எம்.ஜி.ஆர்-களின் எலெக்‌ஷன்… நாடோடி யார்? மன்னன் யார்?

எம்.ஜி.ஆரின் வாரிசாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயன்ற வி.என்.ஜானகி முதல் பாக்யராஜ் வரை யாரையும் ஏற்றுக்கொள்ளாத மக்கள், ஜெயலலிதாவை அவர் வாரிசாக ஏற்றுக்கொண்டார்கள்.  

 

தேர்தல் வந்துவிட்டால் போதும்… அ.தி.மு.க பிரசார மேடை கலைநிகழ்ச்சிகளிலும், பேரணிகளிலும் எம்.ஜி.ஆர் வேடமிட்ட பல மனிதர்கள் இரட்டை விரலைக் காட்டியபடி உலா வருவார்கள். தேர்தல் முடிந்ததும் அவர்கள் காணாமல்போய்விடுவார்கள். 33 வயதுக்குள் இருக்கும் தமிழக வாக்காளர்கள் யாரும் எம்.ஜி.ஆரையும் பார்த்ததில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சி எப்படி இருந்தது என்றும் கண்டதில்லை. ஆனாலும், சமூக வலைதளங்கள் வரை டிரெண்டிங்கில் இருக்கிறார் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சி பற்றிய பேன்டஸி வர்ணனைகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

எம்.ஜி.ஆர் இறந்து 33 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இப்போது எம்.ஜி.ஆர் தமிழக அரசியல் களத்தில் எல்லா மேடைகளிலும் மீண்டும் உயிர்த்தெழுகிறார்.

“எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன் நான்’’ என்கிறார் கமல்ஹாசன். `‘எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வின் குழந்தை. யாரும் அவரைச் சொந்தம் கொண்டாட முடியாது’’ என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். முதல்வர் எடப்பாடியோ இன்னும் ஒருபடி மேலே போய், ‘`எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசுகள் அ.தி.மு.க தொண்டர்களும் தமிழக மக்களும்தான்’’ என்கிறார். இந்த யுத்தத்துக்கு நடுவில், ‘சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்’ என்று எம்.ஜி.ஆர் பாட்டு பாடி எடப்பாடியை விமர்சிக்கிறார் மு.க.ஸ்டாலின். எங்கு பார்த்தாலும் எம்.ஜி.ஆர் பேச்சு!

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் வாரிசாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயன்ற வி.என்.ஜானகி முதல் பாக்யராஜ் வரை யாரையும் ஏற்றுக்கொள்ளாத மக்கள், ஜெயலலிதாவை அவர் வாரிசாக ஏற்றுக்கொண்டார்கள். கட்சியையும் ஆட்சியையும் தலைமை தாங்கி நடத்திய ஜெயலலிதா இன்று உயிருடன் இல்லை. இப்போது மீண்டும் தன்னை எம்.ஜி.ஆரின் தொடர்ச்சியாக நிறுத்திக்கொள்கிற போட்டி தொடங்கியிருக்கிறது.

அ.தி.மு.க.வுக்கு வெளியே எம்.ஜி.ஆரை அடையாளமாக நிறுத்துவது தமிழக அரசியல் களத்துக்குப் புதிதல்ல. ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்ற அடையாளத்துடன் தன்னை முன்னிறுத்த முனைந்தவர் விஜயகாந்த்.

விஜயகாந்த் தொடக்கக்காலத்தில் தி.மு.க-வுடனும் கருணாநிதியுடனும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர். தி.மு.க அனுதாபியாக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் அப்போதைய அ.தி.மு.க-வினரை மறைமுகமாக விமர்சித்து எடுத்த பல படங்களில் விஜயகாந்த் நடித்தார். பின்னாள்களில் அநீதியை எதிர்க்கும் நாயகன் தோற்றத்தை அவர் பெற, அந்தப் படங்கள் அடித்தளமிட்டன. ‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற கருணாநிதியின் பொன்மொழியின் சாரத்தை எடுத்துக்கொண்டு, ‘தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா’ என்பதைத் தன் ரசிகர் மன்ற முழக்கமாக முன்வைத்தார். விஜயகாந்தின் ஈழ ஆதரவும்கூட தி.மு.க பாதிப்பால் உருவானது. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேசித்த விஜயகாந்த், பிறகு சந்தனக்கடத்தல் வீரப்பன் கதையைச் சித்திரித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் நடித்ததுடன், தன் மகனுக்கு பிரபாகரன் என்றும் பெயர் சூட்டினார்.

