பாணிக்கு பின்னால் செல்லாது தடுப்பூசியை இறக்குமதி செய்யுங்கள் : சிறிபால டி சில்வா
கொரோனா ஒழிப்பு செயற்பாட்டில் தேவாலய பூசாரி தயாரித்த பாணியில் தங்கி குழம்பி இருக்காமல் விரைவில் நோய் எதிர்ப்பு தடுப்பு ஊசியை கொள்வனவு செய்து நாட்டு மக்களுக்கு வழங்குவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதை தொழில் அமைச்சருமாகிய நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
“நாம் இன்று செய்ய வேண்டியதை ஒருபுறத்தில் வைத்துவிட்டு செய்யக் கூடாத விடயத்துடன் குழம்பிப் போயுள்ளோம். நாம் செய்ய வேண்டியது விரைவில் தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு வழங்குவதாகும்.
பாணி ஒன்று இருப்பது நல்லது. பாணியால் நோய் சுகமாகும் என்றால் சிறப்பு. ஆனால் நான் உலக சுகாதார நிறுவனத்தில் தலைவராக செயற்பட்டவன் என்ற அடிப்படையில் இவ்வாறான பாணி ஒன்று இருந்தால் அதனை விஞ்ஞான ரீதியில் பரிசோதனைக்கு உட்படுத்தி அதனை பருகும் தொற்றாளர்களுக்கு நோய் குணமாகிறதா என உறுதி செய்த பின்னரே அடித்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டும்.
இறுதியில் பாணியை கொடுத்து மக்கள் குணமடையாவிட்டால் என்ன செய்வது? எனவே பரிசோதனை செய்து உறுதி செய்யப்பட்ட பின்னரே அதனை வழங்க வேண்டும்” என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.