ந்த இருவருக்கும், சிறுவிழானைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. குறித்த 8 பேரும் மருதனார்மடம் கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாவர்.
இதன்படி, மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 103 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் கிளிநொச்சி, பாரதிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது. குறித்த தொற்றாளர் பாரதிபுரத்தில் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
பாரதிபுரத்தில் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர் கொழும்பு சென்று திரும்பும் சாரதியாவார். அவர் கொழும்பு சென்றிருந்த நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுக்கான அறிகுறி காணப்பட்ட போதிலும் நூறு வீதம் உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் அறிந்த பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் பாரதிபுரத்தில் உள்ள அவருடைய உறவினர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நேற்று இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், நேற்று கிளிநொச்சி திரும்பிய குறித்த சாரதிக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது” – என்றார்.