தன் திருமணத்தையே கருணாநிதி தலைமையில் நடத்திய விஜயகாந்தின் அரசியல் வருகை கருணாநிதியையும் தி.மு.க-வையும் எதிர்த்தே தோற்றம் பெற்றது. 2006-ல் டி.ஆர்.பாலு மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது தேசிய நெடுஞ்சாலைத்துறை கோயம்பேட்டுப் பாலம் கட்டுவதற்காக விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை இடித்ததால் அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த்.

விஜயகாந்த்

ஒருபுறம் ஜெயலலிதா, இன்னொருபுறம் கருணாநிதி. எம்.ஜி.ஆரைக் கையிலெடுத்தார் விஜயகாந்த். ‘ரெண்டு கட்சி ஆட்சியும் மோசம் மக்களே’ என்று ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ ஆனார். தி.மு.க-வினரின் அலங்காரமான மேடைத்தமிழ், எழுதிவைத்து வாசிக்கும் ஜெயலலிதாவின் மேடைப்பேச்சு இரண்டையும் புறக்கணித்துவிட்டு எம்.ஜி.ஆரைப் போல மனதில் பட்டதை எதார்த்தமாகப் பேசத் தொடங்கியதன் மூலம் ‘வெள்ளந்தி மனிதர்’ என்ற தோற்றமும் விஜயகாந்துக்குக் கிடைத்தது. எம்.ஜி.ஆருக்கு இருப்பதைப் போலவே விஜயகாந்துக்கும் ‘வள்ளல்’ பிம்பம் இருக்கிறது. திராவிடக் கட்சியின் பெயரில் ‘அனைத்து இந்திய’ என்று தேசியத்தை எம்.ஜி.ஆர் செருகியதைப்போல விஜயகாந்த் ‘தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்’ என்று தேசியத்தில் திராவிடத்தைச் செருகித் தன் கட்சியின் பெயரை அமைத்துக்கொண்டார்.

2006 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க ஒரே ஒரு இடத்தில் வெற்றிபெற்றாலும் 3 தொகுதிகளில் 20%-க்கும் அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15-20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10-15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7-10% வரையான வாக்குகளையும் பெற்றது. 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து, தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி அதிக தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த்.

‘ஆறுமாதம் ஜெயலலிதா ஆட்சியை விமர்சிக்க மாட்டேன்’ என்ற விஜயகாந்த், சட்டசபையிலேயே ‘ஏய்’ என்று நாக்கைத் துருத்தி விமர்சிக்கும் சூழல் உருவானது. ‘விஜயகாந்த் குடித்துவிட்டு சட்டசபைக்கு வருகிறார்’ என்று ஜெயலலிதா குற்றம் சாட்ட, ‘அந்தம்மாவா ஊத்திக் கொடுத்துச்சு?’ என்று விஜயகாந்த் கேட்டார். எல்லாக் கட்சிகளிலும் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி என்று பல அணிகள் இருக்கும். ஆனால் விஜயகாந்த் கட்சியிலோ ‘தொகுதிப் பிரச்னைக்காக முதல்வரைச் சந்திக்கும் அணி’ ஒன்று உருவாகி, ஒவ்வொருவராக ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க-வுக்குப் போனார்கள். கட்சியும் பலவீனமானது;விஜயகாந்தும் உடல்நலக்குறைவால் பலவீனமானார். இப்போதும் பிரேமலதா 2021 சட்டமன்றத் தேர்தலில் நம்பியிருப்பது விஜயகாந்தின் ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ இமேஜைத்தான்.

இப்போது எம்.ஜி.ஆரைச் சொந்தம் கொண்டாடும் கமல்ஹாசனுக்கும் விஜயகாந்துக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. தனித்துவமான வேற்றுமைகளும் உள்ளன.

சினிமாப்பயணத்தில் எம்.ஜி.ஆர் பாதையா, சிவாஜி பாதையா என்ற கேள்வியில் சிவாஜி பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர் கமல்ஹாசன். நாயகனை மையப்படுத்திய ஒரே பார்முலா என்ற எம்.ஜி.ஆர் பாணியிலிருந்து விலகி, சிவாஜி பாதையில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டவர். சிவாஜி ‘நவராத்திரி’யில் 9 தோற்றங்களில் நடித்திருந்ததால் அவரை மிஞ்ச வேண்டும் என்று 10 தோற்றங்களில் ‘தசாவதாரம்’ எடுத்தார். ‘சிவாஜி கணேசன் மடியில் வளர்ந்தவன்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டவர் கமல்ஹாசன்.

பெரியார், திராவிடம், கருணாநிதி, கம்யூனிச அடையாளங்களைத் தனக்கு அணுக்கமானதாகக் காட்டிக்கொண்டவர் கமல். ‘நம்மவர்’ உட்பட பல படங்களில் பெரியாரின் படம் இடம்பெற்றிருக்கும். கொஞ்சம் குழப்பமானதுதான் என்றாலும், ‘கடவுள் இல்லைன்னு சொல்லலை, இருந்தா நல்லாருக்கும்’ என்ற அவரின் வசனம் நாத்திக வசனமாகவே அறியப்பட்டது. பெரியார் திடலில் கமல் கலந்துகொண்ட ஒரு விழாவில் ‘காதல் இளவரசன் என்பதைவிட நாத்திக இளவரசன் என்ற பெயரே கமலுக்குப் பொருத்தம்’ என்றார் கி.வீரமணி. ‘தசாவதாரம்’ படத்தைக் கி.வீரமணியை அழைத்துப் போட்டுக்காட்டினார் கமல்ஹாசன். அவரும் ‘பகுத்தறிவுப் படம்’ என்று பாராட்டினார்.

கமலின் ‘ஹே ராம்’ படம் ‘காந்தியைக் கொன்றது இந்துத்துவ மதவாதம்தான்’ என்று வெளிப்படையாகவே விமர்சித்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்காரராக கமல் நடித்த ‘அன்பே சிவம்’ படமும் கம்யூனிசத்தையும் கடவுள் மறுப்பையும் முன்வைத்தது.

சிவாஜி கணேசனைத் தன் நடிப்பு ஆசானாகக் கமல் வரித்துக்கொண்டார் என்றால், தன் தமிழ் ஆசானாகக் கருணாநிதியைச் சொன்னார். அவருடன் கலந்துகொண்ட பல விழாக்களில் கருணாநிதியின் எழுத்தும் வசனங்களுமே தன் தமிழார்வத்துக்குக் காரணம் என்றார். ‘அவ்வை சண்முகி’யில் பெண் வேடமிட்டபோது கமல்ஹாசன் அதே வேடத்தில் சந்தித்த முதல் நபர் கருணாநிதி. ‘தசாவதாரம்’ படத்தில் கருணாநிதி தோற்றத்தில் ஒருவரை நடிக்கவே வைத்தார்.

சினிமா தொடங்கி கமல்ஹாசன் பேசிய அரசியல், தனிப்பட்ட விருப்பம் என்று எதிலுமே எம்.ஜி.ஆரின் சுவடுகள் இருந்ததில்லை. மாறாக எம்.ஜி.ஆருக்கு எதிர்முனையில் இருந்த சிவாஜி கணேசன் மற்றும் கருணாநிதியின் சுவடுகளே இருந்தன. இதுநாள்வரை ‘சிவாஜி மடியில் வளர்ந்தவன்’ என்று பெருமையாகச் சொல்லிவந்த கமல், ‘புரட்சித் தலைவர் தி.மு.க-வில் இருந்தபோது தி.மு.க திலகம் அல்ல; தனிக்கட்சி தொடங்கிய பிறகு அ.தி.மு.க திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக்கூடப் பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன்’ என்று ட்வீட் செய்ததுடன், எம்.ஜி.ஆருடன் விழாவில் கலந்துகொண்ட வீடியோவையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில்தான் ‘காலில் விழும் கலாசாரத்தை’ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டித்துப் பேசிய கமல், அந்த வீடியோவில் எம்.ஜி.ஆர் காலில் விழுகிறார்.

மதுரையில் தன் முதல் பிரசாரத்தைத் தொடங்கிய கமல் ‘`நான் ஆட்சிக்கு வந்தால் மதுரையை இரண்டாம் தலைநகர் ஆக்குவேன். மதுரையை இரண்டாம் தலைநகர் ஆக்குவது எம்.ஜி.ஆரின் கனவு” என்றார். (உண்மையில் ‘திருச்சியை இரண்டாம் தலைநகர் ஆக்கலாமா’ என்ற ஆலோசனையில் தான் எம்.ஜி.ஆர் ஈடுபட்டார். பின் அதைக் கைவிட்டார்)

அதைத் தொடர்ந்துதான் அ.தி.மு.க தரப்பிலிருந்து கமல்மீது விமர்சனக் கணைகள் பாய்கின்றன. கமலும் தொடர்ச்சியாக எடப்பாடியையும் அ.தி.மு.க-வினரையும் விமர்சித்தபடியே, எம்.ஜி.ஆரையும் சொந்தம் கொண்டாடிவருகிறார்.

கம்யூனிசம், திராவிடம், காந்தியம்மீது ஆர்வம் இருந்தாலும் அவர் தமிழகத்தில் செயல்படுத்த விரும்புவது ‘ஆம் ஆத்மி’ பாணி அரசியலை. அதனால்தான் இடதும் இல்லாத, வலதும் இல்லாத ‘ஆம் ஆத்மி’ பாணியிலான ‘மய்ய அரசியலை’த் தேர்ந்தெடுக்கிறார். ‘அது எவ்வளவு தூரம் தேர்தலில் கைகொடுக்கும்’ என்ற சந்தேகமும் கமலுக்கு இருப்பதால்தான், தன் இரு ஆசான்களான சிவாஜியையும் கருணாநிதியையும் கைவிட்டுவிட்டுப் புதிய ஆசானாக எம்.ஜி.ஆரை வரித்துக்கொள்கிறார். ‘கொஞ்சம் கம்யூனிசம், கொஞ்சம் கேப்பிட்டலிசம்; அதுதான் அண்ணாயிசம்’ என்றார் எம்.ஜி.ஆர். ‘இடதும் இல்லை, வலதும் இல்லை, மய்யம்தான் என் பாதை’ என்கிறார் கமல்.

எம்.ஜி.ஆரைச் சொந்தம் கொண்டாட, கமல்ஹாசனைவிட ரஜினிக்குக் கூடுதல் உரிமைகளும் தகுதிகளும் உள்ளன. சினிமாவில் எம்.ஜி.ஆர் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் ரஜினி. அநீதிக்கு எதிரான ஏழைப்பங்காளன், தாய்ப்பாசம், தங்கைப்பாசம் – எம்.ஜி.ஆர், ரஜினி இருவர் படங்களுக்குமான பொதுப்பண்புகள். ‘இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை’ என்று எம்.ஜி.ஆர் பாட்டு பாடினால், ‘பொம்பளை பொம்பளையா இருக்கணும்’ என்று வசனம் பேசியவர் ரஜினி. என்ன… குடிக்கும், புகைக்கும் காட்சிகளைத் தன் படங்களில் முற்றாகத் தவிர்த்தவர் எம்.ஜி.ஆர். அதை ஸ்டைலாகத் தன் படங்களில் அறிமுகப்படுத்தியவர் ரஜினி.

ரஜினி - எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்குமான தனிப்பட்ட உறவு குறித்துப் பல தகவல்கள் சொல்லப்பட்டாலும், எம்.ஜி.ஆர் குறித்து எங்கும் ரஜினி எதிர்மறையாகச் சொன்னதில்லை. எம்.ஜி.ஆரின் அபிமானிகளான ஏ.சி.சண்முகம், சைதை துரைசாமி போன்றவர்கள் இப்போது ரஜினிக்குப் பின்னால் இருக்கிறார்கள். அந்த ஏ.சி.சண்முகம் நடத்திய விழாவில்தான், ‘`அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்.ஜி.ஆராக முடியாது. அவர் ஒரு தெய்வப் பிறவி. அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. மதிய உணவுத் திட்டத்தைச் சத்துணவுத் திட்டமாக மாற்றியவர் அவர். இன்று நான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்தான். அவரின் சிபாரிசில்தான் என் திருமணம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்’’ என்று 2018-ல் பேசினார் ரஜினி.

ரஜினி முன்வைக்கும் ‘ஆன்மிக அரசியலு’க்கும் எம்.ஜி.ஆர் பிம்பம் தடையாக இருக்கப் போவதில்லை. திராவிடக்கட்சி என்றாலும் பெரியார், அண்ணா முன்வைத்த கடவுள் மறுப்பு, வடவர் எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, இந்து மதத்தின் மீதான விமர்சனங்கள் ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட அரசியலைத்தான் எம்.ஜி.ஆர் நடத்தினார். மூகாம்பிகை கோயி லுக்குச் சென்றார். திராவிட அடையாளத்துடன் ‘அனைத்து இந்திய’ என்னும் தேசிய அடையாளத்தை இணைத்தார். நீதிக்கட்சிக் காலத்திலிருந்து சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வலியுறுத்திய திராவிட இயக்கக் கொள்கைக்கு மாறாக ‘பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை’க் கொண்டுவந்து சூடுபட்டு, பின் அதைத் திரும்பப்பெற்றார்.

எம்.ஜி.ஆர் என்ற அடையாளம் ரஜினிக்கு சாதகமாகவே இருக்கும். மேலும் ரஜினியின் கன்னட, மராத்தி அடையாளங்களை சீமான் போன்றவர்கள் கேள்விக்குள்ளாக்கும்போது அவருக்கு ரட்சகனாக இருப்பவரும் ‘மலையாளி’ என்று விமர்சிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்தான். கொள்கையைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத முரட்டு ரசிகக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கும் உண்டு, ரஜினிக்கும் உண்டு.

வினோதம்தான். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்பப்போவதாகச் சொன்ன கமல்ஹாசனும் ரஜினியும் எம்.ஜி.ஆர் இடத்தை நிரப்பப்பார்க்கிறார்கள். கருணாநிதி இடத்தை கமல்ஹாசனாலும் ரஜினியாலும் நிரப்ப முடியாது. இருவரும் ஜெயலலிதாவால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே எம்.ஜி.ஆர் அடையாளம் இருவருக்கும் வசதியானது.

தென்னிந்தியாவில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றிகரமாகத் தங்களை நிலைநிறுத்திக்கொண்டவர்கள் எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும்தான். சிவாஜி கணேசன் முதல் சிரஞ்சீவி வரை அரசியலில் தோற்றுப்போனார்கள். என்.டி.ஆரும்கூட தன் கடைசிக்கால அரசியல் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்தித்தார். இறக்கும்வரை வெற்றிகளை மட்டுமே சந்தித்த முதலும் கடைசியுமான முன்னுதாரணம் எம்.ஜி.ஆர்தான். அவரைச் சொந்தம் கொண்டாட விஜயகாந்த், கமல்ஹாசன், ரஜினி என எல்லோரும் துடிப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நாளை விஜய் அரசியலுக்கு வந்தாலும்கூட எம்.ஜி.ஆர் அடையாளத்தையே முன்வைப்பார். சமீபத்தில் விஜய் – சங்கீதாவை எம்.ஜி.ஆர் – ஜானகியாகச் சித்திரித்து அவர் ரசிகர்கள் போஸ்டர் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் - கமல்

நான்காவது தரப்பாக பா.ஜ.க-வும் எம்.ஜி.ஆர் அடையாளத்தை முன்னிறுத்துகிறது. வேல் யாத்திரையில் எம்.ஜி.ஆர் படங்கள் பயன்படுத்தப்பட்டன. யாத்திரை தொடர்பாக பா.ஜ.க வெளியிட்டுள்ள முன்னோட்ட வீடியோவில் ‘பொன்மனச்செம்மலின் அம்சமாக மோடியைக் கண்டோமடா’ என்ற வரி இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் புயல் நிவாரணப்பணிகளைத் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மேற்கொண்ட புகைப்படத்துடன், எம்.ஜி.ஆர் ஏற்கெனவே நிவாரணப் பணிகளை மேற்கொண்ட படத்தையும் இணைத்து ட்விட்டரில் பகிர்ந்தது தமிழக பா.ஜ.க. 2017-ல் இலங்கைக்குச் சென்ற மோடி, ‘`புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த மண்’’ என்று குறிப்பிட்டார். எடப்பாடி அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ‘டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்’ என்று பெயர் சூட்டியவர் மோடி.

அ.தி.மு.க-வில் ஜெயலலிதா போன்ற வலுவான தலைமை இல்லாத சூழலில் தி.மு.க எதிர்ப்பு வாக்குகளைப் பெறுவதன் மூலம் தன்னைத் தமிழக அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தியாக நிலைநிறுத்தப் பார்க்கிறது பா.ஜ.க. அதற்கு எம்.ஜி.ஆர் பிம்பம் உதவும் என்று நம்புகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அவரைப் புகழ்ந்து எழுதியது ஆர்.எஸ்.எஸ் இதழான ‘ஆர்கனைசர்’ என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே, மோடியும் எம்.ஜி.ஆர் வேடம் போடத் தயாராகிவிட்டார். எந்த கெட்டப்புக்கு மாறுவதும் அவருக்குக் கைவந்த கலை ஆயிற்றே!

எம்.ஜி.ஆருக்கான மவுசு குறையாததற்குக் கோயில் திருவிழாக்களில், கலைநிகழ்ச்சிகளில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உலவும் விதவிதமான எம்.ஜி.ஆர்கள் சாட்சி.

2021 சட்டமன்றத் தேர்தல் களத்திலும் கறுப்பு எம்.ஜி.ஆர், குழப்ப எம்.ஜி.ஆர், காவி எம்.ஜி.ஆர், ‘இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை’ எம்.ஜி.ஆர் என்று ஏராளமான எம்.ஜி.ஆர்கள் களமிறங்குகிறார்கள். ‘எந்த எம்.ஜி.ஆர் மன்னன் ஆவார், எந்த எம்.ஜி.ஆர் நாடோடி ஆவார்’ என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

– சுகுணா திவாகர் (Vikadan)

Leave A Reply

Your email address will not be published.